பணம் செரிக்கப் பழக்குங்கள் - வினோதன்

அமிலச் சுரப்புகளின்
அமோக விளைச்சலால்
உரும காலத்து - திரவ
சூரியனாய் - தகிப்பு
தாளாமல் தவித்தது
உழவனின் இரைப்பை !

ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும்
புணரத் தவறியதால்
கருவாகாத மழையை
கண்ணுக்கெட்டிய தூரம்
காணாததால் - கண்டார்
கண்முட்டும் துயரத்தை !

வறுமை வயிறுக்குத்தெரிய
வழியில்லைதானே ?
பசி துரத்திய திசையில்
எழுந்துநின்ற கோவிலினுள்
அன்னதானம் அளிக்கப்படுவதை
அறியாமல் - அனுமதித்தர் !

உழவன் நினைத்தார்...
என் பசியை அறிந்து
உனை நோக்கி இழுத்து
பசியற்றுகிறாய் - என்
இரைப்பை வருடிய - உன்
உன் இறைக்கைக்கு நன்றி !

கடவுள் நினைத்தார்...
என் பருக்கையின்
பகவானே நீதானே
உழவா - மழை வந்தவுடன்
மறவாமல் உழ வா !

நித்தம் நிலக்கறி தின்றபடி
உலகிற்கே உணவிடும்
உழவையும் உழவனையும்
பட்டினியில் கிடத்திவிட்டு
படையெடுப்பது - பாடையில்
படுத்தபடி - பால் கேட்பதற்கு
சமமென உணர்வாயா மனிதா ?

ஏழை விவசாயி - ஏரோட்ட
மறுத்தலோ மறந்தாலோ
பசி இடம் மாறி - தக்க
பாடம் நடத்தும் - அதுவரை
இரைப்பையை - பணம்
செரிக்கப் பழக்குங்கள் !

- வினோதன் !

எழுதியவர் : வினோதன் (29-May-14, 8:29 pm)
பார்வை : 98

மேலே