கரிசல் மண்ணில் ஒரு காவியம்18
கரிசல் மண்ணில் ஒரு காவியம் 18
அத்தியாயம் 18
“ஏண்டா வேல வெட்டிக்குப் போக வேண்டாமா?பள்ளிக்கூடம் போற நேரத்துல அங்க என்ன பண்ணுற”தாயாரின் அவசரம் அவளுக்கு.
“இல்லம்மா ..அது வந்து......இதோ வந்துட்டேங் அம்மா.......நாங் கெளம்பிட்டேங்ம்மா” ஓடி வருகிறான் ராஜா.
“என்னடா கெளம்பிட்ட சாப்புட வேண்டாமா வா சட்டுப்புட்டுன்னு சாப்புட்டுட்டு நீ கெளம்புனாத்தான நாங் ஏங் வேலயப்பாத்து போகமுடியும்.வா சாப்புடு”அவசரமாக அழைத்த தாய் அவனுக்காக சாப்பாடு எடுத்து வைக்கிறாள்.ராஜா வேக வேகமாக சாப்புடுகிறான்.
“ஏண்டா இப்படி அவக்குத் தொவக்குன்னு அவசரமா அள்ளிப்போடுற விக்கிக்கிடப் போவுது,தண்ணியக்குடி”என மகன் சாப்பிடுவதை பார்த்து தன் பசி தீர்ப்பவளாய் அவன் உண்ணும் ஒவ்வொரு கவளமும் தன் வயிறில் நிறம்புவதாய் திருப்தி அடைகிறது பெற்ற வயிறு,
“நீ சாப்புடலயாம்மா?”எனத் தாயாரின் பாச முகத்தில் அவள் தன் பசியை மறந்திருப்பதை உணர்ந்து நினைவூட்டுகிறான்.
மகனின் அக்கறையான விசாரிப்பு அவள் பசியை முற்றிலுமாக ஆற்றிவிடுகிறது.ஏழையின் குடிசையில் எவராவது ஒருவர் பசியை தியாகம் செய்யத்தானே வேண்டும்.அந்தத் தியாகத்தின் சொரூபம் பெரும்பாலும் தாயாகத்தான் இருக்கும்.இவளும் அந்தத் தாய்தான்.பசி ஏழைக்குப் பழகிப்போனதுதானே.பசி பாசத்தின் முன் ஏழையின் வாழ்வில் ஒன்றும் பெரிய விசயமும் இல்லை.ஆச்சரியமும் இல்லை.அன்றாட அனுபவம்தானே!
தன் பிள்ளையின் பசி ஆறிய முகத்தை பூரண திருப்தியோடு பார்க்கிறாள் ஏழைத்தாய்.
“ஏம்மா என்னயே பாக்குறே....என்னம்மா”பரிவோடு கேட்கிறான்.
“நாங் உன்னயத்தானடா பாத்து சந்தோசப்பட முடியும்.எனக்கு இந்த உலகத்தில வேற என்னடா கவல இருக்குது.நீதானடா ஏங் உசுரு.உனக்காகத்தான இந்த உசுரு இன்னும் கெடக்குது.”எனத் தன் கண்களைத் துடைக்கிறாள் தாய்.
“அம்மா நீ எதுக்கும் கவலைப்பட வேண்டாம்மா.ஓங் கஷ்டத்த எல்லாம் நாங் தீத்து வப்பேம்மா.நீயும் சாப்புடும்மா”என சோத்துப் பானையின் சோகம் புரியாமல் மழலை உதிர்த்தான்.
இருப்பு நிலைமை என்னவென்று அறிந்திருந்த அன்னை தன் பிள்ளையின் பாசம் கேட்ட ஆனந்தத்தில் மென்மையாகப் புன்னகைத்து “சரியா நீ போயிட்டு வா”மகனை வழியனுப்பி ஆறுதலடைந்தாள்.
ராசாவும் பையைத் தன் தோளில் மாட்டிக்கொண்டு பள்ளிக்குப் புறப்பட்டான்.
“போயிட்டு வாரேம்மா.”அன்புடன் விடை பெறுகிறான்.
சரி ராசா எனக் கூறி வழி அனுப்பும்போது,”டேய் ராசா”
“என்னம்மா”ஆவலோடு கேட்கிறான்.
“வேறொண்ணுமில்ல......இன்னிக்கு கமலாவும் பள்ளிக்கூடம் வாராளாமே”
“ஆமாம்மா நல்ல விசயம்தானே”என தன் மகிழ்ச்சியைப் பகிர்கிறான்.
பொம்பளப்புள்ள படிக்கபோறது நல்லதுதாண்டா.அதனாலதாங் சொல்றேங் அவ தொடந்து படிக்க வரணும்முல்ல.......”என ஏதோ ஒரு இரகசியத்தை உள்ளே வைத்து சொல்ல வருகிறாள் தாய்.
“ஆமாம்மா அதுல என்ன சந்தேகம் இருக்கு”என ஆவலோடு வினவினான்.
“சந்தேகம் இல்லடா சந்தோசந்தாங்.அதனாலதாங் உனக்குச்சொல்றெங்.நீ அவட்ட அதிகமாப் பேசுறதயோ பழகுறதயோ கொஞ்சம் கொறச்சுக்கனும்.ரொம்பக் கவனமா இருக்கணும்.அப்படி இல்லையிண்ணு வச்சுக்கோ அப்பொறம் அதயே சாக்கா வச்சு அவளப் படிக்கபோறது போதுமுன்னு நிறுத்திருவாங்க தெரிஞ்சுக்கோ...என்னடா அம்மா சொல்றது புரியுதா”என பக்குவமாக தன் மகனுக்குப் பாடம் சொல்கிறாள் உலகம் உணர்ந்த அனுபவ அன்னை.
“சரிம்மா.....புரியுதம்மா...நாங் வாரேம்மா.”பள்ளிக்கு இன்று புத்துணர்வோடு போகிறான்.அதேபோல் கமலாவின் வீட்டிலும் கமலாவுக்குப் புத்திமதி கூறி பள்ளிக்கு அனுப்ப்கின்றனர் அவள் தாயும் தந்தையும்.
இருண்ட வானில் மின்னல்கள் பெண்ணின் விடுதலை கண்டு ஆனந்தம் கொண்டு கைகொட்டி பளிச்சிடும் சிரிப்பொளிகளை வாழ்த்துப் பாடல்களாக வானெங்கும் பரப்பி முழக்குகின்றன.பூச்சூடி பொட்டிட்டு புதுப்பொலிவுடன் புறப்படுகிறாள் பள்ளிக்குக் கமலா.இன்று வையமெங்கும் திருவிழாப்போல் வானமே மங்களம் இசைக்கிறது.வாழ்த்துகின்றது.
(தொடரும்) .
கொ.பெ.பி.அய்யா.
.