காதல் கடிதம்

அன்பளித்த காதலனுக்கு
வம்பிழுத்த காதலி எழுதுவது,
நலமாய் இருக்க மாட்டாய் நீ. நானும் இங்கு நலம் இல்லை என்பதால்.

இதயத்தைக் கொஞ்சம் அடகுவைக்கவா என்று பேரூந்துத் தரிப்பிடத்தில் நீ கேட்டது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாய் என் செவியோரம் ஊர்ந்து தரித்தது. அடகுப் பொருளை படகில் வைத்த கிறுக்கி நான் இன்று துடுப்பின்றி துரத்தப்படுகிறேன். தடுப்பொன்றில் நிறுத்தப்படுகிறேன். உடுப்பின்றி வருத்தப்படுகிறேன்.

உன்னை மறுதலித்த காரணம் இன்னும் புரியல. இன்று என்னைக் காதலிக்க மரணம் கூட விரும்பல. நீ நல்லவன் இல்லை என்பதால்தான் உன்னை நான் காதலிக்கவில்லை. உன் காதலைப் புரிந்து கொள்ளாத மகா மட்டமானவளைக் காதலித்த நீ கெட்டவன் தானே. ஒரு ஏமாளிக்கு நான் வாழ்வளிக்க பேசாமல் வாழ்வழிக்கலாம் என்றுதான் காதலிக்கவில்லை. நான் ஒவ்வொருமுறை உன்னை ஏமாற்றும் போதும் கிடைக்கமாட்டேன் என்று தெரிந்தும் மடத்தனமாக நம்பினாயே! நீ எமாளியல்லாமல் வேறென்ன?

அதெப்படி நீயிருக்கும் நாட்களில் என் மனம் இறுக்கும். உன்னைத் துறந்த நாள் முதல் மனம் ஈர்க்கும். இந்த மாயம்தான் இன்னும் புரியல.
பேரழகி என்று என்னை நினைத்துப் பாரழகன் தேடியது மன்னிக்க முடியாத குற்றம். காதலின் அசிங்கமே அழகு பார்ப்பதுதான் என்று இப்போது புரிவதால் என்னை நானே மன்னிக்கலாமா என்ன?

அன்பளிப்பு என்றால் வெறும் பொருள் என்று சொல்லித்தந்த என் பணத்திமிர் உன் இதயத்தை மறைத்துவிட்டது.
சொல்லுக்குத் தகுந்தவாறு நீ அன்பு அளித்தாய். தமிழ் தெரியாத நான்தான் பொருள் என்று பொருள்கொண்டேன்.

என்னை நான் காதலிக்கும் சுயநலவாதியாய் இருந்தும் கூட உன் காதல் புரியாமல் போனது வியப்புத்தான் எனக்கு. உன்னை ஏய்த்தே ஓட்டியிருக்கலாம் எனக்கு.
என் மொத்தக்குனமும் அன்று எதிர்மறையாய் சிந்தித்தது. உன் தலைமறைவின் பின்தான் என் தலையே நிமிர்ந்துள்ளது.
என்னைத் தலைநிமிர்ந்து நடக்கவைத்த நீ என் தலையணைக்குக் குடிவரும் நாள் எப்போது?

எழுதியவர் : மது மதி (22-Apr-14, 1:35 am)
Tanglish : kaadhal kaditham
பார்வை : 222

மேலே