முதல் பிரிவு

அந்த சிறு வயதில்
ஆற்று மணல் வழியில்
மெய் அணைத்து
மெல்ல சிறு கதைகள் சொல்லி
முதல் முதலாய்
என்னை அனுப்பி வைத்தாய் - பால்வாடி

அழுதிருப்பேன் நான்
அந்த முதல் பிரிவினில்..
அணைத்து
ஒரு முத்தமிட்டு அனுப்பிவிட்டு
அமர்ந்திருப்பாய்
அந்த பால்வாடி வாசலிலேயே நீ..!!

ஒவ்வொரு கணமும்
உனக்குள்ளும் எனக்குள்ளும்
பெரும் யுத்தங்கள் நடந்திருக்கும்
சிறு பிரிவினைகூட
வெல்ல முடியாமல்
தோற்று துவண்டு கிடந்திருப்போம்..!!

கொடுத்துவிட்ட
தின்பண்டம்
உண்டுவிட்டேனா
என்ற கவலை உனக்கு

எடுத்து ஊட்ட
என் அன்னை
அருகினில் இல்லை
என்ற கவலை எனக்கு..!!

உலகறிவு
நான் கொள்ள
விளையாடி
படித்திடவேண்டும் என்ற
ஆசை அன்பு இருந்ததினால்
அடக்கிக் கொண்டிருப்பாய் நீ..!!

அது
எதுவுமே புரியாமல்
ஏதோ சில கற்று
ஏக்கம் ஒன்றே நிறையாக
ஏங்கி அழுது கலைதிருப்பேன் நான்..!!

கண்ணீர் உடைத்து
புன்னகை உதிர்த்து
கருவிழி தன்னில் உன்னை நிறைத்து
அம்மா என்று கத்திக்கொண்டு
கைகள் தூக்கி
கால்கள் இரண்டும் சிறகுகளாக்கி
பிரிவினை பிரிந்து
உன்னத உறவினில்
என்னை மறந்து
உன்னை அணைக்கும் தருணம்
அத்தனை அழகும் நீயாக இருந்திருப்பாய்..!!

உன்
சொர்க்கம் சேர்ந்து
கரைந்திருப்பேன் நான்..!!

உயிர்
கிடைத்த பூரிப்பில்
சிலிர்திருப்பாய் நீ..!!

எழுதியவர் : வெ கண்ணன் (18-Mar-14, 2:36 pm)
Tanglish : muthal pirivu
பார்வை : 257

மேலே