வானவில்லுக்கு ஒரு கவிதை

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

*வானவில்லுக்கு*
*ஒரு கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈


*வானவில்*

வான் மங்கையை
காதலன்
கைபிடித்து இழுக்கும்போது
உடைந்த
வளையல் துண்டுகளோ ?

ஒருவேளை
வான் உலகத்திலும்
கோலிப்பண்டிகை
கொண்டாடுகிறார்களோ?

தேவலோகத்திலும்
கட்சிகள்
ஆரம்பித்து விட்டார்களோ ?

சீதையை மணக்க
இராமர்
வில்லை உடைத்தது போல்....
வானுலகத்தில்
எந்தப் பெண்ணை மணக்க
இந்த வில்
வைக்கப்பட்டுள்ளது...?

சூரியன்
ஒளிக்கரத்தினால் எழுதும்
கவிதை தான்
இந்த வானவில்லோ ?

மழையை வரவேற்க
வைக்கப்பட்ட
அலங்கார வளைவுகளோ ?

ஆகாயப் பள்ளி
அறிவியல் ஆசிரியர்
நிறப்பிரிகை
சோதனையை செய்து காட்டி
மாணவர்களுக்கு
பாடம் நடத்துகிறாரோ ?

தூறல் மலையில்
வான்மங்கை
காயப்போட்ட
வண்ணச்சேலை
நனைகிறதோ?
எடுக்க மறந்து
எங்குச் சென்றாளோ?

மேகச் சுவரில்
ஔிக்கதிர் தூரிகையால்
சூரியன் வரைந்த
வண்ண ஓவியமோ....?
இந்த வானவில்....

*கவிதை ரசிகன்*

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

எழுதியவர் : கவிதை ரசிகன் (28-Jun-24, 8:02 pm)
பார்வை : 31

மேலே