- சொல்லைத் தேர்ந்து சுவைக்கப் பரிமாறு--புதுக்கவிதை--திருஅரவிந்த் c -க்குப் பாராட்டுக்களுடன்

பேனா முனைகண்டு
பெருமிதம் கொள்ளப்பா!
ஏனோ வருணிக்க வாளுமே?
தள்ளப்பா!

பணக்காரர் அதிகமா?
பஞ்சைகள் அதிகமா?
கணக்கெடு மனதில்!
கவிதையும் யாருக்கு?

ஏற்றத் தாழ்வுகள்
எங்குதான் இல்லை?
ஆற்றல் உடையவர்கள்
அமிழ்வதே தொல்லை!
ஆற்றாமை சொன்னாலும்
அடுத்தவரை உலுக்கு!
தேற்றிடும் மனத்தைத்
தினம்கடி! சாடு!

எல்லா உணர்வுகளும்
எழுந்துவரும்; நிறுத்து!
சொல்லைத் தேர்வு செய்!
சூட்டைக் கொடுத்துப் பெய்!

யாரை எதை நோக்கி
ஏவுகணை? யோசி!
சீரை, எதுவென்று
சிந்தித்து முடிவுசெய்!
போரைத் தொடங்கு!
பொருளில் கவனம்வை!
ஏரைச் செலுத்துவதும்
எப்படியென்று அறிந்துசெய்!
தூரை அறிந்து
தொடர்க தாக்குகளை!

எல்லாம் சரியென்று
எண்ணி அமையாதே!
கல்லைக் களைந்துதாய்
கவனமுடன் சமைப்பாளே!

சொல்லை வடித்தபின்
சுவைத்துப்பார்! சோதி!
அல்லதைச் சரிசெய்!
அவசரத்தில் சமைக்காதே!

நல்லதைத் தெரிந்தபின்
நடுவீட்டில் பரிமாறு!
எல்லோரும் மகிழ்வர்!
என்றும்,உனைப் புகழ்வர்!
==== +++++ =====
பல சமயங்களில் பிறருடைய நல்ல கவிதை வரிகள் நம்மையும் எழுத வைக்கும் ஒரு உந்துதலாக அமையும்;

அதற்க்குச் சாட்சியாக மேலே உள்ள கவிதையை நான் எழுத உந்துதலாக -185195-என்ற எண்ணின் கீழ், -திரு.அரவிந்த் c- எழுதியுள்ள கவிதையிருந்தது.
இதுபோன்ற கவிதையின் எண்ணும் கவிஞரின் பெயரும் இதைப் படிப்பவர்கள் அவரையும் சென்று படித்து ஊக்குவிப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் கொடுக்கப்படுகிறது.
அவருக்கு எனது பாராட்டுகளாக இக்கவிதையை மட்டுமல்ல, எனது நன்றியினையும் சமர்ப்பித்து மகிழ்ந்து கொள்கிறேன்.
==== ======

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (20-Mar-14, 6:41 am)
பார்வை : 166

மேலே