காதல் தீ
என் கனவுகளைக் கைது செய்தாய்-
கண்களையும் கவர்ந்து சென்றாய்-
என் இதயத்தைச் சிறையிலிட்டு
உன்னிலிருந்து என்னைத்
தொலைத்து விட்டாய்!
என் கவிதைகளை
காற்றிலே கரைத்தாய்!
என் காதல் வலியைப்
பார்த்து நீ நகைத்தாய்!
உயிரின் ஆழம் வரை
உருக்கி அழித்து விட்டு
உன்னிலிருந்து என்னைத்
தொலைத்து விட்டாய்!
இத்தனை நிகழ்வுகள்
நிகழ்ந்த பின்னும்-
என் உள்ளத்தின் ஆழம்வரை
ஏன் உற்றுப் பார்க்கிறாய்?
உன் உடலின் உஷ்ணத்தால்
ஏன் சுட்டுப் பார்க்கிறாய்?
என் இதயத்தை
எரிக்கப் போகிறாயா?
சாம்பலை எரிக்க
உன்னால் முடியுமா?
என் காதலை
அணைக்கப் போகிறாயா?
காட்டுத் தீயை அணைக்க
உன்னால் முடியுமா?
ஆயிரம் மந்திரங்களை நீ
அட்சர சுத்தமாய் உச்சரித்தாலும்-
ஆயிரம் குதிரைகளைக் கொன்று
அக்கினியை வளர்த்தாலும்-
குருதிகளை உதிர்த்தாலும்-
உன் முலைகளையே திருகி
என் முகத்தின் மீதெறிந்தாலும்-
என் காதலை அழிக்கக்கூடிய
அசுர அக்கினியை
உன்னால் உருவாக்கவே முடியாது!
16.09.1997