கோழையாய் வாழ்ந்திடாதே
உன் உயர்வுக்காய்
பலர் கூறும் பாராட்டு
நீ உறங்க தாலாட்டாய்
நினைத்திடாதே!
போராடி முயன்றிடவே
பல பேரின் தூண்டுதலை
முழு மனதாய்
ஏற்றிடாதே!
வாழ்ந்திடவே பல வழிகள்
உவப்பில்லா வழியதனை
உன் வழியாய்
கொண்டிடாதே!
வாழ்வு உனை பயமுறுத்தும்
வலு விழந்து நீ அதனை
பயந்தவனாய்
பதுங்கிடாதே!
நீதிக்கு தலை வணங்கு
வலிமை கண்டு நீ அதனை
வெறுமையாய்
விட்டிடாதே!
இளமை உனை விரட்டும்
கடமை முன் நிற்க
இளமைக்காய்
விழுந்திடாதே!
உன் முன்னே பல பணிகள்
உனை நம்பி பல இருக்க
பகட்டுக்காய்
பணிந்திடாதே!
உலகெங்கும் பல தேடு
கிடைக்கும் வரை தேடு
களைப்பாய்
சோர்ந்திடாதே!
அறிந்திடுவாய் உன் பலத்தை
ஆக்கிவிடு பிறர் நலத்தை
கோழையாய்
கவிழ்ந்திடாதே!