சொல்லத்தான் நினைக்கிறேன்

வாக்குறுதிகள்
உற்பத்தி செய்யும்
வானரத் தொழிற்சாலை.

ஊழல்கள் ஊற்றெடுக்கும்
நயவஞ்சக மலைகள்.

நிறைவேற்றாமைகளின்
நிரந்தர வதிவிடம்

அபகரிப்பின் கண்களால்
தேசத்தை நோக்கும்
ராஜாளிகள்.

இருகால் பச்சோந்திகள்

மனுஷத்தோல் போர்த்திய
முதலைகள்.

அரிதாரம் பூசாமல்
மேடையிலும் எவர்
பாடையிலும் நடிக்கும்
நடிப்புச் சக்கரவர்த்திகள்.

உண்மையை பொய்யாகவும்
பொய்யை உண்மையாகவும்
மாற்றிக் காட்டும்
மந்திரவாதிகள்.

நரிகளையும் ஏமாற்றும்
தந்திரசாலிகள்.

முதலீடு இல்லாமல்
ஆதாயம் பார்க்கும்
முதலாளிகள்.

சுதந்திரமயபடுத்தப்பட்ட
தேசிய குற்றவாளிகள்.

சுருட்டுவதை
சொந்த தேச வங்கிகளில்
போட்டுவைக்க இடமின்றி
சுவிஸ் வங்கி நாடும்
சொகுசுகள்.

கட்டுப் பணம் கட்டி
கட்டுக்கடங்காப் பணக்
கட்டுக்களை மூட்டை கட்டி
பணக்கட்டில்களில் தூங்கும்
கவலை இல்லாதவர்கள்

பொது மக்கள்
முகம் பார்க்கும்
தேசத்தின் கண்ணாடி
தம் மக்கள்
நலம் மட்டும் நோக்கும்
மோசத்தின் முன்னோடி.

வாக்கு மலர்கள் தூவி
அர்ச்சிக்கப்பட்ட தெய்வங்கள்.
தெய்வங்களானதால்
கல்லாகி சமைந்த சாபங்கள்.

பிடிக்காத போதும்
பிள்ளைக் குட்டிகளுக்காக
அனுசரித்துப் போகும்
அப்பாவிக் கணவர்களாக
பிடிக்காத போதும் அதே
பிள்ளைக் குட்டிக்
குடும்பங்களுக்காக
அழுதழுது வாழும் நாமறிந்த
இவர்கள்
யாரெண்டு நானும்
சொல்லத்தான் நினைக்கிறேன்

சொன்னால்
நானும் நாளையிங்கு
வாழ்வேனோ யோசிக்கிறேன்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (5-Mar-14, 2:11 am)
பார்வை : 81

மேலே