இந்திய சுதந்திர தியாகி எம் ஜே கலீலுர் ரஹ்மான் பாகவி -

இன்றைய வியட்நாமில் , அன்று சைகோன் என்று அழைக்கப்பட்ட பெருநகரில் இருந்துகொண்டு இந்திய சுதந்திரத்துக்காகப் போராடியவர் மணிமொழி மெளலானா என்று அழைக்கப் பட்ட எம். ஜே. கலீலுர் ரஹ்மான் பாகவி அவர்களாவார். உணர்ச்சிப் பிழம்பாக இவர் எடுத்துவைத்த கருத்துக்கள் பலரை விடுதலைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்தன.

மணிமொழி மெளலானா அவர்கள் “இந்தியாவை ஆங்கிலேயர் கைப்பற்றியது முஸ்லிம்களிடமிருந்தாகும். ஆகவே ஆங்கிலேயரிடமிருந்து இந்திய நாட்டை மீட்க முஸ்லிம்களே முன் நின்று போராட வேண்டும்" என்று முழங்கினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தற்காலிக சுதந்திர இந்தியாவை அறிவிக்கும் முன்பே சைகோன் நகரில் “இன்டிபென்டன்ட் லீக் “ என்ற விடுதலை இயக்கத்தைத் தொடங்கி நடத்தியவர் மணிமொழி மெளலானா அவர்களாவார்கள். இந்த ஒரு அரிய பணியில் அவர்களுடன் இணைந்து நின்றவர் எஸ். ஏ. நூருத்தீன் என்பவராவார். இவர்கள் இருவரும் சைகோனில் இரகசியமாக நேதாஜியை சந்தித்துப் பேசிய நிகழ்வும் நடந்தது. “மெளலவி சாகிப்” என்று நேதாஜியால் பிரியமாக அழைக்கப்பட்ட மணிமொழி மெளலானா அவர்கள் நேதாஜி , இந்தியில் பேசிய வீர உரைகளை தமிழில் மொழி பெயர்த்து தொண்டாற்றியவர் ஆவார்கள்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானுக்கு உதவிய சுதந்திர இந்தியப் படையில் சிலருக்குத் தலைமை தாங்கினார் என்ற குற்றச்சாட்டு மணிமொழி மெளலானா அவர்கள் மீது ஆங்கில அரசால் சுமத்தப் பட்டு, அவருக்காக ஒரு தூக்குக் கயிறு காத்திருந்தது. ஆனால் அவர் நாடு கடத்தப் பட்டார்.

தனது தாய் மீது மாறாத அன்பு உடையவராக இருந்தார் மணிமொழி மெளலானா அவர்கள். நாடு கடத்தப் பட்டு 1946 – ல் நாட்டுக்குத் திரும்பிய மணிமொழி மெளலானா அவர்கள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயாரை சந்திக்கப் போகிறோம் என்கிற ஆவலுடன் நாடு திரும்பினார். ஆனால் தாய் மண்ணை மிதித்தபோது, அவர் வந்து சேர இரண்டாண்டுகளுக்கு முன்பே அவரது தாயார் இறைவனடி சேர்ந்த செய்தி இடி போல அவர் நெஞ்சில் இறங்கியது. ஆனாலும் நாட்டுக்காக தான் செய்த தியாகங்களுக்காத் தான் மனம் மகிழ்வதாகவே மணிமொழி மெளலானா அவர்கள் கூறினார்கள்.

எழுதியவர் : லெத்தீப் (5-May-14, 9:55 pm)
பார்வை : 96

மேலே