கல்லறைப் பூக்கள்

கல்லறைப் பூக்கள்
கருமைப் பட்டாடையில் பதித்த
கலையழகு பெற்ற வைரங்களாய்
கல்லறைப் பூக்களானீர்கள்!
உங்களுக்குள் ஆழத்தில் புதைந்து இருக்கும்
ஆசையே உருவான மனிதனைத்
தெரியுமா உங்களுக்கு ?
உறவை உணர்ந்து, உயிரில் கலந்து
உடலை இழந்த பின்னும்
உள்ளம் இழக்காதிருக்கும்
மனிதனைத் தெரியுமா உங்களுக்கு ?
ஒன்பது வாசல்கள்
ஓங்கித் திறந்திருப்பினும்
இத்தனை நாளாய்
இந்த உள்ளத்தில்
முளைத்த கனவுகளும் நினைவுகளும்
இந்த உடலில் நிறைந்த காற்றும் உணர்வும்
வெற்றுடலில் அடைந்திருந்த மாயம்
அறிவீரா நீங்கள் ?
வாழ்ந்திருந்த காலம் முழுவதும்
வானத்து மேகங்களாய் மனதின் ஏக்கங்கள்
ஏங்கித் திரிந்தனவே
அவனை அறிவீரா நீங்கள் ?
கல்லாய் வாழ்ந்த போதும் அந்தக்
கல்லுக்குள் ஈரமாய்
காதலும் கர்வமும் கசிந்து நின்ற நிலை
தெரியுமா உங்களுக்கு ?
வேண்டும் வேண்டும் என்றே ஓலமிட்டுத்
திரிந்த பின்னும் இனி வேண்டாத குப்பையாய்
உறவுகள் மாறிய ஏக்கத்தில் உங்களுக்குள் உறங்கும் மனிதனை உணர்வீர்களா நீங்கள்?
கண்டால்தான் கவிதை, பார்த்தால்தான் பாசம்
ஆசைகள்தான் அவதியாகிறது
அழியவும் வழி வகுக்கிறது
அழிந்துவிட்டாய் ஒருமுறை
போதும் போதும் இது என்று
பார்த்துப் பார்த்துச் சலித்த
உலகை மீண்டும் அவன் பார்க்க வேண்டாம்
என எண்ணியோ அவன் கண்களை மூடினீர்கள் !
புரியவில்லை எனக்கு.
நானும் ஓர் நாள் உங்களிடையே
வந்துசேருவேன்
அன்றாவது சொல்வீர்களா
அந்த ரகசியத்தை !