உலகம் துடிக்கட்டும்

எனக்குள்ளே வீற்றிருந்த
எழுத்தாளனே!
எங்கே மறைந்து விட்டாய்?

ஒருமையுடன் தியானிக்கும்
உத்தமனே!
ஏன் மறைந்து விட்டாய்?

பூட்டிய அறைக்குள்ளிருந்து
பூமியின் விளிம்புவரை
போய் வந்தவனே!

நித்திரைப் பொழுதினிலே
நிலவினை ரசித்தவனே!

இயற்கை அழகின்
எல்லா இன்பங்களையும்
இதயத்தினுள் ருசித்தவனே!

ஏக்கமெனும் மொழியினிலே
பாக்களை இயற்றியவனே!

சுடர்களின் மனசிலுள்ள
சூடான நிறத்தினை
சுட்டுவிட நினைத்தவனே!

காற்றின் உடலிலுள்ள
குளிரான நிறத்தினை
கொன்றுவிட நினைத்தவனே!

எனது இதயத்திலிருந்த
இரண்டாமவனே!

என்னை விட்டு நீ
எங்கே மறைந்து விட்டாய்?

வார்த்தைகளை சிலை வடித்து
வண்ணக் கற்பனை தடவி
வானவில்லைப் பிரதியெடுக்கும்

மௌனத் தவத்தினை
மறந்தது ஏன்?

நீயின்றி நிறமிழந்தன-
என்
கனவுத் தோட்டத்தின்
அத்தனை மலர்களும்!

நீயின்றி ஒளியிழந்தன-
என் ஓவிய வானத்தின்
அத்தனை நட்சத்திரங்களும்!

உலகமே இருண்டு போனது!

இதோ-
உனக்காகக் காத்திருக்கின்றன
எனது கைகளும் கண்களும்!

உன்னை எதிர்பார்த்திருக்கின்றன
சில பேப்பர்களும் பேனாவும்!

என் இதய அணுக்களின்
ஏதோவொரு மூலையில்
இளைப்பாறுகிற என்னவனே!

இப்போதே எழு!

உளியினை எடு!

உள்ளங்கையில் எழுது!

இனி-

உலகம் துடிக்கட்டும்!
உள்ளம் சுழலட்டும்!

11.11.1994

எழுதியவர் : மனோ & மனோ (10-May-14, 3:34 pm)
பார்வை : 106

மேலே