தாய் அவள்

இனம் அறியும் முன்னே
நிறம் தெரியும் முன்னே
முகம் காட்சியாகும் முன் நேசித்தவள்
இவள்தாம்

தந்தையை தந்தவளும்
கடவுளை காட்டியவளும்
இவள்தாம்

எங்கே அம்மா சொல்
எங்கே அப்பா சொல்
என்மொழி சொன்னவள்
இவள்தாம்

குருதியை பாலாக்கித் தந்தவள்
என்கழிவை கழுவ தயங்காதவள்
இவள்தாம்

நான் நன்கு உறங்க
நித்திரை விடிவிடியத் தொலைத்தவள்
இவள்தாம்

என் குறும்பிற்கு முதுகில் ஐவ்விரல் பதித்து
கண்ணீருக்கு கண்ணே கரும்பே மணியே
என கொஞ்சியவள்
அம்மாவை மன்னிப்பாயா என கெஞ்சியவள்
இவள்தாம்

நடக்க வைத்து பார்த்தவள்
நானோடி விழுமுன் பதறியவள்
இவள்தாம்

ராசாவாய் நான் அமர
இடுப்பை வில்லாய் வளைத்தவள்
இவள்தாம்

நான் எட்டரைக்கு பள்ளி செல்ல
நான்கரைக்கே நித்திரை கலைத்தவள்
இவள்தாம்

தந்தைக்கெதிரே எவர் சொல்லும் பொறுக்காதவள்
எனக்காக எதிர்சொல் சொன்னவளும்
இவள்தாம்

எனது முதல் விசிறி
என்றும் நலம் விரும்பி
இவள்தாம்

எனக்காக கனவுகளை கருவறுத்தவள்
நான் விரும்பியனவற்றுக்கு சுவை மாற்றியவள்
இவள்தாம்

எண்ணெய் தேய்து தலைவாரி
என்னை அழகு பார்த்தவள்
இவள்தாம்

வென்றாலும் தோற்றாலும்
நான் புசித்தேனா? -என்பவள்
இவள்தாம்

தன்னுள் பாதி மனைவியை
கண்டு அறிவதில் ஆண்களின்
தேடு குறிப்பேடு
இவள்தாம்

பெண்ணொருத்தி மகனை உரிமைக் கேட்க
ஆண்ணொருவன் மகளை சொந்தம் கொண்டாட
தன் குழந்தையை விட்டுக்கொடுக்க மனமில்லாதவள்
இவள்தாம்

எனக்காக விட்டுக் கொடுத்தே பழகியவள்
என்னை விட்டுக் கொடுக்க பழகாதவள்
இவள்தாம்

நான் உணவிடா விடினும்
நான் உண்டேனா? -கவலைக் கொள்பவள்
இவள்தாம்
தாய் அவள்...

-வி.பூபாலன்

எழுதியவர் : வி.பூபாலன் (22-May-14, 1:07 pm)
Tanglish : thaay aval
பார்வை : 404

மேலே