என்ன செய்ய சொல்வீரே
களிமண்ணில் பிடித்து வைத்து
>>>>>கடவுளென்று கும்பிடுவார் !
கருவில் சுமந்து வளர்த்தவளை
>>>>>நிர்கதியாய் விட்டிடுவார் ...!!
பிடித்த நடிகர் கட்அவுட்டுக்கு
>>>>>பாலபிஷேகம் பண்ணிடுவார் !
பசியால் குழந்தை அழுதாலும்
>>>>>பாராமுகமாய் சென்றிடுவார் ...!!
மதுவிலக்கு பற்றி மேடையிலே
>>>>>வாய்கிழியப் பேசிடுவார் !
மாலைப்பொழுது கழிந்து விட்டால்
>>>>>மதுகுடித்து சரிந்திடுவார் ...!!
அன்னை மொழிக்கீ டில்லையென
>>>>>அழுத்தமாகச் சொல்லிடுவார் !
ஆங்கில வழிப் பள்ளியிலே
>>>>>அவர்பிள்ளை படித்திடுவார் ...!!
லஞ்சம் பெறுவது குற்றமென
>>>>>லட்சியத்துடன் முழங்கிடுவார் !
லட்சங்கள் வாரிக்கொடுத்து
>>>>>காரியம்நிறை வேற்றிக்கொள்வார் ...!!
பகுத்தறிவு வாதி போல
>>>>>பக்குவமாய் தெரிந்திடுவார் !
பூனை குறுக்கே வந்திடிலோ
>>>>>அபசகுனமாய் கருதிடுவார் ...!!
முகத்தைமூடி மறைத்துக் கொள்ள
>>>>>முகமூடி மாட்டிடலாம் !
முரணான மனம் மறைக்க
>>>>>என்னசெய்ய சொல்வீரே ...???