இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தாத்தா - வினோதன்

என் மரபியல் குறியீடுகளின்
முதல் பிரதியே - நான் கண்ட
முதல் பரிதியே - வளர்த்தாய்
என்னையுன் மகவாய் கருதியே,
கண்டதில்லை - என்னை வளர்த்ததாய்
கண்டேன் வளர்த்த தாய் !

அன்பால் - எல்லோரையும்
தன்பால் இழுக்கும் - தானும்
வழுக்கும் இயல்புனது !
நிலையான அன்பே - உன்
விலையில்லா கலையானது !

நாளைய மகிழ்விற்காய்
நடப்பைக் கொல்லும் - சாமானியர்
நடுவே - இருப்பதைக் கொண்டு
மற்றோர் மனம் வென்று
மகிழக் கற்று கொடுத்தாய் !

சூடான நீருக்கும்
கட்டை விரலுக்குமான
தொடர்பை - குளிக்கக்
கற்றுத் தருகையில்
தருவித்தாய் - அதுவே
பின்நாளில் - என்னழுக்கையும்
அழகையும் தரவள்ளதானது !

பா வளைய இரும்புத்
துணுக்குகளால் கட்டப்பட்ட
காந்திகளை - விடுவிக்க
முடியாமல் வேண்டுமென்றே
திணறி - என் நகைப்புக்கு
ஆளாகி நகைப்பாய் - என்
நகைப்பை சுவைப்பாய் !

நம் - போர் நிறுத்த
ஒப்பந்தங்கள் - அமலுக்கு
வந்த பின்னர் - உன்னுள்
ஓர் காதலியைப் பார்க்கிறேன் - உன்னை
ஓர் காதலியாய் பார்க்கிறேன் !

என்னை விடவும் - என்னைப்
பற்றி அக்கறை கொள்ளலும்
தக்க எள்ளல் கொள்ளலும்
உன் வாடிக்கையானது
எனக்குநல் வேடிக்கையானது !

உன் நாக்குக்கு பழக்கப்பட்ட
பழமொழிகள் - என் காதுக்கும்
உன்னால் பழக்கப்பட்டது !
உயிர் அறிவியல் மட்டுமல்ல
உயர் வாழ்வியலும் படிக்க
வைத்தாய், திறம்படவே !

உன் கண்ணீர் சுரப்பிகளை
கசிய வைக்கும் - என் கவி
வரிகளை நீ போற்றுவாய்,
எனக்கு மட்டும்தானே தெரியும்
அது உன்னைப்பற்றிய
உரைநடையென்று - உன்
உயர் நடையென்று !

வீடுதொடும் யாரிடமும்
என்பெருமை பேசுகையில்
உன்னிருமல் ஒழியுமிடம்
கடவுளுக்கே வெளிச்சம் !

வளர்ந்த குழந்தையுன்னை
குழந்தையாய் வளர்க்க
ஓர் வரம் வேண்டுவேன்,
ஜென்மங்கள் உண்டெனில் !

உலகில் ஏதேனும் ஈடாகுமா
சவரம் செய்யபடாத
நிறமிழந்த முகமுடியுடன்
என் தாத்தா தரும்
ஒற்றை முத்தத்திற்கு ?

(எனது தாத்தா திரு. வேங்கடாசலம் அவர்களின் எண்பதாவது அகவையை கடக்கிறார் இன்று. புலவரும் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியருமான அவரே என் கவிதை முதல் அறிவியல் ஆராய்ச்சியாளன் வரையிலான அத்தனை வெற்றிக்கும் அடித்தளம், ஆரம்பம் எல்லாமே.

தாத்தாவின் ஒற்றை முத்தம் என்ற தலைப்பில் ஏற்கனவே பதிவான கவிதையே இது - மீள் )

எழுதியவர் : வினோதன் (14-Apr-14, 12:08 pm)
பார்வை : 3006

மேலே