ஆறு விரல் --- அதிர்ஷ்டம்

அவன் ஆற்று நீரில் மூழ்கி எழுந்தான்.
கரேலென்ற தலைமுடி மூக்கு வரை மூடிக்கொண்டு இருந்தது. பருத்த இதழ் வழியே வழிந்த நீர் வடிந்து முடிந்தது. அவனது சிவந்த தாடையில் கருப்புப் பாசி பிடித்தது போல் குறுகுறுவென இரு நாள் தாடி. முகத்திரை போலிருந்த தலை முடியை இருகைகளாலும் பின்னோக்கி நீவினான். இடதும் வலதுமாக ஓர் உதறு. தனது தலையை நாய் உடம்பை உலுக்குவது போல் உலுக்கினான். நீர்த்திவலைகள் தெறித்து விழ ஆங்காங்கே ஒட்டியிருந்த ஒன்றிரண்டு துளிகளில் நீலமும் மஞ்சளுமாக சூரியன் ஒளிர்ந்தது. நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. தனது சோகத்தையெல்லாம் குளித்துக் கழுவி விட்டவன் போல் இதயத்தை அடைத்துக் கொண்டிருந்த கவலையை தூக்கி வெளியே எறிவது போல் நீரின் மேல் காறி உமிழ்ந்தான்.

. ‘தளக்’ ‘தளக்’ என எட்டி நடை போட்டு ஆற்றின் கரை நோக்கி நடந்தான். ‘கரை ஏறிவிட்டோம்’ என்ற| தெம்பில் தனது ஆறு அடி உயர உடம்பை நிமிர்த்தி நடக்கலானான். எங்கிருந்தோ வந்த காவல் துறை வீரர்கள் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்த செம்மண் சாலையில் அவனை ஏற்றிக் கொண்டு அந்த “காவல்” வாகனம்
சீறி ஓடியதில் ஒரு புழுதிப் புயல் கிளம்பி அந்த வாகனத்தை பார்வையிலிருந்து மறைத்தது.

ஆறுமுகம் என யாரும் அவனை சாதாரணமாக சொல்ல மாட்டார்கள். “ஆறுவிரல் ஆறுமுகம்”: என்பதே அவனுக்கு நிலைத்து விட்ட பெயர். அவன் பிறந்தபோதே இருந்த அந்த ஆறாம் விரல் அதிர்ஷ்டம் என்றார்கள். அதிர்ஷ்டசாலி எனச் சொல்லி சொல்லியே தாத்தாவும் பாட்டியும் அவன் தாயும் மிகச் செல்லமாக வளர்த்தார்கள். பள்ளிப் படிப்பு, மூன்றாண்டு பட்டப் படிப்பு என முடித்தான். அரசு பணி என “உதவியாளர்” ஆக நியமிக்கப் பட்டான். ஆனால் ஆபீசர் எனச் சொல்லி அவனை
தோட்டம் தொறவுடன் மயில் போலிருந்த அன்னத்தை கட்டி வைத்தனர். அன்னமும் வெள்ளிக் கிண்ணம் போல் இரு பெண்களைப் பெற்றெடுத்தாள். இரட்டையர்கள் யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் என ஆறுமுகத்தின் தாய் கூறினாள். பிரசவம் முடிந்து வீடு திரும்பிய அன்னத்திற்கு தன் கணவன் சாதாரண உதவியாளர்தான் என்பது ஒருவழியாய் தெரிந்து விட்டது. பிள்ளைகட்கு தன் மாமியார் ஒரு கிராம் நகை கூட போடவில்லை என்பதால் அவர் தன்னை ஏமாற்றி விட்டார் என மாமியாருடன் சண்டை போட்டாள்.

“கரிச்சாங்குருவி மாதிரி இருக்கே. உனக்கு ஆபீசர் மாப்பிள்ளை கேட்குதோ? மாமியாரின் இந்தக் கேள்வி அந்தக் கரிச்சாங்குருவியை தன் அம்மா
வீடு நோக்கிப் பறக்கச் செய்தது.

அன்னம் ஊருக்குப் போய் ஆறு மாதம் ஆகி விட்டது.. தன்னை மதிக்காதவள் தேவையில்லை என ஆறுமுகம் சட்டை செய்யவில்லை. அவனது தாய் மட்டும் தவறு செய்து விட்டோம் எனப் புழுங்கினாள்.

பேரக் குழந்தைகளைப் பார்க்கும் ஆசையில் ஜாடை மாடையாக அன்னத்தின் வீட்டிற்கு தூது விட்டாள். அன்னமும் மாமியார் வந்து மன்னிப்பு கேட்காமல் திரும்பிச் செல்வதாக இல்லை என வீம்பாக பேசி விட்டாள். அத்தோடு நின்றிருக்கலாம்.

“பெரிய அழகியா அவள்? அவ கைல ஆறு விரல் பத்தாதுன்னு அவ புள்ள கைலயும் ஆறு விரல், ஆறு விரல் குடும்பம் யார் கிட்ட ஏகத்தாளம் பேசுது?” என அன்னத்தின் தாயர் தன் சம்மந்தியை சகட்டு மேனிக்குத் திட்டினாள். “வெறும் பய மக, தோட்டம் தொறவு வேணுமின்னு கலியாணங்கி|ற பேர்ல கொள்ளை அடிச்சிட்டுப் போய்ட்டாள். அவன் க்ளார்க்காதான் இருக்கானோ, ப்யூனா இருக்கானொ. இந்த கூறு கெட்ட மனுஷந்தான் பெரிய மாப்பிள்ளைன்னு ஒத்தக் கால்ல நின்னார்.
தனது அருமைப் பெண் வாழா வெட்டியாக வந்ததற்கு தன் கணவனே காரணம் என அப்பாவிப் புருஷனை தப்புத் தப்பெனத் தப்பினாள்.

விளையாட்டாக ஒரு வருடம் ஓடிப் போய்விட்டது. காசுதான் பதவிதான் தன் மனைவியை பிரித்தது என்பதால் ஆறுமுகம் பணம் சம்பாதிப்பதில் வெறி கொண்டான். சேம நல நிதி முன் பணம் பெற்று ஐந்து வட்டிக்கு விட்டான். கோப்புகளில் தில்லு முல்லு செய்து தினம் ஆயிரம் ரூபாய் இல்லாமல் வீடு திரும்ப மாட்டான். பக்கத்து கிராமங்களில் நிலம் நீச்சு என வாங்கிப் போட்டான். தில்லு முல்லு அம்பலமானபோது பெண் மேலதிகாரிக்கு கப்பம் கட்டினான். காசைக் கொட்டினான். ஆசைக்கு இணங்கினாண். அன்னமாவது கிண்ணமாவது. கெடக்கட்டும் கழுதை என்ற போக்கில் மைனர் போல் சுற்றி வந்தான்.

காசு விளையாடியதில் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பதவி உயர்வும் பெற்றான். அவன் புதிதாக வாங்கியிருந்த மோட்டார் சைக்கிளை உதைக்கும் போது அவனது மாமனார் அவனது காலைப் பிடித்து நிற்பதைப் பார்த்தான். “ஐயய்யோ, ஏந்திருங்க மாமா” என்றான். அவரை வண்டியில் அமர்த்திக் கொண்டு ஓட்டலுக்குப் போனான். செல்போனை மாமனார் பார்க்கும்படி விரித்து ஆபீசுக்கு விடுமுறை அனுமதி கேட்டான். மாலை வந்து ஊருக்குப் போகலாம் என உறுதி கூறினான். அப்பாவி அய்யாக்கண்ணு அழுகையும் சிரிப்புமாக நம்பி பஸ் ஏறினார்.

ஒரு மாதம் ஆகியும் மாப்பிள்ளை வராததால் அய்யாக் கண்ணூ பதைபதைத்தார்.
மகள் வாழ்வில் நெருப்பை அள்ளிக் கொட்டி விட்டேனே என அழுதார். அன்று பிரதோஷம். அன்னமும் அவள் அம்மாவும் கோவிலுக்குச் சென்றிருந்தனர். சமைத்தது அத்தனையும் தொடாமல் இருந்தது. பிற்பகல் 4.00 மணிக்கு அய்யாக்கண்ணு வீட்டுக் கூரையில் தூக்கு மாட்டிக் கொண்டார். ஆறுமுகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. குற்ற உணர்வில் அவன் போகவில்லை. அவனது செல் போன் அடித்தால் ‘யார் எனக் கேளு’ என அடுத்தவரிடம் கொடுத்துக் கேட்கச் செய்வான். அன்னம் என்ற பெயரக் கேட்டவுடன் இல்லை எனக் கையை ஆட்டி சொல்லச் சொல்வான். அன்னமும் விடாமல் தினமும் போன் செய்வாள்,

(வளரும்)

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (7-Mar-14, 5:01 pm)
பார்வை : 300

மேலே