உப்பு
"ஐய! ச்சி, ஒரே உப்பு, பாட்டி கண்ணு எரியுது பாட்டி,அய்யய்யோ முடியல" பேத்தி பிரியாவின் கத்தலை கேட்டு கரைக்கு வந்த பாட்டி கோப்பையில் கொண்டுவந்த குடிநீரை கொண்டு பிரியாவின் கண்களை கழுவினார்.
கோடை விடுமுறையை கழிக்க பாட்டி வீட்டிற்கு வந்த பிரியாவை அழைத்துக்கொண்டு கடற்கரைக்கு வந்திருந்தார் அவள் பாட்டி.
கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த பிரியாவின் கண்களில் கடல் நீர் பட்டதால் கண்களை கழுவி விட்டு கடற்கரை மணலில் வீடு கட்ட ஆரம்பித்தால் பிரியா.
"பாட்டி, எனக்கொரு சந்தேகம்??" என்றாள்.
" சொல்லுமா "
" கடல் நீர் ஏன் இவ்வளவு உப்பாக இருக்கிறது பாட்டி??" என்றாள்.
"ஓ அதுவா? சொல்லட்டுமா"
" சொல்லுங்க பாட்டி"
கடற்கரை மணலில் பிரியாவின் கை கோர்த்து நடந்து கொண்டே பாட்டி சொல்ல ஆரம்பித்தார்.
" ஒரு ஊரில் செல்வம், முத்து என்ற அண்ணன் தம்பி வாழ்ந்து வந்தனர்.
அண்ணன் செல்வம் நல்ல உழைப்பாளி, அவன் பெயரில் மட்டுமே செல்வம் இருந்தது அவன் வாழ்வில் இல்லை, அன்பானவன். அவனைப்போலவே,அவனுக்கு செல்வி என்றொரு மனைவி இருந்தாள்.
தம்பி முத்து அண்ணனுக்கு நேர் எதிர். வாழைபழ சோம்பேறி, அவனை போலவே அவனுக்கு முத்தம்மாள் என்றொரு மனைவி இருந்தாள்.
முத்தம்மாளின் அப்பா செல்வந்தர் என்பதால் முத்துவுக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லாமல் வேலைக்கும் செல்லாமல் வாழ்ந்து வந்தான்.
ஒரு நாள் செல்வம் கட்டிற்கு விறகு வெட்ட சென்றான்.
காட்டிற்குள் பட்டுப்போன மரத்தை தேடினான், பச்சை மரத்தை அவன் ஒருபோது வெட்டியது இல்லை. காட்டினுள் வெகு தூரம் சென்றும் ஒரு பட்ட மரமும் அவன் கண்களுக்கு தெரியவில்லை, பொழுது சாயும் நேரம் ஆகிவிட்டது. களைப்பு மற்றும் பசியின் காரணத்தால் ஒரு மரத்தின் அடியில் மயங்கி சரிந்தான்.
"அச்சோ, அப்பறம்"
" ம்ம். கேள். நாடு இரவு வன தேவதை காட்டிற்குள் உலாவந்து கொண்டு இருந்தாள். மரத்தின் கீழ் மயங்கி கிடக்கும் செல்வதை தட்டி எழுப்பினாள்,
" மானிடா, யார் நீ? இந்த பங்கர காட்டிற்குள் நீ எப்படி வந்தாய்??" என்றாள் வன தேவதை.
"தாயே, நான்ஒரு விறகு வெட்டி. காட்டிற்குள் இருக்கும் காய்ந்த பட்டு போன மரங்களை வெட்டி சந்தையில் விற்று அதில் வரும் பணத்தைக்கொண்டு தான் நானும் என் மனைவியும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்,
இன்றும் காய்ந்த மரத்தை தேடிக்கொண்டு தான் நான் எவ்வளவு தூரம் வந்தேன். பசியாலும், களைப்பாலும் மயக்கமுற்று இங்கே சரிந்தேன்" என்றான்.
உடனே வன தேவதை அவனுக்கு உணவும் தண்ணீரும் தந்தாள். செல்வம் நன்றி கூறி சாப்பிட தொடங்கினான்,
" மானிடா, காட்டிற்குள் நிறைய பச்சைமரங்கள் இருக்கையில் நீ ஏன் காய்ந்த மரத்தை தேடி அலைந்தாய்??" என்றாள் வன தேவதை.
"தாயே, பச்சை மரங்களை நான் ஒருபோதும் வெட்டியது இல்லை, அவைகள் இருப்பதால் தான் சுத்தமான காற்று கிடைக்கிறது, மழை கிடைக்கிறது, அதும் இல்லாமல் ஒரு மரத்தில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. ஒரு மரத்தை அழிப்பதால் அந்த உயிரனங்கள் அழியவும் வாய்ப்புகள் இருக்கின்றன" என்று கூறி கொண்டே பாதி உணவினை மடித்து வைத்தான்.
"மானிடா, நீ கூறியது என்னை மகிழ்ச்சி அடைய வைத்தது, அது இருக்கட்டும் பாதி உணவினை ஏன் மடித்து வைத்திருக்கிறாய்??" என்றாள் வன தேவதை.
"தாயே, அங்கே என் மனைவி சாப்பிடாமல் எனக்காக காத்துக்கொண்டு இருப்பாள், அவளுக்காக தான் நான் பாதி உணவினை எடுத்து வைத்துள்ளேன், நான் சாப்பிட்ட உணவு காட்டிலிருந்து வீட்டிற்கு செல்லும் வரை எனக்கு வலிமையை தரும், நான் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும்" என்றான்.
"மானிடா, உன் அன்பினை கண்டு நான் பூரித்தேன், இந்த இந்த ஏந்திரத்தை பெற்றுக்கொள்" என்றாள்.
" பாட்டி பாட்டி, ஏந்திரம்னா என்ன??" என்றாள் பிரியா.
" அது வேற ஒன்றும் இல்லை, அந்த காலத்தில் தானியங்களை மாவு போன்று அரைக்க உதவும் இரு கற்கள்" என்றாள்.
" ஓ, மேல ஒரு கல்லு கீழ ஒரு கல்லு இருக்குமே, மேல இருக்குற கல்லுல கூட ஒரு கை புடி இருக்குமே, அத பிடிச்சிகிட்டு சுத்துவோமே, அது வா??" என்றாள்.
"அதே தாண்டி என் செல்லம், சரியாய் கண்டு பிடிச்சிடியே??" என்றார் பாட்டி.
"சரி சரி சொல்லுங்க"
"ம்ம், அந்த ஏந்திரத்தை செல்வம் வாங்கிக்கொண்டான், பின் அந்த வன தேவதை அவன் காதில் ஒரு மந்திரத்தை கூறினாள்.
"மானிடா, நான் கூறிய முதல் மந்திரத்தை கூறி இந்த ஏந்திரத்தை ஒரு சுட்டறு சுற்றி உனக்கு வேண்டியதை கேட்டால் உடனே கிடைக்கும்" என்று கூறி மறுபடியும் ஒரு மந்திரத்தை அவன் காதில் கூறினாள்.
"மானிடா, நீ கேட்டது உனக்கு தேவையான அளவு கிடைத்தவுடன் நான் இரண்டாவதாக கூறிய மந்திரத்தை கூறினால் அந்த ஏந்திரம் நின்று விடும். மற்றும் இதை யாரேனும் திருடினால் அவர்களுக்கு இதை நிப்பாட்டும் மந்திரம் மறந்து போகும்." என்றாள் வன தேவதை.
"தாயே, மிக்க நன்றி! நானும் என் மனைவியும் நலமாக வாழ ஆசிர்வதியுங்கள்" என்றான் செல்வம்.
"16 செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ்வீராக" என்று ஆசிர்வதித்து வன தேவதை மறைந்தாள்.
வீடு வந்து சேர்ந்த செல்வம் மனைவியிடம் நடந்ததை அனைத்தையும் கூறினான், மகிழ்ச்சி அடைந்த செல்வி வன தவதைக்கு நன்றி கூறினாள்.
பின் இருவரும் சேர்த்து என்ன கேட்பது என்று பேசினார். பின் முதலில் உணவு கேட்பதாக முடிவெடுத்து மந்திரத்தை கூறி ஏந்திரத்தை சுற்றினான். போதுமான உணவு கிடைத்ததும் இரண்டாவது மந்திரத்தை கூற ஏந்திரம் நின்றது.
இருவரும் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுத்தனர்.
இரவு மந்திரத்தை கூறி பொன்னும் பொருளும் கேட்டனர். நிறைய பொற்காசுகளும் நகைகளும் குவிந்தன, நகைகளை பத்திரமாக எடுத்து வைத்தனர் பின் குவிந்து கிடக்கும் பொற்காசுகளை அளக்க தனது தம்பியின் வீட்டில் நெல் அளக்கும் மரக்காவை வாங்கி வர கூறினான் செல்வம்.
செல்வி அங்கே சென்று மரக்காவை கேட்க முத்தம்மாளுக்கு சந்தேகம் வந்தது, வெறும் பயல் வீட்டில் அளக்க என்ன இருக்கிறது என்று நினைத்து செல்விக்கு தெரியாமல் மரக்காவின் அடியில் புளியை தட்டையாக தட்டி கொடுத்தாள்.
மரக்காவை வாங்கிகொண்டு விட்டிற்கு வந்த செல்வி, செல்வதுடன் சேர்ந்து பொற்காசுகளை அளந்து நெற்களயத்தில் கொட்டி வைத்தனர். பின் மரக்காவை திரும்ப கொடுத்தாள் செல்வி.
மரக்காவை சோதனையிட்ட முத்தம்மாள் அதனடியில் பொற்காசுகள் இருப்பதை பார்த்து அதிர்ந்தாள். இதனை தன் கணவனிடமும் கூறினாள். எப்படி ஒரே இரவில் மரக்காவை போட்டு அளக்கும் அளவிற்கு பொற்காசுகள் வந்தன என்று குழம்பினான்.
சிலநாட்கள் கழித்து பெரும் செல்வந்தன் ஆனான் செல்வம், ஏழை எளிய மக்களுக்கு தான தர்மங்கள் செய்தான். மக்கள் மத்தியில் மதிப்பு மிக்கவன் ஆனான்.
இதனை கண்டு பொறுக்காத முத்து, செல்வத்திடம் தான் வறுமையில் வாடுவதாகவும் சாப்பாட்டிற்கே கஷ்டபடுவதாகவும் நடித்தான், அதை உண்மை என நம்பிய செல்வம் முத்துவிற்கு நிறைய பொற்காசுகளை அள்ளிக்கொடுத்தான். அதை கண்கொண்டு அதிர்ந்த முத்து "எப்படி எவ்வளவு செல்வங்கள் உனக்கு கிடைத்தன அண்ணா?? எனக்கு அந்த ரகசியத்தை கூறு" என்றான்.
தான் கூறுவதை யாரிடமும் கூறக்கூடாது என்று சத்தியம் வாங்கிய பின் அனைத்தையும் கூறினான் செல்வம். ஆனால் வன தேவதை எச்சரித்ததை சொல்ல மறந்து போனான். ஏன் என்றால் தன் தம்பி அதை திருட மாட்டன் என்று நம்பினான்.
"அண்ணா, நான் அந்த ஏந்திரத்தை பார்க்க வேண்டும்" என்றான் முத்து. அதனை பார்த்ததும் "எனக்கும் அந்த மந்திரத்தை சொல்லிக்கொடு " என்று பிடிவாதம் பிடித்தான் முத்து. எவ்வளவு சொல்லியும் கேட்ட்காததால், சரி என்று அந்த மந்திரத்தை கூறினான் செல்வம்.
முத்துவும் மகிழ்ச்சியுடன் வீட்டிற்க்குசென்று அனைத்தையும் தன் மனைவி முத்தம்மளிடம் கூறினான். இருவரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினர். அன்று இரவே அந்த ஏந்திரத்தை திருடிக்கொண்டு ஊரைவிட்டு ஓடினர் முத்துவும் அவனது மனைவி முத்தம்மாளும். பயணத்திற்கு தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைத்திருந்தால் முத்தம்மாள், வழியில் சமுத்திரம் வரவே ஒரு படகில் ஏறிக்கொண்டு சென்றனர்.
"அச்சச்சோ அத திருடிக்கிட்டு போய்ட்டாங்களா??" என்றாள் ப்ரியா.
"ஆமாம்" என்று பாட்டி கதையை தொடர்ந்தார்.
முத்துவிற்கு பசிக்கவே முத்தம்மளிடம் உணவு கேட்டான். தான் சமைத்த உணவினை பறிமாறினாள் முத்தம்மா.
"அடியே, கூறு கெட்டவளே, சாப்பாட்டுல உப்பா போடா மறந்துட்டியாடி??" என்றான் முத்து.
"அதுக்கு என் கத்துறீங்க?? இதோ இந்த ஏந்திரத்துல மந்திரத்தை சொல்லி உப்பா வர வச்சி போட்டு சாப்பிடுங்க" என்றாள்.
"அதுவும் நல்ல யோசனை தான்" என்று கூறி முத்து மந்திரத்தை கூற ஏந்திரம் சுற்ற ஆரம்பித்தது. சுற்றிக்கொண்டே இருந்ததால் படகு முழுவதும் உப்பு நிரம்பியது.
"ஐயையோ, என்னங்க எதையாவது சொல்லி இத நிப்பாட்டுங்க இல்லேன்னா நாம கடலில் மூழ்கி செய்திடுவோம்" என்று கத்தினாள்.
"எனக்கு ஒரு மந்திரம் தானே தெரியும், இத நிப்பாட்டுற மந்திரத நான் மறந்துட்டேனே" என்று கத்தினான். ஏந்திரம் சுட்டிக்கொண்டு இருக்கவே உப்பு அதிக அளவு கொட்டுகொண்டே இருந்தது. படகும் மூழ்கியது. இருவரும் இறந்தனர். இன்றும் அந்த ஏந்திரம் சுற்றிக்கொண்டு இருப்பதால் தான் கடல் நீர்
உப்பாக இருக்கிறது" என்று கதையை முடித்தார் பாட்டி.
"ஓ அப்படியா??" என்றாள் பிரியா.
இருவரும் வீடு திரும்பினார்கள்.
குளித்துவிட்டு சாப்பிட உட்கார்ந்த ப்ரியா சாப்பாட்டை உண்ண ஆரம்பித்தாள்.
"பாட்டி, சாப்பாட்டுல உப்பு கம்மியா இருக்கு" என்றாள்.
"ஏந்திரத்தை சுற்றி மந்திரம் சொல்லு உப்பு வரும் எடுத்து போட்டு சாப்பிடு" என்றார் பாட்டி.
"ஹ ஹ ஹ, பாட்டி எனக்கு மந்திரம் தெரியாதே" என்றாள். இருவரும் சேர்ந்து சிரித்தனர்.
நீதி: (நீங்கள் தான் சொல்ல வேண்டும்)