இந்தியாவில் சுதந்திற்கு போராடிய மாவீரன் மருத நாயகம் கான் சாஹிப் தொடர்ச்சி-1

யார் ஆற்காடு நவாப்?

ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாய பேரரசு தென்னிந்தியாவில் பலகீனமடைந்தது. யாரும், யாருக்கும் கட்டுப்படவில்லை. ஒவ்வொருவரும் தங்களை நவாபுகள், நிஜாம்கள் என்று சிற்றரசர்களாக அறிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஆற்காட்டை தலைநகராகக் கொண்டு இயங்கிய ஆற்காடு நவாபின் அரசுதான் முதன்மையானதாகவும் , பலமானதாகவும் இருந்தது. இவர்களிடம் அனுமதி பெற்றுத்தான் ராபர்ட் கிளைவின் தலைமையில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் ஆங்கிலேயே வணிகர்களும், படையினரும் தென்னிந்தியாவில் நுழைந்தனர்.


ஆங்கிலேயப் படையில் கான் சாஹிப் :


ஆற்காடு போருக்குப் பிறகு தென்னிந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் செல்வாக்கும்,ஆதிக்கமும் குறையத் தொடங்கியது. அவர்கள் புதுச்சேரியையும், காரைக்காலையும் மட்டுமே தக்க வைத்துக் கொண்டனர். இந்நிலையில் பிரெஞ்சு படையில் இருந்த தளபதிகளுக்கும், கான் சாஹிபுக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் தோன்றியது.

கோபமுற்ற கான் சாஹிப் ஆங்கிலேயப் படையில் ராபர்ட் கிளைவின் அனுமதியுடன் இணைந்தார். தங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தங்களோடு இணைவதில் பெருமகிழச்சி கொண்டனர் ஆங்கிலேயர். ஆனால், அவர்தான் தங்கள் ஆட்சிக்கு பூகம்பமாக மாறப்போகிறார் என்பதை அப்போது அவர்கள் உணரவில்லை.

மருதநாயகம் வீரமும் – பரிசும்


மருதநாயகம் ஆங்கிலேயர் அணியில் இருந்த போது துரதிர்ஷ்டமாக ஒரு போரை சந்திக்க வேண்டி வந்தது. இருவரும் வீரர்கள். மோதிக் கொண்ட அவர்கள் மைசூர் சிங்கம் ஹைதர் அலியும், மருதநாயகமும் தான் என்பது வேதனையான செய்தி!


அந்தப் போர் நடைபெற்றிருக்கக் கூடாது. விதியை என்னவென்பது ? திண்டுக்கல் அருகே போர் நடந்தது. இந்தப் போரில் மருதநாயகம் தோற்றிருக்க வேண்டும் என மனம் நினைக்கிறது. ஆனால் ஹைதர் அலியை தோற்கடித்தார் மருதநாயகம்! ஆங்கிலேயர்கள் பூரித்தனர். தான் யார் என்பதையும், ஹைதர் அலி யாருக்காக போராடுகிறார் என்பதையும் அறியாதகாலத்தில் மருதநாயகம் செய்த போர் அது. இதற்கு ஆற்காட் நவாபின் துரோகம்தான் பின்னணியாக இருந்தது.


நடைபெற்ற தவறுக்கு பிற்காலத்தில் பரிகாரம் தேடினார் மருதநாயகம்! மருந்து தடவினார் ஹைதர் அலி என்ற உணர்ச்சிமிகு செய்திகள் ஆங்கிலேயர்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.


மைசூர் சிங்கம் ஹைதர் அலியையே தோற்கடித்த தால் , புகழின் உச்சிக்குப் போனார் கான் சாஹிபு மருதநாயகம். அதுபோல் திருநெல்வேலி சீமையில் ஆங்கிலேயரை எதிர்த்த பூலித்தேவனுக்கும்,மருதநாயகத்திற்கும் 06.11.1759ல் போர் நடந்தது. மருதநாயகம் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் தளரவில்லை. ஒரேவருடத்தில் 12.12.1760ல் நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு பூலித்தேவனை வென்றார்.


1752 ல் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பாக்கத்தில் பிரெஞ்சுப் படையை மருதநாயகம் வீழ்த்தியது ஆங்கிலேயரையே ஆச்சர்யப்படுத்தியது.


ஒருமுறை 09.11.1757ல் மருதநாயகம் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன் மட்டுமே இருந்தபோது, நூற்றுக்கணக்கான எதிரிகள் அவரை முற்றுகையிட்டனர். அதில் அவர் காட்டிய வீர தீர செயல்களும், அதுபோல் மேலும் பல வெற்றிகளும் அவருக்கு தளபதி தகுதிக்கு மேலே சென்று கவர்னர் பொறுப்பையும் பெற்றுத் தந்தது.


இன்றைய மதுரை, தேனீ, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் திருச்சியின் தெற்கு பகுதிகளை போர்கள் மூலம் வென்றெடுத்ததால், ஆங்கிலேயர்கள் 1759ல் அவரை தெற்குச் சீமையின் கவர்னராக நியமித்தனர்.

இது ஆற்காடு நவாப் முகம்மது அலிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. கான் சாஹிபுக்கும், ஆற்காட் நவாபுக்கும் இடையில் பனிப்போர் தொடங்கியது. இதில் ஆங்கிலேயர் குளிர் காய்ந்தனர்.

தொடரும்...........

எழுதியவர் : லெத்தீப் (5-May-14, 5:38 pm)
பார்வை : 88

மேலே