எழுந்து நில் என் தோழா

எவ்வளவுதான் பொறுப்பாய்
எழுந்து நில் என் தோழா!
எள்ளளவுதான் நெருப்பாய்
மாறிவிடு என் தோழா!

களவாடும் கயவர்களின்
குலை நடுங்க செய் தோழா!
நிலவு ஆடும் நடுக்கத்திலே
தலை நிமிர்ந்து நில் தோழா!

தட்டிவிடு வெட்டிவிடு
கடிக்க வரும் பாம்புகளை
பெட்டிக்குள்ளே அடைத்துவிடு
பெட்டிப்பாம்பாய் ஆக்கிடவே!

பாம்புகளில் பலவுண்டு
சிலவற்றை கேள் தோழா!
பணப் பாம்பு, பதவிப் பாம்பு,
இனப் பாம்பு, வெறிப் பாம்பு!

படைக் கண்டு நடுங்கும்படி
மிரட்டினாலும் என் தோழா!
தொடைகூட நடுங்காமல்
நசுக்கிவிடு பாம்புகளை!

வில்லதனை ஆயத்தமாய்
எடுத்துக்கொள் என் தோழா!
வம்புகளை வழக்குகளை
அம்பெறிந்து கொல் தோழா!

சில்லறைக்கு பல்லிளித்து
சிறுத்திடாதே என் தோழா!
வல்லுரைத்து மென்னுரைத்து
நீதம் செய் என் தோழா!

துவளாதே தவழாதே
துயர் கண்டு என் தோழா!
எழுந்து நில் என் தோழா - உன்
உயர் கண்டு வியந்துவிடும்-உலகமது
அடங்கிவிடும் கைகளிலே என் தோழா!

எழுதியவர் : உமர் ஷெரிப் (26-Mar-14, 11:03 pm)
பார்வை : 1964

மேலே