ஏழையின் சிரிப்பில்

தள்ளாடும் வயது ...
நரைத்திருந்த தலைமுடி ...
அடர்ந்திருந்த வெள்ளை தாடி ...
கையில் கோல் ஊன்றி ,
கண்களை சுருக்கி ..
வீட்டிற்க்குள் எட்டி பார்த்தார் ....
அந்த கிழவன் !

"அம்மா ... ஐயா..."
என்றொரு கனீர் குரல்!
பார்த்தவுடனே மறைந்து கொண்டேன்!

ஏன் அப்படி செய்தேன் ...?

இரப்பவர்களை கண்டுகொள்ளாமல் போவது
நமது உயிருக்குள்
ஊன்றி போய்விட்டதா ?
உதவும் எண்ணம் ஊனமாகிவிட்டதா ?

"ஐயோ பாவம் " என்று
மனது சொல்ல ,
அதை கடந்து போவோம் என்று
புத்தி சொல்ல !

மனிதம் மறந்து
இரக்கம் இறந்து
இந்த தந்திர உலகில்
நானும் ஓர் எந்திரமானேன்!

அந்த ஏழை கிழவனின் கண்களின் வழியே...
இந்த சிறைஉலகை ஒரு கணம்
உற்று பார்த்தேன் !

அறுவறுப்புடன் வெறுக்கும் விழிகள்...
தொல்லை என தூற்றும் மொழிகள்...

அந்த கண்களுக்கு
இந்த கருணை இல்லாத உலகம் ,
நிச்சயம் ஒரு
சிறைச்சாலை தான் !

ஓய்ந்து போய் உட்கார இப்போது
வீடுகளில் திண்ணையும் இல்லை!

உணவு கிடைக்காத போது
உதவி செய்ய ,
தெருக்குழாய்களும் இல்லை!
இருந்தாலும் ...
கழிவு நீர் கலக்காமல் வருவதில்லை!

பாக்கெட்டிலும் பாட்டலிலும் நிறைந்திருக்கும்
இந்த நீர் ,
நம் கண்களில் இல்லாமல் போனது ஏனோ?

கண்டுபிடித்து தாருங்கள்
காணமல் போய்விட்டது ,
மக்கள் மனதில் ஈரம் !

ஆம்...
மனிதத்தை கொன்றுவிட்டோம் !
வெகுதூரம் சென்றுவிட்டோம் !

என்று எல்லாம் எண்ணியபடி
ஒளிந்தே இருந்தேன்!

எண்ண அலைகள் எழுந்து
வேகமாய் மோதி கொண்டிருந்தது !
என் "இதய பாறையில்" !

"கொஞ்சம் நில்லுங்க !"
என் அம்மாவின் குரல்!
சுயநினைவை அடைந்தேன்!

ஒரு பாத்திரத்தை எடுத்துச்சென்று
அந்த கிழவனுக்கு
அன்னமிட்டாள் என் அன்னை!

விரிசல் விட்ட நிலத்தில்
விழுந்த மழை நீராய்!
இல்லை உதிர்ந்த மரத்தில்
பூத்த முதல் தளிராய் !

அவர் முகத்தில் பூத்தது
அந்த சின்ன புன்னகை!

அது...
உள்ளுக்குள் சென்று ...
ஒரு உலுக்கு உலுக்க
சிலிர்த்து போனேன்!

ஆம்...
அந்த இறைவனை கண்டேன்..
அந்த சிரிப்பில்!

================================================
இவன் ,
நிலவின் நண்பன்!

எழுதியவர் : நிலவின் நண்பன் (சிவகிரிதர (6-Mar-14, 5:07 pm)
பார்வை : 257

மேலே