தாயும் ஆனான் தந்தையும் ஆனாள் - திருநங்கைகள் தினம் 15042014
தாயும் ஆனான் தந்தையும் ஆனாள்
- படைப்பு சி. அருள்மதி
இருவேறு ஆன்மாக்கள்
குடியிருக்கும் ஒரு கூடு.
ஒரு ஆன்மாவிலிருந்து
இன்னொரு ஆன்மாவிற்குள் பயணிக்கிறேன் .
ஒரு ஆன்மாவைக் கொன்று
மற்றொன்றை உயிர்ப்பிக்க முயற்சிக்கிறேன் .
பால்வழித்திரளில்
நான் ஆண் சூரியனுமல்ல !
பெண் நிலவுமல்ல !
வேற்று கிரகவாசியாய்
நேசிக்க மறுக்கும் பூமி .
மலட்டு மரங்கள்
பூவாத் தாவரங்கள்
மலட்டு விலங்குகள்
முளையா விதைகள் போல்
நாங்கள் யார் ?
திருவும் திருமதியும்
சேர்ந்தளித்த வெகுமதி
சுமப்பது வெறும் 'அவமதி' .
பெண்ணாய் மாறிவிட்ட நான்
ஆணாய் அரிதாரம் பூசி
வாழ்க்கை நாடகத்தில்
எத்தனை நாட்கள் நடிப்பது ?
சுயநிர்ணயம் மறுக்கப்பட்ட பாலினமா ?
மண்புழுவிற்கு பால் நிர்ணயம் உண்டாம் !
உங்கள் கேலி கிண்டலால்
மண்புழுவாய் நெளிகிறோம் நாங்கள் !
மூத்த மகனை
என் தந்தை இழக்கத் தயாராக இல்லை .
பெண்ணாய் மாறிய எனக்கு
பூப்பெய்தல் உண்டா ?!
திருமணம் உண்டா ?!
பேறுகாலம் உண்டா ?!
செலவேதும் இல்லை ஆனாலும்
மகளாகிப் போன மகனை ஏற்க மறுக்கும் தந்தை
குடித்துக் குடித்து
ஈரல் வெந்த அப்பனுக்கு
ஐந்து இலட்சம் செலவழித்தாள்.
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்கு
உதவவும் மறுத்துவிட்டாள் அன்பு அன்னை .
பெண்ணாய்ப் பிறந்தேன்
ஆணாய் உணர்ந்தேன்
வட்டத்தினுள் சதுரத்தையும்
சதுரத்தினுள் வட்டத்தையும்
பொருத்தப் பார்க்கும் சமுதாயம் .
நான் ஆணாகிப் போனதை
அப்பாவிடம் சொன்னேன்
ஆண்பிள்ளை இல்லை என்று
அங்கலாய்த்தவர் அகமகிழ்வார் என்று !
ஆனால் அதிர்ந்து போய்
அங்கீகரிக்க மறுத்துவிட்டார்
பட்டாம்பூச்சியிலிருந்து
கூட்டுப்புழுவாய் மாறிவிட்ட என்னை
தாய்க்கும் பிடிக்கவில்லை !
நான் ஆணாகிப் போனதை
தங்கையிடம் சொன்னேன்
வெகுளியாகச் சொன்னாள்
எனக்கு அக்கா வேண்டாம்
அண்ணன்தான் பிடிக்குமென்று !
ஆணாய்ப் போய் நிற்கிறேன்
கண்ணாடி முன்
பெண்ணாய்த் தெரிகிறது பிம்பம்
நான் மெய்பிம்பமா ? பொய்பிம்பமா ?
மெய்நிழலாய் பொய்நிஜமாய்
உணர்வுச் சண்டையில்
உள்ளம் அழுகிறது !
ஈஸ்ட்ராஜனும் டெஸ்டோஸ்ரோணும்
விளையாடும் ஹார்மோன் சதுரங்கத்தில்
பகடைக்காயாய் உருட்டப்பட்டன
எங்கள் உணர்வுகள் !
மன அழுத்தம் நிரப்பப்பட்ட
பால்பந்துகள் !
பரத்தைத் தொழிலுக்கு
நேர்ந்துவிட்ட பலியாடுகள் !
அங்கஹீனப்பட்ட அவதாரங்கள் !
நடமாடும் அர்த்தநாரீச்வரர்கள் !
மரபுப் பிழை போன்ற
மரபணுப் பிழை நாங்கள் !
திருத்தி எழுதமுடியாத தீர்ப்புகள் !
வினையெச்சம் பெயரெச்சம் போல்
பாலெச்சம் ஆகிப்போனவர்கள் !
மனிதக் கடலில் தத்தளிக்கும்
பால் தீவுகள் !
அக்கரையா இக்கரையா என்று
ஒதுங்க முடியா
மரபணு ஓடங்கள் !
மெல்லினமாய் மாறிய வல்லினங்கள் !
வல்லினத்தில் ஒளிந்துகொண்ட மெல்லினங்கள் !
மணப்பெண்ணாய் காலையில்
விதவையாய் மாலையில்
ஒரே நாளில் வாழ்ந்து மடியும்
மனித ஈசல்கள் !
பருக முடியாத "திரிந்து போன பால்"(இனம்) !
திருமணங்கள் தீண்டாத பாலினச் சேரிகள் !
திருமணச்சந்தையில் விலைபோகா Bt (மரபணு மாறிய ) கத்தரிக்காய்களா?
என்ன விந்தை
எங்களை காமப்புழுக்கள்
அரித்துத் தின்கின்றன !
அறிவியல் சாபங்கள் !
விடையில்லாப் புதிர்கள் !
மொழியில்லா எழுத்துக்கள் !
பால் மரூ உ க்கள் !
அர்த்தமில்லா வார்த்தைகள் !
காதல் மலர்
மலரத் தடை செய்யப்பட்ட
பால்கள்ளிகள் !
பூவாய் இருந்தபோது
தேன் சுரக்காமல்
தேனீயாய் மாறியபோது
தேன் சுவைக்காமல் இருக்க விதிக்கப்பட்டவர்கள் !
அறிவியல் சாபங்கள் !
வாசமில்லா வாழ்க்கை பெற்ற
கனகாம்பரப் பூக்கள் !
குரோமோசோம் குளறுபடிகள் !
பால் வற்றிய மாடுகள் இறைச்சி ஆவதுபோல்
பால் அற்றுப்போன நாங்கள்
இறைச்சியாகிறோம் காமவெறியர்களுக்கு!
ஆணிலிருந்து பெண்ணாய் மாறிய
விஷ்ணு மோகினியாய் !
மோகித்த சிவன் தந்த வாரிசு ஐயப்பனாய் !
கூத்தாண்டவம் புரிந்த சிவன் எங்களின் முகவனாய் !
அரசர்களின் அந்தப்புரத்து
அழகிகளுக்கு அரவணைப்பாய்
இருந்தததால் அரவாணியானோம் !
கருவுறாக் கனியாதல்
தாய் தந்தை இல்லாத் தலைமுறைகள்
குளோனிங்கில் சாத்தியமாம் !
விந்துவும் அண்டமும் விற்பனைக்கு வந்துவிட்டது!
வம்ச விருத்திக்கு வாடகைத்தாயும் வரும்போது
திருநங்கைகள் தாயாகலாம் !
நங்கைதிருக்கள்(பெண்ணிலிருந்து ஆணாய் மாறியவர்கள் ) தந்தையும் ஆகலாம் !
உடல் சுகத்திற்கு மட்டும்
மலட்டு மலர்களிடம் வந்து செல்லும்
மனிதத் தேனீக்கள் எங்களின் உணர்வுகளைக்
தங்களின் விரசக் கொடுக்கால்
கொட்டிவிட்டுச் செல்கின்றன.
பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம்பெண்
பாலன் மீளி மறவோன் திறவோன்
விடலை காளை முதுமகன்
என பதினான்கு நிலைகளிலும்
இனம்காணமுடியா மனிதத் தீவுகள் !
திருமணச்சட்டமும் வன்கொடுமைச்சட்டமும்
கற்பழிப்புக்கு எதிரான சட்டமும்
இந்த மூன்றாம் பால்களுக்கு மறுக்கப்பட்டதா ?
நாங்கள் முலையை அறுத்தெறிந்த கண்ணகியின் உறவுகள்
நீங்கள் புரியும்
‘உளவியல் கொலைகளை’
இன்றோடு நிறுத்துங்கள் !
தீவிரவாதிக்கும் காமுகனுக்கும்
கொலைகாரனுக்கும் அரசியல்வாதிக்கும்
இடமிருக்கும் இப்புவியில்
அரவாணிகளுக்கும் இடம் வேண்டும் 1
வழி வேண்டும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு!
வாழ்வாதார உரிமை பெற
மூன்றாம் பாலுலகம் போர் தொடரட்டும் !
திருநங்கைகள் தினமான இன்று இக்கவிதையை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மகிழ்வுடன்
கவிஞர் சி. அருள்மதி