எதுவும் எப்படியும் நடக்கும்

' இங்க பாருங்க மிஸ்டர் பாண்டியன், அவன் இனிமேலும் இந்த உலகத்தில் இருந்தால் , நான் இல்லாமல் போயிடுவேன்'
'அது எப்படிங்க... அவன் வெறும் கொசு'
'கொசு உருவத்துல சிறிசுதான்... ஆனா கடிச்சுதுன்னா பல வியாதிகள் வந்துடும். அதனால அதை உயிரோடு அழிப்பது தான் சிறந்தது.புரிஞ்சுக்கோங்க மிஸ்டர் பாண்டியன்'
'அதுக்காக அதைத் தேடிப் போய்த்தான் அழிக்கணுமா?'
'ஆமாம் மிஸ்டர் பாண்டியன். தேடிப்போய் அழிப்பிங்களோ இல்லை வர வைத்து அழிப்பிங்களோ? அதைப் பற்றிக் கவலை இல்லை. மொத்தத்துல அவன் ஒழியணும். அப்பந்தான் எனக்கு நிம்மதி'
'அது எப்படிங்க சாத்தியப்படும்?'
'அதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டேன். இல்லாட்டி நானே பார்த்துக்க மாட்டேனா?'
'சரிங்க! இதுல நான் என்ன செய்ய
முடியுமுன்னு நினைக்கிறீங்க? இல்ல நான் எப்படி செயல் படணுமுன்னு .எண்ணுறீங்க...'
'உங்களான முடியும் மிஸ்டர். நிறைய முடியும். அதுவும் இந்தக் காலக்கட்டத்துல தான் முடியணும்.'
என்ன சொல்கிறார் , என்பது புரியாமல் , விழித்துக் கொண்டு இருந்தார் பாண்டியன்
'இங்க பாருங்க ..இப்போ காவல் துறைக்கு நிறைய அதிகாரங்கள் தரப்பட்டு உள்ளன. காவல் துறை எந்தத் தவறைச் செய்தாலும் அது அரசுக்குச் சாதகமாக இருக்கும் பட்சத்தில் அதை மூடி மறைக்க , அரசாங்கத்தால் முடியும். ஏன்னா இன்றைக்கு அரசாங்கமே காவல் துறையினை நம்பித் தான் இயங்கிக் கொண்டு இருக்கிறது.இது நாடறிந்த ஒன்றுதானே? எனவே நீங்க தான் ஒரு நல்ல வழி கண்டு பிிடித்துச் செயல்படுத்தணும்.நல்ல திட்டம் ஒண்ணு போட்டு எடுத்துட்டு வாங்க. நாம ஆலோசனை செய்வோம். முதல் தவணையா இந்தப் பெட்டியை எடுத்துக்கோங்க.' என்று மேஜையில் இருந்த பெட்டியை அவர் பக்கமாகத் தள்ளினார்.
'பெட்டியைத் திறந்து பார்த்த பாண்டியன் 'இவ்வளவா?' என்றார்.
'அதான் சொன்னேனே இது முதல் தவணைன்னு .காரியத்தை முடிச்சுட்டு வாங்க, உங்களை எங்கேயோ கொண்டு போய் விட்டுடுறேன்'
பெட்டியை எடுத்துக் கொண்ட பாண்டியன் ' இன்னும் ஒரு வாரத்தில் உங்களைத் திரும்பவும் வந்து பார்க்கிறேன் ' என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.
தொடரும்....
.************* 10-02-2014
'நீங்க கண்டிப்பா சென்னைக்குப் போய்தான் ஆகணுமா?'
'ஆமாம். இல்லைன்னா கைககு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும்'
'அது எப்படிங்க.. நாமதான் எல்லா இடைத்தேர்தலுக்கும் ,ஆளும் கட்சிக்குக் கணிசமான தொகையை நன்கொடையாகக் கொடுத்திருக்கிறோமே? அதுவுமில்லாம எப்போ எந்த உதவி கேட்டாலும் செய்றோமுன்னு வாக்குக் கொடுத்து இருக்கோமில்லா..'
'நாக்குல நரம்பே இல்லாதவங்க இந்த அரசியல் வாதிங்க. நேரத்திற்குத் தக்கபடி செயல் படுறவங்க இவங்க ..நம்ம பணத்துக்கு நன்றி உடையவர்களாக இருப்பாங்கன்னு நினைக்க முடியாது. எனவே நாம மெத்தனமாக இருக்க முடியாது.நாம செய்ய வேண்டிய முயற்சிகளை நாம கண்டிப்பாகச் செய்துதான் ஆகணும்.. மணி கிட்ட சொல்லி ஏ.சி யில இரண்டு டிக்கட் புக் பண்ணச் சொல்லு...'
'சரிங்க.. எந்தத் தேதிக்குன்னு சொன்னீங்கின்னா...'
'எந்தத் தேதிக்கு டிக்கட் இருக்குதோ.. அந்தத் தேதிக்குப் புக் பண்ணச் சொல்லு...'
'சரிங்க ' என்றவன் கிளம்பி விட்டான்.
*******
ஏதோ சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்த வேலாயுதத்தை அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது. என்ன என்பது போல் திரும்பிப் பார்த்தார்.
'ஐயா ! பக்கத்து ஊருல நம்ம சாதி ஆளுங்க ரொம்ப துன்பப் படுறாங்க..இந்த அமைச்சரோட தூண்டுதல் தான் இதற்கெல்லாம் காரணமுன்னு பேசிங்கிறாங்க. நிறையப் பொய் புகார் கொடுத்ததுல நம்ப சனங்க நிறையப் பேர் இப்போ சிறையில விசாரணைக் கைதியா இரு்க்காங்க.. நம்ப சாதி மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாம சங்கடப்பட்டுக் கொண்டு இருக்காங்க..' என்றது அந்தக் குரல்.
'அப்படியா ? நானும் கேள்விப் பட்டேன்.கவலைப்படாமல் போங்க.நான் இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கிறேன்.' என்று ஆறுதலாகச் சொன்னார் வேலாயுதம்.
'சரிங்கய்யா ...உங்களைத்தான் மலையா நம்பிக்கிட்டு இருக்காங்க...'என்று கூறிவிட்டுக் கிளம்பி விட்டார்.
அங்கும் இங்கும் யோசனைப் பண்ணிக்கொண்டே நடந்தார் வேலாயுதம். சிறிது நேர யோசனைக்குப் பின் தன் செல்லை எடுத்து எண்களை அழுத்தினார்.
'வணக்கம் ! யாரு டி.எஸ்.பி சுந்தரா? அமாம் நம்ப பக்கத்து ஊருல என்ன பிரச்சனை?... சின்னச் சின்ன பிரச்சனைகளைப் பெரிது படுத்துறாங்களா?... எதுக்காக அப்படிச் செய்யுறாங்க? ,, இதுக்கு உடந்தையாக யாரு இருக்கிறாங்க... என்னது அமைச்சரா ? ... என் செல்வாக்கைக் குறைப்பதற்காக இந்த மாதிரி.... சாதி பிரச்சனையைத் தூண்டி விடுகிறாரா? சரி! சரி! பொய் கேஸ்ல இருக்கிறவங்களைக் கொஞ்சம் பார்த்து வெளியே விடுங்க.. மீதியை நான் பார்த்துக்கிறேன்...' பேசிவிட்டு செல்லை , தனது ஜிப்பா பைக்குள் வைத்துக் கொண்டார்.
************
'என்ன மிஸ்டர் பாண்டியன் திட்டம் ரெடியா?'
'அந்த ஆளோட சரித்திரத்தை அலசிப் பார்த்துட்டேன். அவர் பேர்ல நிறைய குற்றங்கள் பதிவு ஆகி இருக்குது.ஆனால் உண்மையிலே அவை எல்லாம் பொய்யானவைகள் தான்.இருந்தாலும் அவைகளை நமக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம். இன்னொரு செய்தி..'
'சொல்லுங்க மிஸ்டர் '
'அவருக்கு உங்க ஆளும் கட்சிக் அமைச்சர்களிடம் நல்ல செல்வாக்கு இருக்கு.. எதையும் சாதிக்கக் கூடியவர்தான். தன்னுடைய சாதிக்காரங்களுக்காக நிறைய செய்து இருக்கிறார்.அதனால நிறைய கொலை வழக்குகளில் அவர் பெயரும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன..' என்றார் பாண்டியன்.
'இதையெல்லாம் தெரிந்துகிட்டு என்ன செய்யப்போறீங்க மிஸ்டர் பாண்டியன்?'
'அதையெல்லாம இப்போ சொல் மாட்டேன்.ஆனால் கிடைக்கப் போற பலனை மட்டும் காத்திருந்து பாருங்க.' என்றார் பாண்டியன்.
'சரி! சரி ! என்ன வேணுமின்னாலும் பண்ணுங்க.. என் பெயர் மட்டும் எங்கும் வந்துவிடக்கூடாது.'
"அதை நான் பார்த்துக்கிடுறேன். ஆனா மேலிடத்துல ஏதாவது சொல்லி சமாதானப் படுதிக்க வேண்டியுது உங்க பொறுப்பு. ஏன்னா பின்னாடி விசாரணை அது இதுன்னு வரும்.என்னைத் தற்காலிக வேலை நீக்கம் செய்வாங்க..அப்போ நீங்கதான் கைகொடுக்கணும்.இல்லாட்டி என் பாடு திண்டாட்ட மாகிவிடும் ' என்று தனக்கு வரவிருக்கும் இன்னலைக் கோடிட்டுக் காட்டினார் பாண்டியன்.
'அதையெல்லாம் நான் பார்த்துக்கிடுறேன், நீங்க வேலையை முடிச்சுட்டு வாங்க..'
'சரி ! நான் வர்றேன். மீதியை செய்தித் தாளைப் பார்த்துத் தெரிஞ்ணுக்கோங்க..' என்று சொல்லி விட்டு பாண்டியன் கிளம்பி விட்டார்.
உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சித் துள்ளல் பிறந்தாலும், அதோடு சொல்லிவிட்டோம், பிரச்சனையை எப்படிச் சமாளிக்கப் போகிறோம் என்ற அச்சமும் கூடவே எழுந்து, அவரது உள்ளத்தைக் குடையத் தொடங்கியது.
***************
'ஐயா ! உங்க முயற்சியால நம்ம ஆளுங்களை எல்லாம் வெளியே விட்டுட்டாங்க ..உண்மையான குற்றவாளிகளை உள்ளே பிடித்துப் போட்டுட்டாங்க...'
'சரி ! சரி ! இனிமேலாவது எச்சரிக்கையாக இருந்துக்கோங்க...'
'ஐயா! நம்ம ஆளுங்க உங்களைத் தான் தங்களைக் காக்க வந்த தெய்வமா நினைக்கிறாங்க..'
'நம்ம ஆளுங்களை வம்பு ,தும்புல மாட்டிக்காம ஒதுங்கி இருக்கச் சொல்லுங்க.. மற்றப் படி ஏதாவது அக்கிரமாக நடந்தா நான் பார்த்துக்கிடுறேன். போய் வாங்க..'
வந்தவர் சென்று விட ,நாற்காலியில் அமர்ந்தார் வேலாயுதம்.
'ஐயா ! டிக்கட் ரெடியாயிது. இரவு எட்டு மணிக்கு வண்டி,' என்றான் மணி.
'சரி! பிரயாணத்துக்கு வேண்டியவற்றை எடுத்து வைக்கச் சொல்லு. எப்படியும் ஒரு மூன்று நாள் தங்க வேண்டி இருக்குமுன்னு சொல்லிடு. சென்னைக்குப் போன் போட்டு, ரூம் போடச் சொல்லு..அதோட வண்டியும் ஏற்பாடு செய்யச் சொல்லிடு'
'சரிங்க..' என்று சொல்லி விட்டு, பயண ஏற்பாடுகளைக் கவனிக்கச் சென்றுவிட்டான் மணி.
****************
சென்னைக்கு வந்த வேலாயுதம், தான் ஏற்கெனவே வகுத்துக் கொண்ட திட்டப்படி , பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து விட்டு இரவு 11 மணிக்குப் படுக்கையில் வந்து படுத்தவர் தான்.
'டொக்..டொக் ' என்று கதவு தட்டப்படும் சத்தமும்,அழைப்பு மணி அடிக்கப்படும் சத்தமும் கேட்டுக் கண்விழித்தார். மணியைப் பார்த்தார். கடிகாரம் 4.10 என்று காட்டியது. அசதியில் தூங்கியதால், கண்ணைக் கூட திறக்கச் சிரமமாக இருந்தது. அறையில் கீழே பாயைப் போட்டுப் படுத்திருந்த பாலாவை எழுப்பினார்.
'பாலு ! யாரோ கதவைத் தட்டுறாங்க.. யாருன்னு போய் பார்?' என்றார்.
பாலு எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டே போய், கதவின் தாழ்பாளை மெல்ல விலக்கினான். சரியாகத் திறக்கக் கூட வில்லை.அதற்குள் நாலைந்து காக்கிச் சட்டைகள், கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
'யாரு நீங்க.. என்ன வேணும்?' என்று கேட்ட பாலுவின் குரல் காற்றில் கரைந்தது . அதே நேரம் அவர்கள் கையில் இருந்த துப்பாக்கிகளில் இருந்து , பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள் பாலுவின் நெஞ்சைத் துளைத்தன.
'அம்மா ' என்னும் அலறலோடு தரையில் சாய்ந்தான்.
அதற்குள் காக்கிச் சட்டைகள் , வேலாயுதத்தின் கட்டிலை நெருங்கின.
ஒரு காக்கிச் சட்டையின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்த துப்பாக்கித் குண்டு ஒன்று, இன்னொரு காக்கிச் சட்டையின் கையில் பாய்ந்தது.. அப்போது ' சுட்டுத்தள்ளு ' என்னும் குரல் , அதிகாரமாக ஒலித்தது. 'பட பட ' வென துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்க, வேலாயுதம் இரத்த வெள்ளத்தில் மிதந்தார்.அவர் உயிர் மெதுவாக உடலைவிட்டு விலகிக் கொண்டு இருந்தது.
************
'பேப்பரைப் பார்த்திங்களா ?' என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் பாண்டியன்.
'வெல்டன் மிஸ்டர் பாண்டியன். வெல்டன் !. கச்சிதமாக முடிச்சிட்டீங்க.. யாராலும் தன்னை ஒண்ணும் செய்ய முடியாதுன்னு மார்தட்டியவன், இன்று மாய்ந்து விட்டான் ' என்றவர் ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
தயாராக இருந்த சூட்கேஸை எடுத்துக் கொண்டு பாண்டியன் புறப்பட்டுச் சென்றார்.
****** முற்றும்........

..

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (6-Mar-14, 8:20 pm)
பார்வை : 330

மேலே