மெழுகுவத்தி
தான் பெற்ற பிள்ளையை இந்த வையகம் வியந்து பார்க்க வேண்டும் என்பதற்காக தன் வாழ்க்கையை அற்பணிக்கும் பெற்றோர்களை போன்று இக்கதையிலும் ஒரு தாய், தந்தை தன்னுடைய மகன் படித்து ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நொடியும் தன்னுடைய இரத்தத்தை வியர்வையாக்கி அவனுடைய கனவை நினைவாக்க போராடிக் கொண்டிருந்தனர்.
தான் பெற்ற வலிகளையும், வேதனைகளையும் தன் பிள்ளை எக்காலத்திலும் அறியக்கூடாது என்பதற்காக அவன் ஆசைப்பட்ட அனைத்தையும் மறுக்காமல் வாங்கி கொடுத்து அவனை மகிழ்வித்தனர்.
சில ஆண்டுகள் கடந்தன ஒரு நாள் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அவர்களது மகன் வீடு திரும்பினான். வீட்டிற்கு வந்தது அவன் மட்டும்தான் அவனுடைய மனம் ஒரு பெண்ணை நோக்கி சிறகடித்து சுற்றித் திரிந்தது. அதை புரிந்துகொண்ட அவனது பெற்றோர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அலை மோதினார்கள்.
அவர்களும் அவனது மனதை மாற்ற போராடினர் ஆனால் அவனோ “மணக்காவிட்டாலும் என் மனைவி அவள்தான்” என்று முடிவாக கூறிவிட்டான். வீடிற்கு ஒரே மகன் என்பதனால் அவன் விருப்பத்தை அவர்களால் மறுக்கவும் முடியவில்லை, சமூதாய நிலையில் உயர்ந்து நிற்கும் அந்த பெண்ணை ஏற்கவும் முடியவில்லை. தன் தாய், தந்தையின் வார்த்தைகளை மீறி தான் காதலித்த பெண்ணையே மணம் முடித்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.
காதல் திருமணம் அவர்களது வாழ்க்கையை மிக அழகாக மாற்றி அமைத்தது. ஆம். மிக அழகாக மாற்றி அமைத்தது அவர்களது வாழ்க்கையை மட்டும்தான். தானும், தன் மனைவியும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அவன் தாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமான தன் தாய், தந்தையின் வார்த்தைகளையும், உணர்வுகளையும் மதிக்க மறந்துவிட்டான்.
காலங்கள் செல்ல செல்ல அவனது மனைவிக்கு அவனது பெற்றோர்கள் ஒரு சுமையாக தெரியத் தொடங்கினர். ஒவ்வொரு நாளும் தேவையில்லாத சண்டைகளும், போராட்டங்களும் தொடர்ந்தன. அவனது பெற்றோர்கள் விட்டுகொடுத்து சென்றாலும் அதில் குற்றம் கண்டறியவே முற்பட்டாள். அதற்க்கு காரணம்; பாசமும், நேசமும் அறியாமை என்றே தோன்றுகிறது. உண்மைதான்… விட்டுக்கொடுப்பதும், பாசத்தோடு அரவணைப்பதும் பிறவி குணங்கள் இத்தகைய உயர்ந்த குணங்கள் இடையில் வருவது அல்ல உதிரத்தோடு உறைந்திருக்க வேண்டியவை.
“காதலுக்கு கண் இல்லை” என்று கூறுவார்கள் ஆனால் மதியும் இல்லை என்று அவன் உணர்த்தினான். தன் மனைவி சொல்லை கேட்டு ஒவ்வொரு நாளும் அவனுடைய குணம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. ஒரு நாள் தன் மனைவிக்கும், தந்தைக்கும் இடையில் ஏற்ப்பட்ட சண்டையில் தன் தாய், தந்தையை கழுத்தை பிடித்து வெளியே தள்ளினான். பத்து மாதம் பாடுபட்டு சுமந்த தாய் பாசம் அவன் மதிக்கு எட்டவில்லை, தன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைந்த தந்தை பாசம் அவன் மதிக்கு எட்டவில்லை. இடையில் வந்த மனைவியின் நேசம் மட்டும் அவனது மதியை மயக்கி மாலையிட்டது.
தேசத்தை கட்டி காக்கும் அரசன் குப்பை மேட்டிற்கு வருவதும், பிச்சை காரன் சிம்மாசனத்தில் அமர்வதும் தனக்கு வாய்க்கப் பெற்ற மனைவியின் குணத்தில்தான் என்று கூறுவார்கள். அதை உணராத அவன் தன் தாய், தந்தையை தெருவில் விட்டு வேடிக்கை பார்த்தான். "கடைசி காலத்தில் எங்களை தனியே தவிக்க விட்டுவிடாதே மகனே! நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களை மன்னித்து விடு" என்று அவனது பெற்றோர்கள் கண்ணீர் மல்க அவர்களது கால்களை பிடித்து புலம்பி துடித்தனர். அவர்களது புலம்பலும், தவிப்புகளும் பணத்திற்காக என்று எண்ணிய அவன் "மாதம் என்னால் முடிந்த தொகையை உங்களுக்கு தருகிறேன். என் மனைவியிடம் வந்து பெற்று செல்லுங்கள். இனி என் முன்னே ஒரு கணம் கூட நிற்காதீர்கள். என் மனைவியிடம் சண்டையிட்ட உங்களுக்கு இனி இந்த வீட்டில் இடமில்லை" என்று கூறி துரத்திவிட்டான்.
அதன் பிறகு அவர்கள் எங்கே சென்றார்கள், என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. 21 ஆண்டுகள் கடந்தன. உலகம் உருண்டை அல்லவா! காலத்தின் கட்டாயத்தில் அவர்களுக்கோர் பெண் பிள்ளை பிறந்து, திருமணம் செய்யும் வயதிற்கு வளர்ந்து நின்றாள். பெற்றவர்கள் தன் பிள்ளைக்கு செய்ய வேண்டிய கடைசி கடமை மணம் முடித்து வைப்பது மட்டும்தான். அக்கடமையை செய்ய தயாராகி கொண்டிருக்கும் பொழுது "அப்பா நான் ஒருவரை விரும்புகிறேன்" என்று தன் மகள் கூறினாள். ஒரு நொடியில் அவர்களது கடந்த கால நினைவுகள் கண் முன்னே வந்து நின்றன. சமூதாய நிலையில் பின் தங்கிய ஒருவனை தன் மகள் விரும்பியதால் அவளது காதலை அவர்கள் நிராகரித்ததோடு தங்களது வார்த்தைகளை மீறி சென்றுவிடுவாளோ என்ற புதிதான அச்சம் அவர்களுக்கு உருவானது. அதனால் தன் மகளை வீட்டினுள்ளே சிறை பிடித்து வைத்தார்கள்.
இந்த உலகத்தில் மிக வலிமையான ஆயுதம் காதல் அல்லவா! தன் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் தாய், தந்தையின் வார்த்தைகளை மீறி இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறி அவர்களுக்கு பெரும் தலைகுனிவை உண்டாக்கினாள். பெற்றவர்களின் சாபமோ! என்னவோ! தன் காதலனை அழைத்துக்கொண்டு செல்லும்பொழுது வழியில் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு கோர விபத்தில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு உயிராக வளர்த்த ஒரே மகளது பிரிவால் ஒவ்வொரு நொடியும் கண்கள் வழியே உதிரம் உதிர இருவரும் கலங்கி நின்றார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு புரிந்தது. ஆம்… “21 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டு உன்னத உள்ளங்கள் எதற்க்காக நம் கால்களை பிடித்து புலம்பி தவித்தன! அவர்கள் எதற்காக நம்மை சுற்றி சுற்றி வந்தார்கள்! அவர்களுக்கு பணம் தேவைப்பட்டதா? இல்லை… பாசம் தேவைப்பட்டதா?” என்ற கேள்விகெல்லாம் உண்மையான விடை அப்பொழுதுதான் அவர்களுக்கு புரிந்தது.
பெற்ற பிள்ளைகளை படிக்கவைத்து, அவர்களை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவதற்காக ஒவ்வொரு தாயும் எத்தனை எத்தனை வலிகளை சுமக்கின்றார்கள் என்று இங்கு எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும்???
பிள்ளைகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அவர்கள் எந்தவித வலியையும் உணரக் கூடாது என்பதற்காகவும் ஒவ்வொரு தந்தையும் எத்தனை எத்தனை வேதனைகளை தன் வாழ்க்கையை பற்றி பொருட்படுத்தாமல் சுமக்கின்றார்கள் என்று இங்கு எத்தனை பிள்ளைகளுக்கு தெரியும்???
நீங்கள் அனுபவிக்கும் மகிழ்ச்சியான தருணங்களுக்கு பின்னால் உங்கள் தாய், தந்தையரின் வியர்வைத் துளிகள் மறைந்துள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். கடைசி காலத்தில் அவர்கள் ஆசைப்படுவது உங்கள் பணத்திற்காக அல்ல; பாசம் மிகுந்த அரவணைப்புக்காக மட்டும்தான் என்பதை உணருங்கள். இடையில் வந்த மனைவிக்காகவோ, கணவனுக்காகவோ உங்கள் வாழ்விற்கு வழிவகுத்த பெற்றோர்களை காயப்படுத்திவிடாதீர்கள்.
தன் உடலை அழித்துக்கொண்டு வாழ்விற்கு ஒளி வீசும் “மெழுகுவத்தி” போன்றவர்கள் உங்கள் தாய், தந்தையர். எந்த ஒரு தகாத செயல்களாலும் அவர்களது வியர்வை துளிகளை கலங்கப்படுத்திவிடாதீர்கள். அதனால் பாதிக்கப்பட போவது அவர்கள் மட்டுமல்ல. நீங்கள் பெற்றெடுக்கப்போகும் பிள்ளைகளும்தான். உங்களது தாய், தந்தையின் கௌரவத்தையும், பாசத்தையும் நீங்கள் போற்றினால் உங்களது பிள்ளைகளும் உங்களை போலவே உங்களிடம் அதை பிரதிபலிப்பார்கள் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை.
எனவே எக்காலத்திலும் வாழ்க்கையோடு மிக அழகாக பொருந்தக்கூடிய "தாய் போல் பிள்ளை, நூல் போல் சேலை" என்ற பழமொழியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; உயர்வான குணங்கள் உருவாகி வாழ்க்கை உங்கள் வசமாகும்.
குறிப்பு: இந்த கதையும், கதாப்பாத்திரங்களும் முற்றிலும் கற்பனையே. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.