இன்பம் எய்ய இணங்கு --

எனக்கு எனக்கென்று எங்கும் எதிலும்
மனக்கணக்குப் போடும் மனிதா..!-உனக்கென்று
ஒன்றும் எடுத்து உலகுக்கு வாராஉன்
தன்னலத்தில் என்ன சிறப்பு?

மரணம்உன் வாசல் மணிக்கதவை தட்டும்
தருணத்தில் வந்து தாழிட்டே -கரணம்
அடித்தாலும் காலன் அவன்வேலை தன்னை
முடித்தேதான் செல்வான் முயன்று.

வாழ்கின்றக் காலம் வழிஎங்கும் உன்னை
சூழ்கின்றத் துன்பம் துடைத்தெறிந்து-ஆழ்கின்ற
அன்பால் அகிலத்தில் அல்லல்கள் வேரறுத்து
இன்பத்தை எய்ய இணங்கு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (23-Apr-14, 2:27 am)
பார்வை : 70

மேலே