கட்டையால் அடித்துப் போடுகிறான் பிதாமகன் அகன்

இறந்துப் போனேனோ என
இருந்தவர்கள்
சிந்திய மூக்குகளுக்குள்ளும்
தெறிக்கும் விழி நீர்த் துளிகளுக்குள்ளும்
விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர் …..

இறந்தேனே என விசனப்பட்டவர்களினும்
எடுக்கப்படுவது நான் எப்போதென
வருத்த வசனங்களுக்குள் பலர்……

கண்ணில் காத்து காத்து வளர்த்த மகள்
வாலிபக் கதவுகளுக்கான சாவி
தருவேனோ என அய்யுற்று
சந்தேகப் பயணத்தில் ஓடிவிட்டாளென
வருந்தி இறக்கவில்லை நான்….

லஞ்சம் வாங்கிய
ஈன மூச்சுக்காற்றில்
எனது வயதுகளின்
வழிசல் என்னை வாரிக்கொண்டதென
உறுத்தலில் உயிர் இழக்கவில்லை நான்…

ரகசியமாய் மாயமான விமானத்தின்
அந்தரங்க அமுக்கலில் அவதிப்பட்டு
ஆயுள் இழக்கவில்லை நான்….

கடன் வாங்கி வட்டி அளிக்க இயலாமல்
வட்டிக்காக கடன் வாங்கி
கட்டா கடனுக்கான வட்டிக்கான கடனுக்கு
கடன் வாங்கி மறு கடன் வாங்கி
அவமான அர்ச்சனைகளுள் அலைந்து
அழியவில்லை நான்….

நான் எழுதிய கவிதை
என்னுடன் எதுவும் பகிராமல்
காலத்தின் கரைசலுக்குள்
கரைந்துப்போன காயம்
என்னை இறக்க வைத்தது..!!

இறந்துக் கிடக்கிறேன்
இதோ ,இங்கே..!

“வாழ்வைத் தேடித்தேடி
எழுத்துகளால் அலைந்தவன்
இப்போதுதான்
வாழத் தொடங்கியுள்ளாய்
-இனி எழுதி வா ஒரு வாழ்க்கை கவிதை ”
-சவமான என் காதுகளுக்குள்
எனது பழைய கவிதை பாசமாய்
பகர்ந்தது.!!!

புது தெம்புடன்
எழுதுகோல் எடுத்திட அசைந்தன
என் விரல்கள்-கைகள்.....

கட்டையால் அடித்துப் போடுகிறான்
என் கைகளை ‘பிதாமகன்’ (வெட்டியான் )
*************

எழுதியவர் : அகன் (1-Apr-14, 6:34 pm)
பார்வை : 97

மேலே