சிறப்புக் கவிதை 56 ஈரம்தனராஜ்
ஈரம் - படைக் கவி
சுண்டு விரலை பிடிக்க வச்சு
தூக்கி நிறுத்தி நடக்க வச்ச
அப்பா இன்று எங்கே
கறிச் சோத்துக்குள்ள கரி வச்சு
கறுப்பு விரட்டி காட்டுக் கனுப்பிய
அம்மா இன்று எங்கே
அடிச்சவன அடிச்சுப் போட்டு
அணைச்சுக் கொண்ட
அண்ணன் இன்று எங்கே
தம்பி என்று தலை தடவி
தாங்கி மடியில் வச்சுக் கொண்ட
தமக்கை இன்று எங்கே
எங்கே எங்கே என்று தேடி
ஓடிப் போன நாளைப் புடிக்க
நாளும் இன்று எங்கே
கட்டிக் கொண்ட மனைவி கூட
ஒட்டிக் கொண்ட போதும் அந்த
ஒப்புமை இன்று எங்கே
சுழலும் உலகில் சுற்றிக் கொண்ட
உறவுச் சூழல் உயிர்த்தேழுமோ
பந்தம் இன்று எங்கே
எங்கே எங்கே கடந்து போனதெங்கே
காலன் வந்து கடத்திப் போனதெங்கே
காலம் இன்று எங்கே