ரயிலில் கிடைத்த பாடம்

ரயிலில் கிடைத்த பாடம்

என் பெயர் இராமச்சந்திரன்.நான் ஒரு தனியார் கணினி உற்பத்தி செய்து விற்கும் நிறுவனத்தின் மேல்
அதிகாரியாக வேலை செய்கிறேன். எனக்கு தெற்கு மேற்கு இந்தியாவில் உள்ள எல்லா
அலுவலகத்திலும் உள்ள விற்பனை பிரிவின் விற்பனையின் பொறுப்பு தரப்பட்டுள்ளது. எனக்கு ஒரு
மொத்தமான விற்பனை இலக்குக் கொடுத்து அதை எனக்கு கீழ் உள்ள அலுவலகங்களுக்கு பிரித்து
அளிக்கும் முக்கிய பொறுப்பும் விற்பனை பிரிவில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் இலக்கையும்
நிர்ணயம் செய்து அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டினால் அவர்களுக்கும் எனக்கும்
ஒரு கணிசமான தொகை போனஸ் என்ற பெயரில் கொடுக்கப்படும். இந்தியாவிலேயே முதன்மை
இடம் எடுத்தால் இருசக்கர வாகனமோ காரோ பரிசாக அளிக்கப்படும்.
என் பொறுப்பை நிறைவு செய்ய வாரத்தில் ஐந்து நாட்கள் பயணம் செய்வது வழக்கமாகி விட்டது.
ஒவ்வொரு அலுவுலகத்திலும் ஒரு நாள் இருந்து விற்பனை செய்யும் எல்லோரிடமும் கலந்து
ஆலோசனை செய்து வேண்டிய உதவிகளை அளித்து அவர்களின் இலக்கை அடைய செய்வது எனது
வேலையின் முக்கிய அம்சம். அன்று நான் தமிழ்நாட்டில் வேலைகளை முடித்து விட்டு அங்கிருந்து
மும்பை செல்லும் அதிவிரைவு ரயிலில் பயணம் செய்ய ரயில் நிலையம் வந்தேன். விரைவு வண்டியில்
எனது குளிரூட்ட பெட்டியில் ஏறிய வேளையில் குப்பை பொறுக்கும் ஆள் போல , கையில் ஒரு
கோணிப்பையுடன் ஒருவர் பெட்டிக்கு வெளியே, பாத்ரூம் அருகே உட்கார்ந்து பயணிக்க நான்
சந்தேகத்துடன்,
“என்னங்க! அடுத்த ரயில் நிலையத்தில் இறங்குறீங்களா?”என்று அவரிடம் கேட்க “இல்லை சார், நான்
மும்பை வரைக்கும் பயணம் செய்கிறேன் என்று அவர் கூறிட நான் உடனே “நீங்க ஏன் இந்த
பெட்டியில வரீங்க ஜெனரல் கம்பார்ட்மெண்டு இருக்கு இல்ல அதிலே வரலாமில்ல?” எனச் சற்று
குரலை உயர்த்திக் கேட்டேன்.“இல்லை சார், அங்கே இருந்தா எனக்குத் தேவையான ஐட்டம்
கிடைக்காது, அதனால தான் இங்கே உட்கார்ந்துஇருக்கிறேன். டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன்.
எனக்கு சீட் உள்ளே இருக்கு என்று டிக்கெட்டை எடுத்து காட்டினார்.
"என்ன தொழில் செய்யறீங்க என்று கேட்டதற்கு அவர் அவரது தொழிலைப் பற்றி விவரித்து சொல்ல
சொல்ல நான் பிரமித்துப் போனேன். அவர் சொன்னதை சுருக்கமாகக் கூறுகிறேன் அவர் அண்ணன்
ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் பத்துத் தொழிலாளிகள் வேலை செய்கின்றனர் , அவர்களுக்கு
இவர்தான் டிக்கெட் எடுத்து, சாப்பிடவும் பணம் கொடுத்து விடுவாராம்.

வேலை என்னவென்றால்...

கன்னியாகுமரியில் விரைவு ரயிலில் ஏறி, முதல் வகுப்புப் பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும்,
வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில்களை Foil மட்டும் பொறுக்க
வேண்டும். முதல் வகுப்பிலும்,குளிர் சாதன பெட்டியிலும் தான் குப்பை போடுவதற்கு வசதியாக
குப்பைதொட்டி உள்ளது, அதில் பயணம் செய்பவர்களும் தான் சாப்பிட பின் அலுமினிய பாயில்களை
குப்பை தொட்டியில் சேர்ப்பார்கள். மற்ற வகுப்புகளில் பயணம் செய்பவர்கள் சாப்பிட்டு விட்டு அதை

எறிந்து விடுவார்கள், எனவே தான் முதல் வகுப்பிலும் குளிர் படுத்தப்பட்ட பெட்டிகளிலும் நின்றே
வேலை செய்யும் எல்லோரையும் பயணம் செய்ய வைத்துள்ளதாக அவர் கூறி இவர்களின் இலக்கு ஒரு
ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் Foil திரட்டுவது.
அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய்
நாலாயிரம் (ரூ.4,000).
பத்து பேரின் சம்பாத்தியம் நாற்பதினாயிரம் (ரூ.40,000).
மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் (ரூ.2,40,000).
இவர்களுக்கு செய்யும் செலவு நாற்பதினாயிரம் (ரூ.40,000)).
மாதவருமானம் இரண்டு லட்சம் (ரூ.2,00,000).
வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் (ரூ.24,00,000).
இது கன்னியாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும், இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள்
உள்ளன...' என்றார்.
நான் அப்படியே மலைத்துப் போய் நின்றேன். கார்பொரேட் நிலையில் இருக்கும் நிறுவனத்தில்
அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் குளிர் செய்யப்பட்ட
பெட்டியில் உட்கார்ந்து என்ன மதர்புடன் எக்காளம் செய்து கொண்டிருக்கிறேன்.
ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து, கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல்
உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே
சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார்.
அன்று நான் இருந்த குளிர்செய்யப்பட்ட பெட்டி, கொதிக்கும் நெருப்பைப் போல் இருந்தது.
எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம்...
அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு
உதாரணம்...
உணர்த்தும் நீதிகள்...
ஒன்று : உருவம் கண்டு எள்ளாமை வேண்டாம்.
இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில்
கேவலமில்லை. இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த
உலகில் இல்லை.
மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன்
செய்கிறோம் என்பதே முக்கியம்

எழுதியவர் : கே என் ராம் (23-Jan-25, 3:47 pm)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 35

மேலே