சவாரி செல்லும் சபலங்கள்

அவனோடு நின்று இருந்தவர்கள் அவனைப் பார்த்து பொறாமைப் பட்டார்கள். அவன் பெரிய அழகன் அல்ல. ஆயினும் புது நிறம், சுருட்டை முடி, புடைத்த நெற்றி மீது புரண்டு பார்ப்பவரை கவர்ந்து இழுத்தது.. எப்போதும் மந்த காசப் புன்முறுவல் பூக்கும் அவனது கண்கள் சுழலும்போது பெண்கள் –அவன் தன்னைப் பார்க்க மாட்டானா என ஏங்குவது தெரியும்.

அவன் “ராஜாக் கடை” ஸ்டாப்பில் பஸ் ஏறுவான். அதனால் குறும்புக் காரப் பெண்கள் பட்டாளம் அவனுக்கு ராஜா என்றே பெயர் வைத்து இருந்தது. தினந்தொறும் ஒரே நாற்றமடிக்கும் ஜீன்ஸ் என்றில்லாமல் பலப்பல வண்ண ஜீன்ஸ்களில் அவன் நெஞ்சு புடைக்க நடந்து வரும்போது, பல பெண்களின் நெஞ்சம் பெருமூச்சில் விம்முவது காணலாம். அவனைப் பார்த்ததும் மேலாடையை சரி செய்வாள் ஒருத்தி. ஒழுங்காக இருக்கும் மாராப்பை சரி செய்வதுபோல் திறந்து ஒரு பக்கம் மட்டும் இலவச காட்சி தருவாள் மற்றொருத்தி. பாவம். அந்த வயதில் அப்படி ஒரு ஆசை. நமக்கு வேண்டாம் அந்த ஆராய்ச்சி என்பதுபோல் அவன் யாரையும் சட்டை செய்யாமல் பஸ்ஸுக்குள் வந்து, “ஹாய், ஹாய், ஹல்லோ” என பெண்கள் ஆண்கள் என குறைந்தது பத்து பேருக்காவது ஹாய் சொல்வான். இந்த ஹாய் கும்பலில், கலியாணத்திற்கு பெண் வைத்திருக்கும் பெண்டிரும் உண்டு.

அவன் கூட வரும் அவன் வயது ஒத்த இதர ஆண்கள் “விடைக்கோழி” போல் பயந்து பயந்து பார்வையை மேய விட்டு நிற்கும்போது அவன் மட்டும் முன்பின் தெரியாதவர்களிடம் கூட தைரியமாகச் சென்று தன் கைப் புத்தகன்களைக் கொடுப்பதும், கொடுக்கும் சாக்கில் விரல்களைத் தொடுவதும், அந்தப் புத்தகங்களைத் திரும்பித் தரும் சாக்கில் மீளவும் விரல்கள் ஸ்பரிசிப்பதும் தினமும் பஸ்ஸில் நடக்கும் உணர்ச்சிக் கொப்பளிக்கும் நாடகம்.

அவன் பெயர் என்ன எனத் தெரியாவிட்டாலும் பெண்கள் அவனுக்கு வைத்த பெயராகிய ராஜா பொறுத்தமான பெயராகத்தான் இருந்தது. அவனது முகத்தில் மட்டும் என்றில்லாமல் நீளமான கை கால்களிலும் ராஜ களை இருந்தது. ஆயினும், புதிய புதிய உடைகளில் வந்தாலும் செயற்கையான பணக்காரத்தனம் இருந்ததேயொழிய உண்மையில் அவன் பணக்காரனா என பல பெண்களுக்கும் அவன் கேள்விக் குறியாய் இருந்தான்.

அவனது பொருளாதார நிலை எப்படி இருந்தால் எனக்கென்ன. நானும் அதனை சட்டை செய்யாத போது, கல்லூரிப் பெண்கள் இருவர் அவனைப் பற்றிப் பேசுவதை ஒட்டுக் கெட்டேன்.

நீலச் சுடிதார் நீலாக் கண்ணன்(அவளது நோட்டுப் புத்தகத்தில் பெயரைப் பார்த்தேன்) இரண்டுக் கெட்டான் “விமி”யிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“அவன் பெரிய பணக்காரன்னா ஒரு நாள் டூ வீலர், ஒரு நாள் போஃர் வீலர்னு வரமாட்டானா?
ஏன் பஸ்ஸில் வரான்”?
“ நல்ல கேள்விதான். எல்லாம் என்னைப் பார்க்கத்தான்”. அனாவசியமான அதிக பட்ச நம்பிக்கையில் கூறினாள் விமி..
“பாவம்டீ நீ. அவன் ஒரு ப்ளே பாய். நம்ப வயசு பொண்ணுங்க கூடலாம் அவன் பேச மாட்டான். ஆபீஸ் போற லேடீஸ், கலியாணம் ஆனவங்க, அந்த மாதிரி இருந்தாதான் பேசறான், நானும் கவனிச்சுட்டேன்”
” அப்படி எல்லாம் ஒருத்தரை ப்லே பாய்னு எடுத்த எடுப்புல சொல்லுக் கூடாதுடி.(குரலைத் தாழ்த்தி) இதோ நம்ம பக்கத்திலே நின்னுட்டு பேச்சு கேட்டுக்கிட்டு வருதே அது முழி கூட சரி இல்லதான். ஆனால் அது ரொம்ப டீசண்டா பிஹேவ் பண்ணுதே” என்றாள் விமி.

இதற்கு மேலும் அங்கு நிற்கப் பிடிக்காமல் மெதுவாக நான் நகர்ந்து விட்டேன். ஆயினும் அந்த ராஜா –விமி ஜோடியின் ஈர்ப்பு எப்படி பரிணாம வளர்ச்சி அடைகிறது என்பதைக் காண ஆவலாய் இருந்தேன்.

அன்று எனக்கு வேறு அலுவலகத்துக்குச் சென்று சில அவசர வேலைகளை கவனிக்க வேண்டி இருந்தது. வழக்கமாகச் செல்லும் 9.15 மணி பஸ்ஸில் செல்ல முடியவில்லை. ஆயினும் எனது தலைமை அலுவலகம் செல்ல வேண்டுமென்றாலும் அதே பஸ்ஸில்தான் செல்ல வேண்டும். பதினைந்து நாட்கள் இடைவெளிக்குப் பிறகு நான் அன்று மீண்டும் அந்த “ராயல் ரூட்” பஸ்ஸில் ஏறினேன். நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வருவதை பார்த்தும் பாராதது போல் இருந்தனர் சிலர். எனது கண்களோ, ராஜா எங்கே? விமி எங்கே எனத் தேடின. ராஜாக் கடையில் அவன் ஏறவே இல்லை. விமியையும் அந்த பஸ்ஸில் காணோம். நீலாக் கண்ணன் வழக்கம் போல் புதுத் தோழியிடம் பீலா விட்டுக் கொண்டு இருந்தாள்.. தொடர்ந்து ஒருமாதம் இதே நிலை நீடித்தது.

. ஆசிரியர் தினம் வந்தது. இப்படியே ஆசிரியர், மதர், மனைவியர், என தினம் ஒரு தினம் கொண்டாடிக் கடைசியில் “மனிதர் “ தினம் கொண்டாடும் நிலை வந்து விடும் என நான் சிந்தித்துக் கொண்டு இருந்தபோது, எனது காலை மிதித்து விட்டு முன்னேறினாள் விமி. “எருமை மாடு” என உதடு வரை வந்து விட்ட சுடு சொற்களை நாக்கில் நுனியில் நனைத்து சூடாற்றினேன். பாவம் அந்த எருமை மாடு. முகம் வெளிறி, இரத்த சோகை பீடிக்கப் பட்டவள் போல் தூக்கமில்லாமல் பஞ்சடைத்த கண்களுடன், அதனை மை பூசி மறைத்து, அழுது அழுது வீங்கிய இமைகளையும் முகத்தையும் செயற்கையான சிரிப்பில் மறைக்க முயன்று நின்று இருந்தாள்.

அவளை நான் இதற்கு முன்பு பார்த்து இருக்கிறேன். ஆயினும் இவ்வளவு அருகில் பார்க்கும்போது ஆர்ப்பாட்டமில்லாத ஒரு அழகு அவளிடம் அமைதியாக குடிகொண்டிருந்ததை அப்போது காண முடிந்தது.

வான் நீலப் பாவாடையும் கரு நீல தாவணியும் அணிந்து, வான் நீல ரவிக்கைக் கையில் கரு நீல பார்டர் வைத்து, சிக்கெனத் தைத்து, “பமீலா ஆண்டர்சன் லீ”யை ஞாபகப் படுத்தும் உயரமான தூண் போன்ற கால்களும், ரவிக்கைக்குள் அடங்கா மேல் அழகும் “கால தேவன் நித்திரையில் காம தேவன் முத்திரை” எனப் பாட வைக்கும்..

சுழன்று சுழன்று பார்க்கும் அந்த விழிகள் பெரிதும் அல்லாமல் சிறிதும் அல்லாமல் ஆழமான பார்வை உடைய ஒளிக் கிண்ணங்கள். நேருக்கு நேர் பார்த்தால் கிறங்கிப் போய் விடுவோம் எனச் சொல்லும்படி வனப்பும் இளமையும், பச்சரிசிப் பல் சிரிப்பும், அந்த ராஜா கொடுத்து வைத்தவன்தான். தூண்டிலை அவன் போட்டானா? அவள் போட்டாளா? அவள் ஏன் உருக் குலைந்து நிற்கிறாள்.


நான் அவளை அளவெடுப்பதைப் பார்த்த அவள் நன்கு அறிந்தவரைப் பார்த்து புன்னகை செய்வது போல் சிரித்தாள். ஒரு இளம் பெண் சிரித்தால் பதிலுக்கு மரியாதையாக சிரிக்கத் தெரியா விட்டல் அது ஆண்மைக்கு அழகல்ல என்பது எனது வாதம்

அவள் அருகில் வந்தாள். தயங்கி மயங்கி நின்றாள். “அன்கிளிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும், எப்ப பேசலாம்” அவள் என்னிடம் தான் பேசுகிறாள் என்பதே சில நொடிகட்குப் பிறகே எனக்குப் புரிந்தது.

“என்னிடமா?”, ஒரு நிமிடம் நான் ஆடிப் போய் விட்டேன்
“எல்லாம் ஒங்க அண்ணா பையன் பத்தி பேசுறதுக்குதான்”
“சரிம்மா, வீட்டுக்கு வாமமா…வீட்டு அட்ரஸ் இந்த கார்டுல இருக்குது. சாயந்திரம் 7.00 மணிக்கு மேல வர முடியுமா” என்றேன் நான்.

“என்ன அன்கிள், …வீட்டுக்கா…. அங்க ஆண்டி இருப்பாங்களே” கொஞ்சினாள்.

“ஆண்டி ரொம்ப நல்லவள். தப்பா நினைக்க மாட்டா. நீ தைரியமா வாம்மா” பதிலுக்குக் கொஞ்சினேன். (இது தேவையா என மனசாட்சி என்னைக் கிள்ளியது)

“இல்ல அன்கிள், உமன்ஸ் சைக்காலஜி பற்றி எனக்குத் தெரியும். வீட்ல வேண்டாம். இன்னக்கி மத்தியானம் காந்தி சிலை பீச்சுக்கு வாங்க”

“ சரிம்மா. மதியம் ரெண்டரை மணிக்கு வரேன்” என ஏன் கூறினேன் என எனக்கே தெரியவில்லை. நிஜமாகவே எனது அண்ணனின் பையன் இவளை ஏமாற்றி விட்டானா?. அவன் நல்ல பையன் ஆயிற்றெ!. இந்த பொண்ணுக்கு என் மேல் ஒரு கிக்கா. அப்படி ஒன்னும் நான் கிழவன் இல்லியே. ஏன் வீட்டுக்கு வந்து பேச மாட்டெங்குறா. காந்தி சிலை, பீச்னா ரொமான்ஸ்தானே நடக்கும். சீரியஸ் பேச்சு பேச என்னை எதற்கு அங்கு கூப்பிட வேண்டும்?
அன்றைய பகல் முழுவதும் என்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை.

மதியம் சாப்பிட்டுக் கொண்டு இருந்த போது மனைவியிடம் இருந்து செல்லில் அழைப்பு வந்தது.
“ஏங்க, ஒரே மந்தாரமா இருக்கு. பெரிய வேலையும் இல்ல போர் அடிக்குது. ஆபீசுக்கு லீவ் சொல்லி விட்டு வரேன். ஏதாவது சினிமாவுக்குப் போகலாமா?”

“என்னது. உனக்கு வேலை இல்லேன்னா எனக்கு இருக்காதா. அதெல்லாம் முடியாது. நீ வேணும்னா வீட்டுக்குப் போய் படுத்து தூங்கு”

“சரிப்பா, எனக்கு வயசாயிடுச்சு. என்னொட ஆசையை நீங்க காதுல கூட கேட்க மாட்டீங்க
ஒழுங்கா வீடு வந்து சேருங்க. எனக்காக வர வேண்டாம்”. டொக்கென போனை கட் செய்தாள்.

மனைவியை சமாதானப் படுத்துவதா? விமியை சந்தித்து என்ன பேசப் போகிறோம் என்ற நினைவுகளின் போராட்டத்திலும் நான் இராணி மரிக் கல்லூரிக்கு எதிரில் காத்து இருந்தேன்.

ஐந்து நிமிடம் கழிந்தபோது அவள் பயந்து பயந்து வந்தாள். “வாங்க அன்கிள், கடல் ஓரமா போய் விடலாம்”
கடலோரம் எனக் கேட்டதும் நான் வண்ணக் கனவுகள் காண ஆரம்பித்தேன். மண்ணில் கால்கள் புதைந்து என் நடையும் பின்னியது. ஒரு படகு அருகில் வந்தது. அவள் கால்களை மடித்து அமர்ந்தாள். தவறு, தவறு, தவறு, என் மன சாட்சி எதிரொலித்தது.

நான் அருகில் அமர்வதா, எதிரில் அமர்வதா? அதிக இடைவெளி விடுவதா அல்லது பேச்சு காதில் விழும் அளவு போதுமா என ஒருவித “கிக்” “திக் திக்” குடன் எதிரில் அமர்ந்தேன்.

அவள் ஒன்றுமே சொல்லவில்லை.

“என்னமோ பேச வேண்டும் என்றாயே” சஸ்பென்ஸ் தாங்காமல் கேட்டு விட்டேன்.

“ இதோ, நான் பேசுகிறேன்” என எனது மனைவி படகின் மறைவில் இருந்து வெளியே வந்தாள்.

அவ்வளவு நகையும் டொளரியும் வாங்கிகிட்டு பத்து வருசத்துல ரெண்டு புள்ளங்களையும் பெத்தாச்சு. என் கூட குடும்பம் நடத்தப் பிடிக்காம சின்னப் பொன்னு கேக்குதோ ஒங்களுக்கு”
என் சட்டையைப் பிடித்து இழுத்தாள். என் நெஞ்சில் அறைந்தாள்.

“ இரு இரு, கொஞ்சம் நான் சொல்றத கேளு. இவள் என் அண்னன் பையன் பத்தி சொல்றேன்னு சொன்னதாலதான் இங்கே வந்தேன். நீயும் நல்ல வேளை வந்துட்டே. விஷயத்தைக் கேளு” நான் குற்றம் அற்றவனாய் கூறினேன்.

“ஐயய்யோ, வரி சாரி ஆண்டி, இவர் கலியாணம் ஆனவர்னு எனக்குத் தெரியாது. என்னை நல்லா ஏமாத்திட்டாரு” இடையில் குண்டை வாரி வீசினாள் விமி.

“அவரை மயக்கி அலைய விட்டுட்டு இப்ப ஏமாத்திடாருன்னு வேற சொல்றையா. கை கால் ஊனமிலாமல் இருந்தா போதுமே, ஒரு ஆம்பிளைய கூட ரோட்டுல நடக்க விட மாட்டிங்களே”
கண்னகியாய் மாறிச் சாடினாள் விமியை விலை மாதுவைப் பார்ப்பதுபோல் பார்த்து

“ நான் ஒன்னும் அவரை மயக்கல அவர்தான் எனக்கு லெட்டர் மேல லெட்டரா போட்டார்” என ஒரு கற்றை கடிதங்களை எடுத்துக் காட்டினாள். முகவரி டைப் செய்து இருந்தது. நல்லா மாட்டிக் கிட்டே, நல்லா மாட்டிக் கிட்டே என மனசாட்சி கூத்தாடியது.

“இது ஒரு பயங்கரமான ஃப்ராடு பொண்ணு. நீ பேசாம வீட்டுக்கு வா” என நான் கூறி விட்டு முன்னே நடந்தேன்.

“எனக்கு பதில் சொல்லுங்க” என என் கையை பிடித்தவளை உதறி தள்ளி, “போலிசீல் பிடித்துக் கொடுத்து விடுவேன்” என நான் மிரட்டியதில் பயந்து வழி விட்டாள்.

என் மனைவியோ அவள் என் கையைப் பிடித்ததைப் பார்க்கச் சகியாமல், தலையில் அடித்துக் கொண்டு கடலுக்குள் இறங்க ஆரம்பித்து விட்டாள்.

ஓடிச் சென்று அவளை தடுத்து நிறுத்தினேன். அவள் தலையில் அடித்து, இனிமேல் இவ்வாறு நடக்காது” என சத்தியம் செய்தேன். கெட்ட கெட்ட வார்த்தைகளால் விமியையும் என்னையும் திட்டிக் கொண்டே இருந்தவள் நாலரை மணிக்கு வேண்டா வெறுப்பாக வீடு நோக்கி நடந்தாள்.

எனக்குத் தெரிந்த அத்தனை சாமி மீதும் நான் சத்தியம் செய்தேன். ஆயினும் பலன் இல்லை. அவள் அலுவலகம் செல்வதில்லை, சமைப்பதில்லை, உண்பதில்லை. படுத்த வண்ணமே இருந்தாள். முப்பது மணி நேரம் முள்ளாய் நகர்ந்தது. எனது பரம்பரை ”பொறுக்கிப் பரம்பரை”என மூச்சுக்கு மூன்னூறு முறை பட்டம் வாங்கி கட்டிக் கொண்டது.

“இவர்களுக்குத்தான் சின்னப் பொண்ணு கிடைக்குமா….எங்களுக்கு புடிக்கத் தெரியாதா….
கேடு கெட்ட நினைப்பு ஒங்களுக்குத்தான் வரும். என் தலை எழுத்து. ஐ.ஏ எஸ். மாப்பிள்ளயை வேண்டாம்னுட்டு இந்த பொம்பள பொறுக்கிய தேடி கட்டிக்கிட்டேன். பிள்ளைகள் ஸ்கூலில் இருந்து வரட்டும். ஒங்க நாத்த கதைய நாற அடிக்கிறேன்.

நான் எனது நிலையை நினைத்து நொந்து கொண்டேன். பிறருக்கு உதவ துடித்து முட்டாள் ஆகி நிற்கிறேன். அதுவே “சபலம்” என பெயரிடப் பட்டு என் மனைவியால் முழு பொம்பள பொறுக்கியாய் என்னை மாற்றி விட்டு இருந்தது.. நடந்தது அனைத்தையும் அசை போட்டுப் பார்த்ததில், அண்ணா பையன் கெட்டு விட்டான் என அறியும் ஆவலும், அதில் குட்டிப் பெண் சோரம் போன கதையும் கேட்பதில் உள்ள ஆர்வமும், மனைவியை உதாசீனப் படுத்தியதும் என குற்றங்கள் வரிசையாய் வந்தன. நான் கையில் வைத்து இருந்த புத்தகத்தில் மனம் லயிக்கவில்லை. உறக்கமும் பிடிக்கவில்லை. வீடே நரகம் ஆகி விட்டது.. சே. தேவையா இது.


(சபலம் வளரும்)

“.

.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ். (19-Mar-14, 3:54 pm)
பார்வை : 322

மேலே