சிறப்புக் கவிதை 32 விமர்சனம் - மனத்துரு -- அருள்மதி சி

மாறிப்போய் விட்ட வாழ்வியலும் மரத்துப்போன மனிதமுமாய் தொடங்குகிறது படைப்பு..ஆதாரங்கள் அழித்துச் சுகித்து இப்பொழுது அடிப்படைத் தேவைகளின் கையேந்தல்களுக்கான காரணிகளை அழகாக அடுக்கிறார் அருள்மதி.. மதி நுட்பம் நிறைந்தவர்..

தலைக்குமேலே வெள்ளம் போனால் சாண்என்ன முழம் என்ன என்று திரைப்பட வரிகளில் கேட்டதாக ஞாபகம்.. அழகாகத் தொடங்குகிறார் கவிஞர் இப்படி..
"தூர்வாற மறந்துவிட்ட
குளம் குட்டை நிரப்பி
குடியிருப்பு கட்டிவிட்டு
மறந்துவிட்ட விசயம்
சட்டென்று நினைவுவர
மொட்டைமாடியில் கட்டினோம்
நீச்சல் குளம் ! "

ம்ம்.. தூர்வாற மறந்ததை தூர்த்தோம் ..
தூற்றும் நம் மூப்பர்களின் சாபங்கள் வாங்கி..! கால
மனிதர்களைப் போலவே மாறிப்போயிருக்கிறது
அவரதம் சூழலும்... நிலாமாடத்து நீச்சல் குளமும் புல்வெளியும் அதற்கு சான்று...! ஊனப்படுத்துவதை எவ்வளவு பெருமையாய் பேசிக்கொள்கிறோம்....!! எத்தனை நுண்ணறிவு என்று பீற்றிக் கொள்வதில் அர்த்தம் இல்லை...! என்று நெற்றியிலடித்துச் சொல்கிறார் படைப்பாளி...
"நாற்பது வருடமாய்
வளர்ந்து விட்ட மரம் வெட்டி
நான்கே மாதத்தில் மாடி வீடு கட்டினோம்
மரத்தை வெட்டிய பாவத்திற்கு பரிகாரமாய்
பால்கனியில் புல் வளர்த்தோம் ! "

இயந்திரவாழ்வின் உறங்கும் நேரங்களில் மட்டும் காற்றுப்பதனாக்கி.. தவிர்த்த நேரங்களிலெல்லாம் அதன் கழிவைச் சுவாசமாக்கி நம் நுரையீரல்களுக்குத் தீ வைக்கிறோம் என குளிரூட்டிகளின் கொடுமை உரைக்கிறார் கவிஞர் இப்படி..
"வாய்ப்புகையில் வாகனப்புகையில்
வாயு மண்டலத்தை விடமாக்கி
வசதியாய் பொருத்திக்கொண்டோம்
கட்டிலறையில் ஒரு காற்றுப்பதனாக்கி ! "

கடவுளுக்கும் கழிப்பறைக்கும் பொதுச்சுவர்.. அடடா உச்சம் தொட்டிருக்கிறார் கவிஞர் இவ்வரிகளில்..தீர்த்தம் குளிக்கிறது ஒருபுறம்.. தீயில் குளிக்கிறது மறுபுறம்....

"வருங்காலத் தலைமுறையே !
உன் இரும்பு மனதிலாவது துரு பிடிக்காமல் இருக்கட்டும் !"

இல்லையேல் இதுபோன்ற எரிமலை குழம்புக் கவிதைகள் இரும்பை இளக்கும்...!!
மதுபானம் பற்றி இந்தக் கவிதையில் எதுவும் இல்லாதது எனக்கு ஒரு ஏமாற்றமே...!!!

படைப்பு சீறல் சுத்தம்...!!!

எழுதியவர் : சரவணா (14-May-14, 8:16 am)
பார்வை : 118

மேலே