வரலாறு கூறும்

பழகிடு பழகிடு
பண்புடன் பழகிடு
பாரெல்லாம் உன்னையும் பாராட்டும்-தினம்
பார்த்து பார்த்துச் சீராட்டும்.

அன்புடன் அறிவுடன்
அறமுடன் இருந்திடு
அணைத்துக் கொள்வார் என்றும்-உனை
என்றும் சேரும் நன்றும்.

மதித்திடு மதித்திடு
மாந்தரை மதித்திடு
தீமைகள் என்றும் தீய்ந்திடும்-மனத்
தீவினை எண்ணங்கள் மாய்ந்திடும்.

அதிகமாய் ஆசைகள்
ஆதிக்கம் விட்டுடு
ஆனந்தம் என்றுமே கூடிடும்-வரும்
அநியாயம் நில்லாமல் ஓடிடும்.

நல்லதைச் செய்திட
நாளும் நீ முயன்றிடு
நெஞ்சத்தில் நிம்மதி பிறந்திடும்-கொடும்
வஞ்சங்கள் வாழாமல் இறந்திடும்.

பெரியவர் சொல்லில்
பொருளினைப் புரிந்திடு
உரியன வந்துனைச் சேரும்-ஒரு
வரலாறு உன்செயல் கூறும்.
***********************

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (30-Mar-14, 10:17 pm)
Tanglish : varalaaru koorum
பார்வை : 64

மேலே