அர்த்தமற்ற வார்த்தைகள்

என்னோடு மட்டும் பேசும்
ஊமையாகிவிடு நீ
யாருமற்ற வேளைகளில்
யாருமில்லையென
உன் சிலுசிலு குலுகுலு குரலால்
என் காதோரம் கிசுகிசுத்து
இதயத்தின் தாழ்வாரத்தில்
யாதுமாகி விடு
பேசுவதற்கு சேதியற்று
மௌனக் குழந்தையின்
மெல்லியக் கைகள்
நம்மைத் தாங்கிக் கொள்ளும் போது
என் உள்ளத்தின் உள்ளூற பயணித்து
உள்ளதையெல்லாம் உளறிவிடு
அர்த்தமற்ற வார்த்தைகளால்
அவ்வப்போது பரவசப்படுத்து
செய்யாத தவறுகளுக்காய்
அடிக்கடி மன்னித்துவிடு
உன் இமைகளை நீட்டியும் சுருக்கியும்
ஆங்காங்கே எச்சரிக்கை செய்தி எழுதிவிடு
விடுமுறை மாதத்தில் அதிகமாக சிரித்து செவ்வாய்க்கு அழைத்துச் செல்
உன்னுள் இருக்கும் என்னையும்
என்னுள் இருக்கும் உன்னையும்
நம்முள் தேடி ஏமாந்து போவோம்