வயலில் விடிந்ததுபோல

கணினி முகத்தில்தான்
எனது விடியல்
எனது தாத்தா பாட்டன்
வாழ்க்கை
வயலில் விடிந்ததுபோல

சூரிய ஒளிக்கதிர்கள்
தரையில் விழுவதற்குமுன்னே
துயில் எழுகின்றேன்
என் முன்னோர்கள் போலவே

அவரக்ள் வெளி உலகில்
விடியலுக்காக
கால்வைத்த வேளைகளில்
நான் வீட்டிற்குள்ளேயே
ஒரு மூலையில்
கணினினுக்குள் மூழ்குகின்றேன்
இதுவும் கூட விடியலுக்காக

வயிற்றுப் பசி அடங்கியது
என் காலத்தில்
அறிவுப் பசி தொடர்கிறது
என் காலத்திலும்
என் பிள்ளைகள் காலத்திலும்

அடக்கப்பட்டோம் - ஏன்?
ஒடுக்கப்பட்டோம் -ஏன் ?
எனும் கேள்விகள்
அன்று விடை தெரியாத
வினாகக்ள் ?
இன்று தெரிந்த
விடைகளால்
மீண்டும் ஒருமுறை
அந்த நிலைக்கு ஆட்படோம்
எனும் தெளிவு நிலையால்
கணினினுக்குள் மூழ்குகின்றேன்

ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை இருக்கிறது !
உண்ண உணவில்லா நிலையில்
எவரும் இல்லை என்னும்
நிலை வரும் என்னும்
தெளிவு இருக்கிறது !

ஒடுக்கப்பட்டு மூலையில்
கிடந்தோரெல்லாம்
ஒன்றிணையும்
இணைப்புப் புள்ளிகளாய்
சமூக வலைத்தளங்களைப்
பார்க்கிறபோது
இணையத்திற்குள்
கருத்துக்களால்
இணையும்
இளைஞர்களைப் பார்க்கிறபோது
ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை
வலுக்கிறது மனதில் !

எழுதியவர் : வா. நேரு (7-May-14, 6:15 am)
பார்வை : 78

மேலே