அலைTHE WAVE
பூமியின் இதயத்தில்
அதிர்ச்சி யொன்று வந்தது
கடற் கரைகளெல்லாம்
காணமல் போனது.
அமைதி தேவதை
அரக்கியாய் ஆனது
அலையாய் வந்து
வாழ்வழித்துப் போகுது.
குடும்பத்தின் வருமைஎல்லாம்
கரையுமென்று கடலுக்குள் சென்றவன்
கரை வந்து சேர்கையிலே
பணத்திற்கு முன்-குடும்பத்தின்
பிணம் பார்க்க வைத்துவிட்டாளே
கருணைக் கடலரசி.
காலம் காலமாய் கொடுத்து வந்தால்
காரணம் எதுவும் சொல்லவில்லை
'கடல் கொடுக்கிறது
வாழ்வை வளர்க்கிறது' என்று
கடவுளாய்க் கும்பிட்டோம்.
அனால் இன்று
வட்டிக்கடைக்காரன் போல் மொத்தமாய்
வாரிக்கொண்டு போகிறாளே
பொருளோடு நில்லாது உயிரையும் சேர்த்து.
இறுக்கங்கள் குறைந்து
இன்பமாய் இருக்க
கடற்கரை தேடிவந்த கூட்டமெலாம்,
பிஞ்சுக் குழந்தைகளெலாம்,
வலையில் சிக்கிய மீன்களைப்போல்
அலையில் சிக்கி
பிணக் குவியலாய் கிடக்கின்றதே
இதைக் கண்டு
எமனின் கண்களிலும்
கண்ணீர் வழிகின்றதே.
இதோ தேங்கி நிற்கின்றதே
இவை அழிக்க வந்த
அலை விட்டுச் சென்ற தண்ணீரா?
இல்லை உறவினரை
இழந்தவர் சிந்திய கண்ணீரா?
பணக்காரர்களும் ஏழையாய்
அனாதையாய் ஆனார்கள்
மேதைகளும் இக்கொடுமைகண்டு
பைதியமாய்ப் போனார்கள்.
மாறாமல் மிஞ்சியது
வழக்கமான கடல் அலையும்
அழிவிலும் அசையாது நிற்கும்
வள்ளுவன் சிலையும் தான்.
போர்களையும் பார்த்திடுவோம்
குண்டுகளையும் நெஞ்சில் தாங்கிடுவோம்;
ஆனால்,
சோறு போட்ட தாயே-எம்மைக்
கூறு போடும் போது
யாம் என் செய?