கட்டுரை குறுந்தொகை மாட்சி --01
குறுந்தொகை மாட்சி—01.
இன்றைய இளைஞர் எப்படிக் காதலில்
இதயம் தொலைப்பர் என்பதைக் கூற
அநேகர் எழுத்தில் அழகாய்ச் சொல்லுவர்!
அன்றைய இளைஞன் அவைகளைச் சொல்கிறான்;
அதனைக் கேட்க குறுந்தொகை திறப்போம்:
சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை,
கான யானை அணங்கி யாஅங்கு,
இளையள்,முளைவாள்,எயிற்றள்,
வளையுடைக் கையள் எம் அணங்கி யோளே!
இதன்பொருள் தன்னை எடுத்துக் கூறின்:
நண்ப! கட்டுக்கடங்காது திரிந்து,கண்ணில் படும்
மாக்களையும்,மரங்களையும், மலைப் பாறைகளையும் உருட்டி அழித்து ஓடும் காட்டு யானையை, ஒரு சிறு பாம்புக் குட்டி அழித்து விடுவதும் உண்டு;அதைப் போல் எதற்கும் அஞ்சாத என்னை, இவ்வாறு நோய் செய்து விட்டாள் ஒரு பெண்;
அப்பெண் நனிமிக இளையவள்;
நாணல் முனைபோல் முளைத்திருக்கும்
வெண்பற்களை வரிசையாகப் பெற்றிருக்கும் அவள் வாய்!
வளையல் ஒலிக்கும் அவள் கைகளில்;
அவள் வாயின் சிறு முறுவல் கண்டேன்;
கைவளையின் ஒலியினைக் கேட்டேன்; அவ்வளவே யான் இவ்வாறு நிலைகுலைந்து விட்டேன்!
காதலைப் பற்றியும் அதன் தாக்கத்தையும் பாடும் தலைவன், தான் காதலால் உள்ளுக்குள் அழிவதைப் பேசும்போதும் கூட, தான் இறந்து போக நினைப்பதாகப் பேசாதது, தன்னைக் காதலி கொன்று விட்டாள், தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று பேசாதது நாம் கூர்ந்து நோக்கி உணரப்
படவேண்டிய ஒன்றல்லாவா?
அதற்காகவே இதை இங்கே பதிந்துள்ளேன்!
[ஐம்பது பேராவது இதைப் படிப்பதாக இருந்தால்தான் இவை போன்றவை இனியும் வரும்; இல்லையேன் எனக்கேன் வீண் முயற்சி; மின்சாரச் செலவு; விடைபெற்றுக்கொள்ளுவேன்;
உங்கள் விருப்பம் எனக்கு ஊக்கம்.]
======================== ==========