ஈரோடு தமிழன்பன் - 80 விருது - அகன் அண்ணாவிற்கு நன்றிகள்

தூர்தர்சனின் காலம் அது. ஞாயிற்றுக்கிழமை திரைப்படம், திங்கள் கிழமை வயலும் வாழ்வு, செவ்வாய்க்கிழமை நாடகம், புதன்கிழமை திரைச்சித்ரா, வியாழக்கிழமை மலரும் நினைவுகள், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும், சனிக்கிழமை இந்திப்படம் என்று நீளும் நிகழ்ச்சிகளோடு தினசரி 8:40 செய்திகளுக்குப் பிறகு ஸ்டேசன் மூடிவிடுவார்கள். அப்போதெல்லாம் தூர்சன் செய்திகளுக்கு அவ்வளவு மெளசு. நிஜத்தை நிஜமாகவே செய்திகளாக சொல்லிக் கொண்டிருந்த 1980க்கும் 1990க்கும் இடைப்பட்ட காலம் அது. ஷோபனா ரவி, ஃபாத்திமா பாபு, வரதராஜன், போன்றவர்களின் வரிசையில் நான் அறிந்தவர்தான் ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்கள்.

செய்தி வாசிப்பளாராய் அவரை அறிந்து வைத்திருந்த எனக்கு போகப் போகத்தான் அவர் ஆகச் சிறந்த தமிழ் ஆர்வலர், கவிஞர். ஆசிரியர், மரபுக் கவிஞர், கவியரங்கக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்பட பாடலாசிரியர் என்பதெல்லாம் தெரிந்து கொண்டேன். எழுத்து.காம் மூலம் என்னை அறிந்து என் எழுத்தினை எல்லோரும் அறியச் செய்ய வேண்டும் என்ற பேராவலும், என் மீது பேரன்பும் கொண்ட புதுவை காயத்ரி என்று அறியப்படக்கூடிய அகன் அண்ணா ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு தமிழன்பன் 80 என்ற பெயரில் பாண்டிச்சேரியில் விழா நடக்கப் இருக்கிறது, அந்த விழாவில் பன்னாட்டுப் படைப்பாளிகளில் ஒரு 80 பேரைத் தேர்ந்தெடுத்து

தமிழன்பன் - 80

என்ற விருதினை கொடுக்க இருக்கிறோம், அதில் உன் பெயரும் இருக்கிறது என்று சொன்னபோது அந்த அங்கீகாரம் என்னை மகிழச் செய்ததை விட, என் எழுத்துக்களை கூர்மையாய் வாசித்து, எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், புகழ் போதைவிரும்பிகள் நிறைந்த ஆதிக்க எழுத்தாள சக்திகளுக்கு நடுவில் எந்தவித காழ்ப்புணர்ச்சிகளுமின்றி நல்ல எழுத்தினை எல்லோரும் அறியச் செய்யவேண்டும் என்று எண்ணும் இப்படி ஒரு அன்பு நிறை மனிதர் இருக்கிறாரே என்ற ஆச்சர்யத்திற்குள் என்னை தள்ளி விட்டதுதான் நிஜம்.

அகன் அண்ணா போன்றவர்கள் இருப்பதால்தான் என்னைப் போன்ற எத்தனையோ பேர்கள் இன்னும் எந்த அரசியவிதிகளுக்கும் உட்படாமல், முகஸ்துதி பாடி விளம்பரம் தேடிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு மெளனமாய் எழுதிக் கொண்டிருக்க முடிகிறது. அகன் அண்ணாவிடம் தாயின் அன்பினை நான் கண்டேன். சமரசம் செய்து கொள்ளாத ஆகச்சிறந்த படைப்பாளி அவர்.

இதோ அந்த விழா நேற்று காலை 9:30 மணிக்குத் தொடங்கி மிக சிறப்பாக பாண்டிச்சேரியில் நடந்து முடிந்திருக்கிறது. அதே விழா மேடையில் என்னுடைய படைப்புகளைத் உள்ளடக்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பும், கவிதைத் தொகுப்பும் ஐயா ஈரோடு தமிழன்பன் அவர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த படைப்பினை எழுதியதோடு என் பணி நிறைவுற்றது. வீரியமான விதைகள் தானே முளைத்துக் கொள்கின்றன. அவை யாரையும் எதிர்ப்பார்ப்பது இல்லை.

இயக்கத்தின் விதியே அதுதான் போலும்....!!!!!

படைத்தவனைப் பற்றிய யாதொரு யோசனையுமின்றி என் படைப்புகள் இன்று வெளியாகி இருக்கின்றன. வெளிநாட்டு வாழ்க்கைச் சுழலில் சிக்கி இருக்கும் நான் தூரத்திலிருந்து தன் பிள்ளையைக் கண்டு மகிழும் தாயாய் என் ஆனந்தக் கண்ணீரை முந்தானையில் துடைத்துக் கொள்கிறேன். எழுதுவது என் விருப்பம். எழுத்து வெளிப்பட்டு நிறையபேரைச் சென்றடைய வேண்டும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு இல்ல. வீரியமிக்க படைப்புகள் அந்த செயலைச் தானே செய்துகொள்ளும் என்றே நான் நம்புகிறேன். எத்தனை விளம்பரம் இருந்தாலும், முகஸ்துதி விமர்ச்சனங்கள் இருந்தாலும், சரியில்லாதது வெகுஜனத்தால் நிராகரிக்கப்படும். கவர்ச்சி என்பது கொஞ்சம் காலம் மட்டுமே நிலைக்கும். இயல்பு முக்காலமும் சத்தியம் பேசும்.

தோழி கெளசல்யா வாரியர் வலைத்தளத்தில் இருந்து எடுத்து எழுத்து.காமில் போட, எழுத்து. காமின் மூலமாய் அகன் அண்ணாவின் பார்வையில் என் எழுத்துக்கள் பட, இதோ இன்று தம்பி சூர்யா சென்னையிலிருந்து எனக்காக பிராயத்தனப்பட்டு பாண்டிச்சேரிக்கு சென்று அந்த விருதினையும் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு ஒரு விடுமுறை நாளை எனக்காக கொடுத்து அசதியோடு சென்னை திரும்பி இருக்கிறான்.

ஈன்ற குழந்தையைத் தாய் முதன் முதலில் காணும் போது ஏற்படும் பெருமகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது தம்பி சூர்யாவை அந்த மேடையில் நான் பார்த்தபோது. என் முதல் படைப்பினையும், முதல் விருதினையும் வாங்கிய சூர்யா வாழ்க்கைப் பயணத்தில் மறக்கவோ மறுக்கவோ முடியாத ஒரு உன்னத உறவு எனக்கு.

இணையத்தில் அதிகம் பரப்புரைகள் செய்யப்படாத அந்த விழா நிஜத்தில் மிகப்பிரம்மாண்டமாய் நடந்து முடிந்திருக்கிறது.

எழுதுவதை விட, பரிசு பெறுவதை விட, புத்தகம் வெளியாவதை விட சிறந்தது அன்பு நிறை மனிதர்கள் சூழ் வாழ்க்கை வாழ்வது. இது இயற்கையின் கொடை. எனக்குக் கிடைத்த வரம்.

ஆமாம்....

இது ஒரு ஒரு நெடும்பயணம்....!!!!!

- தேவா சுப்பையா...

எழுதியவர் : தேவா சுப்பையா... (24-Mar-14, 10:17 am)
பார்வை : 280

மேலே