ஜிஹாத் ஒரு பார்வை - நாகூர் கவி

திருமறையும் ஹதீதும் ஜிஹாதுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அப்படியெனில் இந்த ஜிஹாத் என்பது என்ன?

முஸ்லீம்கள் முஸ்லீமல்லாதவர்களோடு சண்டையிட்டு அவர்களை கொல்வது, தீவிரவாதம், வன்முறை போன்றவைதான் ஜிஹாத் என்று அறியாதவர்கள் நினைத்துக்கொண்டும், சொல்லிக்கொண்டும் இருக்கிறார்கள். உண்மையில் ஜிஹாத் என்ற அரபிச்சொல் பல அர்த்தங்களைத் தரவல்ல ஒரு விரிந்த பொருட்செறிவுள்ள சொல்லாக உள்ளது. திருமறையில் இறைவன் விசுவாசிகளைப் பார்த்து:-

(விசுவாசிகளே!) நீங்கள் அல்லாஹ்வுடைய பாதையில் முயற்சிக்க வேண்டியவாறு முயற்சியுங்கள். (சூரா அல்ஹஜ்ஜூ 22:78)

என்று கூறுகிறான்.

இந்த முறையான முயற்சியைத்தான் அரபியில் 'ஜிஹாத்' என்ற சொல் குறிக்கிறது. ஜிஹாத் என்றால் கடுமையாக முயற்சித்தல், பகீரதப் பிரயத்தனம் செய்தல் என்று அர்த்தம். முயற்சி செய்தல், முனைப்புடன் செயல்படுதல் போன்ற பொருள்களை தரும் ஜஹத, ஜீஹ்தூன் என்னும் மூலச் சொற்களிலிருந்து ஜிஹாத் வருகிறது. மேற்குறிப்பிட்ட திருமறையின் வசனத்திலும் முயற்சித்தல், பிரயாசைப்படுதல் என்று பொருளில்தான் ஜிஹாத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மனக்குரங்கின் சேஷ்டைகளை ஒடுக்கி, ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு, அகத்தூய்மையை அடைவதற்காக ஒரு மனிதன் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கும் ஞானவான்கள் ஜிஹாத் என்றே பெயரிட்டனர். இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் பல ஹதீதுகள் உள்ளன. உதாரணமாக " இறைவனுக்காக, தனது மனதுடன் போராடுவதே சிறந்த ஜிஹாத் ஆகும். என்று பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில், தங்களை எதிர்த்துக் தாக்கியவர்களோடு போர் செய்து, தங்களையும் தங்களுடைய மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை முஸ்லிம்களுக்கு இருந்ததால், இத்தகைய போர்களையும் ஜிஹாத் என்ற சொல்லால் அழைத்தார்கள். ஆனால் உண்மையில் இப்படிப்பட்ட போர்களைக் குறிக்க அரபியில் கித்தல் என்ற சொல்லே சரியானது. ஜிஹாத் என்பது சரியல்ல என்று மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள திருமறையின் வசனத்தில் "அல்லாஹுவுடைய பாதையில்" என்று வந்திருப்பதை கவனிக்க வேண்டும். வேறு சில வசனங்களில் "அல்லாஹ்வுக்காக" என்று வரும். அல்லாஹ்வுக்காக அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் ஒரு முஸ்லிம் போர் புரிவது என்றால் என்ன என்பதை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, இஸ்லாமிய வரலாற்றில் நடந்த மேற்குறிப்பிட்டது போன்ற ஒரு ஜிஹாதுப் போரில் அலீ அவர்கள் கலந்து கொண்டார்கள். அலீ (ரலி), உமர் (ரலி), ஹம்ஸா (ரலி) போன்றவர்களுடைய வீரம் இஸ்லாமிய வரலாற்றில் காவியத்தன்மை கொண்டது.

தன் எதிரியை கீழேதள்ளி அவன் நெஞ்சின் மீது ஏறி அலீ உட்கார்ந்துவிட்டார்கள். அவனை கொல்ல வாளையும் உருவிவிட்டார்கள். அந்த நேரத்தில் அந்த எதிரி ஒரு காரியம் செய்தான். உயிர் போகப்போகிறது என்று தெரிந்துவிட்ட தருணத்தில் யாரும் செய்ய நினைக்காத, செய்யத்துணியாத காரியம் அது. திடிரென்று அலீயவர்களின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டான். அவ்வளவுதான். அலீக்கும் கோபம் பொங்கியது. ஆனால் என்ன நினைத்தார்களோ, உடனே எழுந்துவிட்டார்கள். "உன்னைக் கொல்லாமல் விட்டுவிடுகிறேன், நீ போய் விடு" என்றார்கள். எதிரிக்கு ஒரே ஆச்சரியம். நாமாக இருந்திருந்தால் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்திருப்போம். ஆனால் அவனோ அலியின் செயலுக்கு விளக்கம் கேட்டான். "முகத்தில் காரி உமிழ்ந்து அவமானப்படுத்தியும் ஏன் என்னை விடுகிறீர்கள்....?" என்று கேட்டான்.

அலீ சொன்னார்கள்: " நீ என் முகத்தில் காறி உமிழ்ந்தபோது எனக்கு பயங்கரமான கோபம் வந்துவிட்டது. உடனே நான் உன்னைக் கண்டம் துண்டமாக வெட்டிப்போட நினைத்தேன். ஆனால் அப்படி நான் செய்திருந்தால், அது என் கோபத்தின் காரணமாக உன்னைக் கொலை செய்ததாகும். இது இறைவனுக்காக நடத்தப்படும் யுத்தம். இதில் என்னுடைய உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்து இந்தப் போரின் புனிதத்தைக் கெடுக்க நான் விரும்பவில்லை".

இந்த பதிலைக் கேட்ட அவன் மனம் மாறி அங்கேயே முஸ்லிமானான் என்பது வரலாறு. பார்ஸி மொழியில்
இயற்றப்பட்ட மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் இந்த நிகழ்ச்சியை விவரித்து சிலாகிக்கிறார்கள். இறைவனுடைய பாதையில், அவனுக்காக போரிடுவது அல்லது போராடுவது என்றால் என்ன என்பதை இந்த நிகழ்ச்சி சிறப்பாக விளக்குகிறது. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது ஜிஹாத் ஆகும் என்ற குறிப்பும் நமக்கு இதிலிருந்து கிடைக்கிறது.

(தொடரும்)...........

எழுதியவர் : நாகூர் ரூமி (29-Apr-14, 12:00 am)
பார்வை : 409

மேலே