தேர்தல் திருவிழா ​​முடிந்தது


நடந்து முடிந்தது தேர்தல் திருவிழா
நடக்க இருக்கிறது நாட்டில் மறுவிழா !
நடந்து முடிந்ததோ காதணி வைபோகமே
நடக்க இருப்பதோ பூச்சூட்டு விழாவன்றோ !

மைபூசும் விழாவிற்கு மயங்கி சென்றோமே
கைகாசு செலவிற்கு கையேந்தி நின்றோமே !
காய்ந்தது மைமட்டுமா ஓய்ந்தது இடிமட்டுமா
கால்தேய நடந்தவரின் முகமூடியும் கிழிந்ததே !

வானத்தில் பறந்தவர் நமை மறந்தேபோவார்
வாகனத்தில் வந்தவர்கள் வாயடைத்து நிற்பர் ! ​​
ஜோடியாக வந்தவர்கள் சோர்ந்து போவார்கள்
ஓடியாடித் திரிந்தவர்கள் ஒடுங்கி போவார்கள் !

வேடிக்கைப் பார்த்தவர்கள் வேலையை தொடர்வர்
கேளிக்கை முடிந்ததால் கேள்விக் குறியாவோம் !
இருந்தவர் வருவாரா சேர்த்ததை இருமடங்காக்க
இல்லாதவர் தேறுவாரா இமயமளவு தேற்றிடவே !

எவ்வழியானாலும் நம்வழி ஒருவழிதானே என்றும்
ஏறிட்டுப் பார்ப்போமே நாம் ஏமாந்தும் போவோமே !
முடிசூட்டு விழாவை முண்டியடித்துப் பார்ப்போமே
முடிவிலே நாம்தான் ஆண்டியாகிப் போவோமே !

செய்ததையும் செய்பவரையும் நாம் மறப்போமே
குற்றமே செய்தாலும் தவறாமல் மன்னிப்போமே !
பாட்டாளியும் பாமரனும் பாவம் செய்தவன்தானே
படித்தவனும் படிக்காதவனும் பாரில் சமம்தானே !

தெருவிழா ஆனாலும்
கூடியாடி மகிழ்ந்திடுவோம் !
தேர்தல் திருவிழா ஆனாலும்
தெரிந்தே கூடுவோம் !
வல்லரசு ஆகாது இந்தியா
நல்லரசு அமையாவிடின் !
வறுமைக் கோடும் மறையாது
நாம் மறையும்வரை !

​பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (25-Apr-14, 5:51 pm)
பார்வை : 251

மேலே