ஓடிக்கொண்டே இருக்கிறேன்

ஓடிக்கொண்டே இருக்கிறேன்...
08 / 07 / 2025

அனுபவங்கள்
என் எதிர்மறைகளை
எடுத்துக் காட்டி
எள்ளி நகையாடின.
என் ஏமாற்றங்களை
சுட்டிக் காட்டி
ஏளனம் செய்தன.
என் கையாலாகாததனத்தை
கண்கொட்டாமல் பார்த்து
கைகொட்டிச் சிரித்தன.
அனுபவம் தந்த
பாடத்தை படித்து
புரிந்து கொள்வதற்குள்
அடுத்த
அனுபவம் வந்து
எல்லாவற்றையும்
புரட்டிப் போட்டு விடுகின்றன.
அனுபவங்கள் தருவது
அறிவு முதிர்ச்சிதான்.
அந்த முதிர்ச்சிக்குள்
எத்தனையெத்தனை
மர்ம முடிச்சுகள்.
ஒரு முடிச்சை அவிழ்த்தால்
அடுத்த முடிச்சு.
ஒன்றுக்குள் ஒன்று
இல்லையெனில்
புதிதாய் மற்றொன்று.
வாழ்நாள் முழுதும்
ஒவ்வொரு அடியும்
ஒவ்வொரு அனுபவம்
ஒவ்வொரு அனுபவமும்
ஒவ்வொரு பாடம்.
இதுவும் ஒரு
'நீட்' தேர்வுதான்.
தெரிவுவிடை வினாக்கள்தான்..
விடை காண்பது
பெரிய சவால்தான்.
நேர்மறை மதிப்பெண்கள்
பரவாயில்லை.
எதிர்மறை மதிப்பெண்கள்
பெரிய தொல்லை.
நினைக்கும் அல்லது
விரும்பும் வாழ்வு
கிடைக்குமா?
"கோடி ரூபாய் கேள்வி?"
தேடி ஓடிக்கொண்டே
இருக்கிறேன்.

எழுதியவர் : ஜீவன் ( மகேந்திரன் ) (8-Jul-25, 7:14 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 64

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே