சில்லறை--பிச்சை--சோறு - வானொலி நாடகம்
வணக்கம். வழக்கம் போல் வர்ணனையின்றி வசனம் மட்டும் கொண்ட எனது ரேடியோ நாடக பாணி வரிசையில் மற்றுமொரு சிறுகதை
****************************************
அம்மா. . . தாயே.. . கை கால் விளங்காதவனம்மா ஏதாவது சில்லறை இருந்தாப் போடுங்க தாயி. . . ராசா. . . .
ஏய். . .கிழவா. . . எத்தனை தடவை சொல்லி இருக்கேன். மோட்டாருக்குள்ள ஏறி பிச்சை எடுக்காதே . . பிச்சை எடுக்காதே . .அப்படின்னு. உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு. . பஸ்சை விட்டு கீழே இறங்குறியா இல்லையா ?,
ஏம்பா. . .கணடக்கட்டர் . . .சமயமாச்சு பஸ்சை எடுங்கப்பா. . .உர். . உர்ருனு தேய்ச்சுக்கிட்டே இருக்கீங்களேயொழிய கிளம்ப மாட்டீங்களே. . .
பேட்டை. . . டவுண். . . . ஜங்ஷன். . ஆரெம்கேவி. பாளை பஸ் ஸ்டாண்ட. . . . ஹைகிரவுணட். . . . ஏறுங்க. . ஏறுங்க. .. . படியில நிக்கறவன் ஏறுகிற ஆளுக்கு வழியை விடப்பா. . . . . ஏ பச்சை சட்டை. . . நடுவுல எவ்வளவு கேப் கிடக்கு. . முன்னால நகருய்யா.. . . போலாம் ர்ர்ரைட். . .
ஏம்பா. . . இது மார்க்கெட் போகுமா. . .
மார்க்கெட் போகாது. . . முருகன் குறிச்சி இறங்கி வேற பஸ் மாறிக்கோ கிழவி. . .
அப்படியா. . தெரியாம ஏறிட்டேனே. . . சரி ஒரு டிக்கெட்டு குடுப்பா. . .
என்னா கிழவி. . . 5 ரூபா சில்லறையா குடு. . பத்து ரூபா நீட்டுறே. . .
கொஞ்சம் இருப்பா . . .சில்லறை இருக்கான்னு பாக்குறேன்.. . .
சரி. . சரி. . . சில்லறை எடுத்து வை. . . ஆங். .
டிக்கெட். . . டிக்கெட். .
பாளை பஸ் ஸ்டாண்ட் ஒண்ணு குடுங்கண்ணே. .
ஏம்பா. . . இருபது ரூபா தாளை நீட்டுனா எப்படிப்பா ? 5 ரூபா சில்லறை இருந்தாக் குடு.
சரி. . சரி. . சில்லறை உள் பாக்கெட்டுல இருக்கு . எடுத்து தர்றேன். . அதுக்கு ஏன் இப்படி கத்துறீங்க ?,
ஏம்பா. . இந்த டேபிள் ஃபேன் யாரோடதப்பா. .
லக்கேஜ் போடனும். . .
எனக்குள்ளதுதான்.. . கவருமெண்ட் விலையில்லாம கொடுக்கிறது. . கவருமெண்ட் பஸ்சுல லக்கேஜ் கேட்டா எப்படி. . .
ஆமாப்பா. .. . அடுத்த எலெக்ஷன்ல உங்களையும் இலவசமா போகலாமுன்னு சொல்லுவாக. . . லக்கேஜ் 5 ரூபா சில்லறை எடு. . .
கண்டக்டரு. . . பஸ்சை நிப்பாட்டு. . . என் 5 ரூபா சில்லறை படியில உருண்டு வெளியே விழுந்துடுச்சுப்பா. . . .
ஏய் கிழவி. . முந்தானையில நீ சில்லறையை முடிஞ்சா இப்படித்தான் விழும். . . சரி. . சரி. . பஸ்சை எல்லாம் நிப்பாட்ட முடியாது . . வேற சில்லறை 5 ரூபா இருந்தா எடும்மா. . .
வேற என்னிடம் சில்லறை இல்ல. அந்த பத்து ரூபா தாளுதான் இருக்கு. . முருகன் குறிச்சி ஒரு டிக்கெட் குடுப்பா. . .
ஹோல்டன். . . . ஏய் கிழவி . . சில்லறை இல்லைன்னா கீழே இறங்கு. . .அடுத்த பஸ் பிடிச்சு போ. . . . . போலாம் ர்ர்ர்ரைட். . . .
= = = = = =
என்ன கண்டக்டர். . .இவ்வளவு நேரம் ஆயிடுத்து. .
செம கூட்டம். . . இந்தாங்க மொத்த சில்லறை இவ்வளவுதான். . . 1100 ரூபா இருக்கு. .
இப்படி டேபிள் மேல கொட்டுங்க. . . ஏதோ உங்களப் போல ஆளுங்க இருக்கிறதால எங்க ஓட்டலில் சில்லறைத் தட்டுப் பாடு கொஞ்சம் தீருது. . . இந்தாங்க. . .உங்க கமிசன் காசு. . இதோ 1100 ரூபா. . .
அவ்வளவுதானா. . . . சாப்பாடு எல்லாம் கிடையாதா. . . .
நல்லாக் கேட்டங்க போங்க. . . உங்களுக்கு சோறு இல்லாமலா. . . . சர்வர் . . கண்டக்டருக்கு ஒரு இலையைப் போடு. . . .
சார்வாள் ரொம்பக் கத்தி. . கத்தி தொண்டை வறண்டு போயிருப்பாரு. . . இளஞ்சூட்டுல குடிக்க வெந்நீர் கொடு. . . . . பாவம் சாப்பிட்டு விட்டுப் போகட்டும்.. . . . . .
*-*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*-*
குறிப்பு : - இதுவும் ஒரு வகை சில்லறைப் பிச்சை எடுத்துச் சோறு சாப்பிடுவது போலத்தான். இப்படியும் ஒரு சிலர் வயிறு வளர்க்கிறார்கள். நான் அனுபவத்தில் கண்டது. . . . .
-*-* அன்புடன் மணியன் *-*-*
*-*-*-*-* *-*-*-*-* *-*-*-*