இரவினை நீக்கி ஒளியினைக் காட்டு - பஃறொடை வெண்பாக்கள்
சென்றுவிட்ட நீண்டதொரு நாட்களுக்கு ...முன்னால்நான்
கண்ட கனவை நினைந்தேன்என் – கண்முன்னே
நான்கண்ட இன்பக் கனவுகள் சூரியனைப்
போன்று இனிதாகத் தோன்ற, புதுச்சுவர்
ஒன்று மெதுவாக ஓங்கி உயர்ந்தது;
நன்றாய் எனக்கும் கனவுக்கும் மத்தியில்,
நன்வானம் தொட்டு வளரும் வரையில்!
சுவரும், அதன்நிழலும் சூழ அதனில்
எவரும் அறியா வகையில் நிழலில்
படுத்திருந்தேன்! என்கனவின் பேரொளி காணேன்!
திடுக்கிடும் பேரிருளைப் போக்க, இரவினை
நீக்கி ஒளியினைக் காட்டு! 1
எனக்கும் மிகமேலே நீண்ட சுவரும்,
மெனக்கிட்ட நீழலும்! என்கரிய கைகள்
சுவரைத் துளைத்து இருளைத் தகர்த்து
எவரும் அறியவரும் எங்கள் பரிதி
புவனம் தழைக்கவா இன்று! 2

