வல்லம்- ஏகௌரியம்மன்
பறவைகள் பாட
குளிர்ந்த முகிலாட
தென்றலும் நதியும் இசைக்க
இயற்கை சூழ்ந்த
அழகிய நதிக்கறையில்
தவஅக்னியொன்று
வானுலகை சுட்டது.
எண்ணமோ கொடுமை!!
செய்த தவமோ கடுமை!!
"என்ன வரம் கேட்பானோ
இந்தக் கொடூரன்?"
நடுங்கினர் தேவாதிதேவரும்.
தவத்தின் வெட்பம்
கயிலாயம் தாக்க
காட்சி தந்தார்
கயிலாயனாதர்!!
அகமகிழ்ந்தான்
அசுரன் –தஞ்சாசுரன்!!
“என்ன வரம் வேண்டும்?”
ஆழ்ந்து யோசித்தான்,
மரணமில்லா பெருவாழ்வை
மறுத்திடுவான் என்றறிந்து,
தந்திரமாய்க் கேட்டான்
“ஆண் மகனால் நான் அழியேன்,
தவம் செய்த தடம்
தம் பெயரால் விளங்க”
தஞ்சாசுரன்!!
“தஞ்சனே!!
உனக்கு மரணமெனில் பெண்ணாலே
நீ தவம் செய்த இவ்விடம்
‘தஞ்சாவூர்’என புகழ்பெறும்”
இசைந்தான் ஈசன்!!
திட்பம் பெற்றவனாய்
மற்றவை மறந்தவனாய்
சரதம் சாய்த்து
பவித்திரம் தேய்த்து
மண்ணுலகை வென்று
விண்ணுலகும் சென்று
அசுர வெறிபிடித்தாடினான்
தஞ்சாசுரன்.
அற்றம் அறிந்து
அல்லலுற்று ஆற்றாது
பிரம்மனுடன் தேவர்கள்
திருமாலை துதிக்க,
பெண்ணை பொருட்டா மதிக்கா தஞ்சன்
பெண்ணால் அழிவானென அருள,
தன்னுள் பாதி பார்வதியை
பரமசிவன் பார்க்க
தேவி கௌரியானாள்.
உக்கிர உருவெடுத்த
சாந்தசொரூபி மகாசக்தி
கடுங்கோபம் கொண்டு
எண்கர ஆயுதமேந்தி
உரத்து கர்ஜித்து
அசுரர்கள் வெருவ
சிம்மவாகினியாய்
சீற்றமுடன் புறப்பட்டு
அம்புமழைப்பெய்தவனை
சிரம்நீத்துக்கோறி
விஷ்வரூபம் எடுத்தாள்
ஈஸ்வரி!!
.
ஈசனின் இணையே!!
ஈகையின் வித்தே!!
உயிர்காக்கும் அன்னையே!! நீ
உக்கிரத்துடன் அலைந்தால்
உலகம் தாங்குமா?
பூமி வரண்டு மக்கள் தவிக்க,
காரணம் அறிந்த கற்பகத்தினையன்
கதிரொளிசுடரன்
‘ஏகௌரி சாந்தம் கொள்” என கூற
நெல்லிப்பள்ளத்திலே மூழ்கி
பூங்காளிவனத்திலே
கோவில் கொண்டாள் ஏகௌரியம்மனாய் !!