கடுவன்கள்

மின்சாரம் தொலைந்த
நடுநிசியில்
காற்றுக்கென உலாவுகையில்
திடீரென தென்படும்
கரும்பூனையின்
மின்னிடும் கண்களிரண்டும்
தொலை தூர
நகம் வளர்த்து
மனப் பிராந்தியமெங்கும்
பிராண்டத்தான்
செய்கிறது
விடியும் வரை !

எல்லா ராக்களிலும்
ஏதோ ஓரிடத்தில்
திருட்டுக் கடுவன்கள்
ஆளில்லா அகம்புகுந்து
அமுதருந்திக்
கொண்டே தானிருக்கிறது !

அந்தியின் கருக்கலில்
ஈனஸ்வரத்தில்
முனங்கும்
ஒற்றைப் பூனையின்
அபஸ்வர ஓலம்
துர்ச்சகுனமாய்
யாருக்கும் பிடிக்காமலே
போகிறது
பூனைகளுக்கும் கூட !

அட்சயம் அருகிருந்தும்
சந்திர அப்பம்
தின்ன
ஆகாயம் குதித்து
காலொடிந்து -
மீண்டும்
மதில்மேல் மண்டியிட்டு
நீ சுழற்றி
வால் சுழிக்கும்
கருவாட்டுக் கனவுகளுடன்
காயசண்டிகைப் பூனைகள் !

மணிகட்டுவார்
இல்லாவிட்டாலும்
கூட
நாயின் முன்னே
பூனையின் சீற்றம்
அடங்கித் தான்
போகிறது !

நம்பிக்கைகள்
தொடரத்தான்
செய்கின்றன
இன்னும் கூட
சில இடங்களில்
மீனுக்குக் காவலாய்
பூனைகள் -
அவைகளும் காக்கத்தான்
செய்கின்றன
யாருமறியாமல்
சதை உண்டபின்
கடைசி வரை
காய்ந்த முட்களை !

பதுங்கியும்
ஒதுங்கியும்
ஒளிந்தும்
குறுக்கும் நெடுக்குமான
சகுனப் பாய்ச்சல்களுடன்
பூனைகளுக்கான
பயணங்கள்
தொடர்ந்து கொண்டேதானிருகின்றன.

எழுதியவர் : பாலா (12-May-14, 7:28 pm)
Tanglish : kaduvangal
பார்வை : 107

மேலே