சிகப்பு கலர் ஸ்ப்லெண்டர்
சார் படில நிக்காதீங்க..உள்ள வாங்க இல்ல இறங்கி அடுத்த பஸ்ல வாங்க...னு ..எப்பவும் சொல்வது போல் கூட்டத்தை பார்த்ததும் அன்னிச்சையாய் சொல்லிவிட்டு டிக்கட் போட்டுக் கொண்டிருந்தார் கண்டக்டர் .தான் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்ததும் படியில் இருந்து இறங்கி,கலைந்த தன் தலை முடியை ரோட்டோரத்தில் நிறுத்தி இருந்த பைக்கை பார்த்து சீவி விட்டு நடந்து சென்றான் சாரதி.இந்த மாசம் கண்டிப்பா ஒரு பைக் எடுக்கனும் ,சிகப்பு கலர்ல ஸ்ப்லெண்டர் ..என்று நினைத்தவாரே தான் பணி புரியும் மெட்ரிக பள்ளியை நோக்கி நடந்து சென்றான்.என்ன சார் இன்னைக்கும் கூட்டமா. சர்ட் கசங்கிருக்கு சார்.. னு சொல்லிவிட்டு வணக்கம் வைத்தார் ஸ்கூல் வாட்ச்மன்.சாரதி,மதியம் உணவு இடைவேளையில் தனது நண்பரான கணக்கு வாத்தியாரிடம் கேட்டான் ,சார் பைக் வாங்கலாம்னு இருக்கேன் ..சேவிங்க்ஸ் ல இருபதாயிரம் இருக்கு இத கட்டிட்டு வண்டி எடுத்துடலாமா?சார் னு கேட்டான்.சார் ..அவன் அவன் ஆயிரம் ரூபா கட்டுனா வண்டி தாரான்,நீங்க இருபது ரூபா வச்சுருக்கீங்க..பொறுங்க என் பிரண்டு ஷோ ரூம்ல தான் வேலை பாக்குறான் கேட்போம்.. னு சொல்லிவிட்டு தன் நண்பரிடம் விசாரித்தார் கணக்கு வாத்தியார்.சார் ஒன்னும் பிரச்சினை இல்ல எல்லாம் கேட்டுட்டேன்,வரும் பொழுது போட்டோ .ஐ.டி ப்ரூப் எடுத்து வர சொன்னான்.இருபது ரூபா இப்போ கட்டிட்டு மாசம ஆயிரத்தி ஐநூறா இரண்டு வருசம் கட்டளாமாம்.சார் ரொம்ப தாங்க்ஸ் சார் நாளைக்கே எடுத்துடலாம் சார்... னு சொல்லிவிட்டு மாலை வீட்டுக்கு செல்லும் பொழுதே ஏ.டி.எம் மில் பணத்தை எடுத்துவிட்டுச் சென்றான்.அம்மா நாளைக்கு பைக் எடுக்கலாம்னு இருக்கேன் மா ..என்றான்.. தன் அம்மாவிடம்.என்னம்மா யோசிக்கிற...இல்லடா இன்னைக்கு அஷ்டமி ,நாளைக்கு நவமி ,இருந்து இருந்து பைக் எடுக்குற நாளை கழிச்சு எடுடா.அதுவும் சரி தான் மா என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டான்.மறுநாள் காலை என்னம்மா ஹேமா காலேஜ் போகலையா ?இல்லப்பா தலை வலிக்குதாம் இப்போ தான் காபி குடிச்சுட்டு படுத்திருக்கா என்றாள்.சரிமா லேட் ஆகுது நான் வாரேன்னு சொல்லிவிட்டு ஸ்கூலுக்கு கிளம்பினான்.தெரு முக்கில் தாங்கள் முன்னர் குடி இருந்த வீட்டின் பக்கத்து வீட்டு அக்காவை பார்த்தான் .என்னக்கா இந்தப்பக்கம் ?நம்ம வீட்டுக்கு தான் பா.நேத்து ஏழு மணிக்கு அம்மாவும் ,பாப்பாவும் வீட்டுக்கு வந்தாங்க..பீஸ் கட்ட பணம் வேணும் பதினைஞ்சு ரூபா வேனும்னாங்க.விளக்கு வச்சாச்சு காலைல தாரேன்னு சொன்னான்.என்ன நெனசாங்கன்னு தெரியலப்பா,பாப்பா கழுத்தில போட்டிருந்த செயின கலட்டி டேபிளில வச்சிட்டு போயிட்டாங்க.ஏம்ப்பா நாம அப்படியா பழகி இருக்கோம்.அதான் அம்மா கிட்ட பணத்தையும் செயினயும் கொடுக்கலாம்னு போறேன்னு..சொல்லிட்டு கிளம்பினான்.வார்த்தைகள் எல்லாம் அவனை கைவிட்டதால் அவன் உதடுகள் அனாதையாகி சில நிமிடம் மௌனத்தில் உறைந்திருந்தது.பொதுவாக ஆண்களின் மௌனம் சம்மதத்தின் வெளிப்பாடு அல்ல ..அது அழுகை வறுமை,இயலாமை,தோல்வி இவற்றில் ஏதேனும் ஒன்றின் வெளிப்பாடு.பஸ் ஸ்டாப் வந்ததும் தன் செல்லை எடுத்து டயல் செய்தான்..அம்மா... நான் ...தான்.. சாரதி ..பீரோல என் சட்டைக்கு அடில இருபதாயிரம் ரூபாய் இருக்கு..காலேஜ்ல போய் பீஸ் கட்டிரு ..சாயந்திரம் ஹேமாவுக்கு நல்லதா இரண்டு சுடிதார் எடுத்து கொடுமா ..பாவம் காலேஜ் போறது பழைய டிரஸ போட்டுட்டு போகுதுல்ல ...என்னடா சொல்லுற அந்த பணம் நீ ....அம்மா பஸ் வந்திருச்சு சாய்ந்திரம் பேசுவோம் ..நான் சொன்னத செய் என்ன ?சரியா ?வச்சிடு னு சொல்விலிட்டு பஸ்ஸில் ஏறினான்...
சார் படில நிக்காதீங்க..உள்ள வாங்க இல்ல இறங்கி அடுத்த பஸ்ல வாங்க...னு ..எப்பவும் சொல்வது போல் கூட்டத்தை பார்த்ததும் அன்னிச்சையாய் சொல்லிவிட்டு டிக்கட் போட்டுக் கொண்டிருந்தார்.சார் கொஞ்சம் வழி விடுங்க சார் ... நாங்களும் முன்னாடி வரணும்ல.. என சொல்லி விட்டு கூட்டத்தை விலக்கி விட்டு உள்ளே சென்றான் சாரதி...தன் குடும்பத்தை ஓட்ட ..தன் ஆசைகளுக்கு கடிவாளம் பூட்டி....
.................பார்த்தீபன் @ திலீபன் ............