முன்னந்தி அல்குண் டடங்கல் வழி - ஆசாரக் கோவை 29

இன்னிசைச் சிந்தியல் வெண்பா

அந்திப் பொழுது கிடவார் நடவாரே
உண்ணார் வெகுளார் விளக்கிகழார் முன்னந்தி
அல்குண் டடங்கல் வழி! 29

- ஆசாரக் கோவை

பொருளுரை:

மாலைப்பொழுதில் படுத்துத் தூங்கார், வழிநடந்து செல்லார், உண்ணமாட்டார், ஒருவரைச் சீறார், மாலையின் முற்பொழுது விளக்கு இகழாமல் ஏற்றுவர், இரவில் உண்டு (புறம் போகாது ஓரிடத்திலே) அடங்குதல் நெறியாகும்

கருத்துரை:

மாலைப்பொழுதில் படுத்தல் வழிநடத்தல் செய்யாதும், உண்ணாமலும் எவரையும் சீறாதும், விளக்ககேற்றி இரவானதும் உண்டு அடங்கியிருத்தல் முறை!

அந்திமுன் எனக் கொண்டு அந்தியில் என்றுங் கூறலாம்;

விளக்கிகழார் என்பதற்குத் தீபத்தைக் கண்ட போது பழிக்காமல் தொழவேண்டும்!

அந்தி = சுருங்கிய பகலின் முடிவு, அஃதாவது பகலொடு இரவின் சேர்க்கை நாளந்தி, முந்திய நாளொடு பிந்திய நாளின் சேர்க்கை! அந்திப்பொழுதிற்கிடவார்' என்றும் பாடம்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Sep-25, 9:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே