ரௌத்திரம் பழகு
எங்கெங்கு காணிலும் வன்முறை தானிந்த
நாட்டில் இருக்கின்ற மூட ரெல்லாம்
சிங்கத்தின் தோலில் உலவிடும் அற்பச்
சிறுநரி என்பது உறுதி யாச்சு !
தங்கத்துக்காகவே உன்னை வழியினில்
நிறுத்தி வழிப்பறித்து உன்னருமை
அங்கத்திலே சில நாய்களும் மூர்க்கத்தில்
ஆபாசம் செய்யதிட முற்படினும்
சங்கத் தமிழ்கண்ட பெண்ணினத்தார் பெருஞ்
செந்தமிழ் மக்களின் வீரத்தினை
பங்கம் விளைத்திடும் பாதகன் மேலுடன்
பாய்ச்சிடு கண்ணே ரௌத்திரமாம் !
வேலைக்குப் போகும் பொழுதினிலே கையில்
வைத்துக்கொள்வாய் மிளகாய்ப் பொடியை
சேலைக்குப் பங்கம் வந்தால் அதைதான் உடன்
செலுத்திடு கனியே பாதகன் மேல்
மூலைக்குப் பொய் முடங்கிடாதே நீயும்
முளைக்கும் பகையை அறுத்துவிடு
லீலைக்கும் அஞ்சுதல் கூடாதடி வெகுண்
டெழுந்திடு பெண்ணே ரௌத்திர மாம் !
மானத்தைக் காத்திடக் கத்திஎடு உன்னை
முடக்கிடும் சாத்திரம் எத்தி விடு
வானைப் பிளக்கின்ற மின்னலைப் போலவே
வஞ்சகர் நெஞ்சைப் பிளந்து விடு
நாணத்தைக் கொண்டநற் பெண் குல ஜோதியின்
சக்திகள் யாவையும் ஒன்றாக்கி !
பாணத்தை எய்திடு பைங்கிளியே நீயும்
பாய்ந்தெ ழிதன்பேர் ரௌத்திரம் தான்
விவேக்பாரதி
படம் : முல்லை