தொடரும்

அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தவரை தடுத்து நிறுத்தியது அந்தத் தந்தி.
தந்தியின் வரிகள் அவரைத் தடுமாற வைத்தன..
'மல்லிகாவின் நிலைமை மோசமாக இருக்கிறது. உடனே வரவும்' எனும் செய்தி அவரின் இதயத் துடிப்பை சற்று நிறுத்தி விட்டது.
'என்னவாயிற்று ?. ஐயோ! என் அருமை மகளுக்கு என்னவாயிற்று ' மனம் அழுதது. ஆறுதல் கூறக் கூட ஆள் துணை அற்றவர். ஆமாம்! மணிகளை ஈன்ற மனைவி மண்ணோடு மண்ணாகி விட்டாள்.
வருத்தம் வாழ்க்கையின் அங்கம். அதை நிறுத்தி வைக்க முடியாது.
பெட்டியைத் திறந்து இருந்த பணத்தை எடுத்து பையில் திணித்துக் கொண்டார்.
ஓட்டமும் நடையுமாக பேரூந்து நிலையத்தை அடைந்தார். புறப்படுவதற்காக புலம்பிக் கொண்டு நின்ற பெங்களூர் பேரூந்தில் ஏறிக்கொண்டார். முக்கி முனங்கி பேரூந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்த பேரூந்து வேகம் எடுக்கத் தொடங்கியது.
துடித்துக் கொண்டிருந்த உள்ளத்தில் தொலைந்த கால எண்ணங்கள் துரத்திக் கொண்டு வந்தன.
இலட்சங்கள் இல்லை. ஆனால் இலட்சுமிகரமான மனைவி .இனித்தது இல்லறம்.
இனிமையில் பிறந்த மழலை. மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.முத்தான மகளைச் சொத்தாக எண்ணி சீராட்டி வளர்த்தனர்.
இடைவெளி விட்டே இரண்டாம் கருவை வளர்த்துக் கொள்ள மகனாய் மலர்ந்தது. ஆகா! என்று அள்ளிக் கொண்டனர்.
என்ன வேதனை! எங்கிருந்து வந்தது இது.? மலர்ந்த பூவின் மணத்தை நுகர முடியாமல் தாய்மை தலை சாய்ந்து விட்டது.
கலங்கி விட்டார்.கண்ணாயிரம். கருத்தொருமித்த கண்ணாள் மண்ணாகி விட்டாளே!. இதயத்தை யாரோ பிடுங்கிக் கொண்டு விட்டது போல் துடித்தார்.
துடித்தவர் மயங்கி விழுந்தார். துணையென இருந்த சொந்தங்கள் அவரை நினைவுக்குக் கொண்டு வந்தன. மழலைச் செல்வங்களை அவர் முகத்தின் முன் காட்டினார்கள்.
'ஐயோ ! செல்வங்களே.. என் கண்ணை இழந்துட்டேனே, உங்களை எப்படி கரை சேர்ப்பேன்' கண்களில் அருவி கொட்டியது. கண்ணீர் வற்றியதும் துயரத்தின் சுமை குறைந்தது.வாழ்க்கையின் முடிவு இதுவல்ல என உணர்ந்தார். மலர்கள் மரமாகி, மரங்கள் மலர்களை மலர்வித்து ,மலர்கள் வித்தாகி ,வித்துக்கள் மரமாகி ..இது ஓட்டம். நிற்காது. நிற்கக் கூடாது.
காலங்கள் கரைந்தன. கண்மணிகள் வளர்ந்தன. பாசத்தின் வலைபோட்டு பரிவோடு வளர்த்தார். அம்மாவின் அன்பு இல்லையே எனும் ஏக்கம் வராமல் , எல்லாமே தானானார்.
மகன் படித்து ,வேலை பெற்று மும்பாயில் வாழத்தொடங்கினான்.தனியாய் இருப்பவன் தடுமாறக் கூடும் என்று தளிர்க் கொடி ஒன்றை துணையாக்கி வைத்தார். நன்றாய் இருப்பதாய் ,வந்தவர்கள் சொல்லக்கேட்டு மகிழ்வு கொண்டார்.
பெண்களின் இலக்கணம் பெற்றவள்..தன் கண்ணின் கருமணிப் போன்றவள்.இல்லறம் காண நல்லவன் ஒருவனை நாளெல்லாம் தேடினார். எல்லாம் சரியெனத் தோன்றிய பின்பே மணநாள் குறித்தார்.
மணமும் முடிந்தது. விடைபெற்றுச் செல்ல மகளும் மருமகனும் வந்தனர். மகளின் கண்களில் பாசத்தின் ஊற்றுப் பொங்கி நின்றது. புது மலர்களின் மணத்தில் மயங்கிய மாப்பிள்ளை.
'மாப்பிள்ளை! மனைவிக்கு கணவன் தான் உலகம். என் பாசத்தைக் கொட்டி வளர்த்த பொண்ணு, பங்கம் வராமல் பார்த்துங்கோங்க..' என்றார் கண்ணாயிரம்.
தலையை ஆட்டினார் மாப்பிள்ளை. கண்ணாயிரம் கையில் அடித்துச் சத்தியம் செய்துவிட்டு மனைவியை அழைத்துக் கொண்டு பெங்களூர் சென்றார்.
மகளுக்கும் மகன்கள் பிறந்தனர். இனிப்பான இல்லறந்தான், போகப் போக செலவு அதிகரிக்க, வருமானம் தேய்மானம் ஆனாது. வருவாய் குறைவினால் அவர்தம் வசதி குறைந்தது. சென்ற போதெல்லாம் தேவைகள் எதுவெனக் கேட்டு ,நிறைவேற்றி வைத்தார்.பேரன்களிடம் பாசம் காட்டினார்.
'தாத்தா' என்று தாவிடும் அவர்களை அள்ளிக் கொள்வார்.பாசத்தைப் பிசைந்து, உணவாக ஊட்டினார்.
சிறுகவே உணர்ந்தார், மருமகன் வழியில் மாற்றம் இருப்பதை. இனித்த குடும்பத்தில் கசப்பு தோன்றிட இன்னல்கள் புகுந்தன.
குடித்து விட்டு வந்தவன் ,வீட்டில் குழப்பம் செய்தான். மனைவியின் மனதை தீய, கொடிய வார்த்தைகளால் குத்திக் கிழித்தான்,மலரின் உடலை விரல் நகத்தால் கிழித்தான். குழந்தைகள் கொடுமையினால் குழப்பம் கொண்டன. குழப்பத்தில் ஏற்பட்ட பயத்தால் அழுத குழந்தைகளைக் காலால் எட்டி உதைத்தான். கொடுமைகள் தொடர்ந்தன. கண்ணாயிரம் நொந்து போனார்.
மகளை தன்னுடன் வந்து விடும்படி அழைத்தார்.
'கொடுமையே ஆனாலும் குடித்தனம் தானே மங்கைக்கு மகிமை ' என்றவள் கூறிட ,நெஞ்சம் வெடித்தது. நிம்மதி இழ்ந்தார், காலத்தால் கண்ணீர் நிற்க வில்லை. அதுதான் இன்று தந்தியாக வந்துள்ளது.
பெங்களூர் சென்றவர் கண்ணில் பட்டது, உயிரற்ற மகளின் சடலமே. பொங்கி அழுத பேரன்களை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். மகளின் உடலை மண்ணில் மறைத்து விட்டு , இளம் மொட்டுக்களைத் தன்னுடன் அழைத்துக் கொண்டார்.
'மருமகனே ! கொடுமையால் உங்கள் மனைவி அழிந்து விட்டாள். அவள் விட்டுச் சென்ற இந்த இளம் மொட்டுக்களையாவது, கொடுமை எனும் நோய் தீண்டாமல் வளர்க்க விரும்புகிறேன். தயவு செய்து முடியாது என்று சொல்லி விடாதீர்கள்' என்றார் கண்ணாயிரம்.
மனைவியின் மரணம் மனதை மாற்றியதா? இல்லை பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம் எனும் எண்ணம் அவனை மாற்றியதா? தெரியவில்லை. மௌனமாகத் தலையினை அசைத்தான்.
பேரூந்தில் பேரன்களுடன் ஏறி அமர்ந்த கண்ணாயிரம் நினைத்துப் பார்த்தார்.மகனையும், மகளையும் வளர்த்து ஆளாக்கிக் கடமைகள் முடிந்து விட்டதாக தன் மனைவியின் புகைப்படத்தின் முன்னால் அன்று சொன்னது தவறு.. தன்னோட கடமை இன்னும் முற்றுப் பெறவில்லை..தொடர்கிறது...

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (3-Apr-14, 8:31 pm)
Tanglish : thodarum
பார்வை : 134

மேலே