விதி

கோடை மதியம்
கொளுத்தும் வெயில் !
ஐம்புலன்களும்
வறண்டு
ஐயோ பாவமென
நடந்து
கொண்டிருந்தேன் !
தொலைவில்
எதிரே
ஒருத்தி
நடந்து வந்தாள் !
அது
நடையா ?
இல்லை
நடனமா ?
என்னவொரு
ஒயில் !
பார்வைக்கு
அவளொரு
மயில் !
அவள்,
இளைஞி !
அவள் ,
அலைபேசியில்
மூழ்கியிருக்கவில்லை !
அவளிடம்
சூழல் பற்றிய
பிரக்ஞை
இருக்கத்தான்
செய்தது !
திமிர்நடை
இல்லை !
அலட்டல்
பார்வையில்லை !
அட !
அழகியும் கூட !
அருகே வந்தாள் !
உதட்டில்
குறுநகை !
நிச்சயம்
பார்ப்பாள் !
கண்கள் கலக்கும் 1
காந்தர்வம்
நடக்கும் !
நாங்கள்
ஒருவரையொருவர்
பார்த்து,
எங்களிரு
கண்கள் கலந்து,
ஒரு
அற்புத இரசாயனம்
உருவாகும்
அத்தருணத்தில் ..................
சர்ரென்று
கடந்து சென்றான்
ஒரு
வண்டியோட்டி !
நொடிப்பொழுதில்
புழுதி பறந்து,
அவள்
நாசியில்
நெடியேறி,
முகம் கோணி,
அச்ச்ச்ச்சென்று
தும்மிவிட்டு
அவள்
கடந்து விட்டாள் !
ஐயகோ ...........
பார்வைப்பரிமாற்ற
இரசாயனம்
நிகழவேயில்லையே !
நான்
உலக வெறுப்போடு
காலில் இடறிய
கல்லை
ஓங்கி ...........
ஒரு
எத்து எத்தினேன் !
அது,
எகிறிப்பறந்து
சிவனேயென்று கிடந்த
தெருநாயொன்றைப்
பதம் பார்க்க,
அது
' காள் ' என்று
கத்தியபடி
தெறித்தோடியது !
விதி !