குறுக்குச் சிறுத்த குமரிப்பெண்ணே

அவன் :
குறுக்குச் சிறுத்த குமரிப்பெண்ணே
குடம் இடுப்பில் நிக்கலையோ ?
கால்கடுக்க நீ நடக்கையிலே
காளை மனம் வலிக்கிறதே ...!!

அவள் :
பாதைவழி மறிச்சி நின்னா
பாசம் பொங்கி வழிஞ்சிடுமோ
புத்தி கெட்டு போகாதே
பிதற்றாம தள்ளி நில்லு ...!!

அவன் :
செப்புச்சிலை போல் அழகில்
சொக்கி நானும் போனேனே
சீர்செனத்தி எதுவும் வேண்டா
சிரிப்பொன்றே போதும் புள்ள ....!!

அவள் :
முறைமாமன் கண்ணில் பட்டா
முரிச்சுடுவான் உன் எலும்புகள
மரியாதை குறையு முன்னே
மறிக்காதே வழிய விடு ...!!

அவன் :
இதயத்தில் உன்ன வச்சேன்
இராப் பகலா காத்திருக்கேன்
நெஞ்சில் ஈட்டி பாய்ச்சாதே
நெருஞ்சி முள்ளாய் குத்தாதே ...!!

அவள் :
பங்குனி போய் சித்திரையில்
பரிசம் போட மாமன்வரான்
பகல் கனவு காணாதே
பக்குவமா விலகி விடு ....!!

அவன் :
உளமார உன்ன நெனச்சேன்
உதறி விட முடியலையே
ஒரு தலையா காதலிலே
ஒடிஞ்சி மனம் கெட்டேனே ....!!

அவள் :
ஒப்பாரி வைக்க வேணா
ஒதுங்கி நீயும் சென்றுவிடு
ஒக்கல் கண்ணில் படுமுன்னே
ஒல்லே நீ கிளம்பிவிடு ....!!

அவன் :
என்போக்கில் போறேன் நான்
என்னிதயம் உன் வசமே
எந்நாளும் உன் நெனப்பில்
என் உயிரும் பிரிந்திடுமே ....!!!

ஒக்கல் -உறவினர்
ஒல்லே- விரைவாக

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Mar-14, 10:14 pm)
பார்வை : 258

மேலே