மஹாபாரதத்தை நேசிக்கிறேன்-2

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:

புலன் வேட்டை…
***************************

கடந்தகாலத்தை எதிர்காலமாகவும், எதிர்காலத்தை கடந்தகாலமாகவும் வாழ்ந்து, தனது தந்தை(ஆயுவின் மகன் யயாதி) பெற்ற சாபத்தை தான் ஏற்று அதை வரமாக மாற்றியமைத்து, முரணான நிகழ்காலத்தில் யவன உள்ளத்துடனும் விருத்த உடலுடனும், தனது தாயை(அசுரகுல அரசன் விருஷபர்வாவின் மகள் சர்மிஷ்டை)விட மூத்தவனாகவும், தமது வாழ்வில் முன்பின்னாக மாறிவிட்ட பருவங்களால் எழும் எண்ணங்களை ஆராய்வதற்கான மனோபலத்துடன் தனிமையின் துணைக்கொண்டு, நேர்ந்த எல்லாவற்றையும் எதிர்கொண்டு, அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டவன். ஒருவகையில் தாத்தா முறையுடைய பிருகு முனிவரின் மகன் அசுரகுலகுரு சுக்கிராச்சாரியரே தான் அளித்த சாபத்தால் வருத்தமடைந்திருக்கலாம். தனது தாய், தந்தையுடன் பெரியன்னை(சுக்கிராச்சார்யார் மகள் தேவயானி) கொண்ட கோபத்தின் பலனாக பெற்ற சாபத்திற்கு எவ்விதத்திலும் காரணமில்லாதவன், தனது பால்யத்திலிருந்து இளமையை ருசிக்காமல் நிமிடத்தில் முதுமையடைந்த “புரு” எனக்கு மிகப்பிடித்த மஹாபாரத பாத்திரங்களில் ஒருவர்.

ஒவ்வொரு விநாடியாக கடந்து, ஒவ்வொரு பருவத்தை அடையும் இயல்பை கொண்ட எந்த ஒரு ஜீவராசியும் புருவின் அனுபவத்தை பெற்றதில்லை. ஒருவகையில் இது மரணத்தை ஏற்றுக்கொள்வதைவிட மிகக்கடினமான நிலை. தனது தாயை வெறுக்கும் தந்தையின் முதல் மனைவியான பட்டத்தரசி தேவயானியும் புருவின் நிலையறித்து கலக்கமடையும் நிலையிலிருந்தவன். தேகபிமானத்தால் உருவாகும்; சிற்றின்பத்தின் கருவாகும் காமத்தை சுவைப்பதைவிட, அதை கடந்து போவதன் பேரின்பத்தை அனுபவிப்பவனாக, இந்நிலையினை மிக எளிதாக ஏற்கிறான்.

புலன்களின் வழியே யயாதி பெண்ணை வேட்டையாடிக் கொண்டிருந்தான். புரு விசாரத்தால் புலன்களை புறந்தள்ளி தன்னை வேட்டையாடிக் கொண்டிருந்தான். காமவிளையாட்டுக்கள் கடந்த கால கனவாக மாற்றம் பெறுவதை உணர்ந்து நழுவும் நிகழ்காலத்தின் நிலையான அடையாளமான தன் மகனிடம் யயாதி மீண்டு வந்தபொழுது, பெறுவதை விட இழத்தலின் சுகத்தை உலகிற்கு மீண்டுமொருமுறை புரு உணர்த்திக் கொண்டிருந்தான். “புருவம்சம்” என்று சந்திரகுலமே பெருமையடையும் பெருநிலைப்பெற்றான்.

காலத்திற்கு உட்பட்டு காலத்தை கடந்து வாழும் புரு காலத்தின் ரசவாதத்தை கண்டுணர்ந்ததன் பயனாக, காலத்துடன் ஒரு பகடையாட்டத்தை தருமனுக்கும் முன்பே விளையாடி பார்த்தவன் என்றே எனக்கு தோன்றுகிறது. ஆமாம், பகடைக்காய்களும் காலத்தையே உணர்த்துகின்றன. எண்களை குறிக்கும் புள்ளிகள் பொறித்த நான்கு பக்கங்களையும் திசைகளாகவும், இருபுறங்களும் பகலிரவை உணர்த்தும் குறியீடாகவுமே அர்த்தம் கொள்ளப்படுகிறது. முன்னர் புரு காலத்துடன் பகடை விளையாட அரசபதவி பெற்றான், பின்னர் காலம் தருமனுடன் பகடை விளையாட அரசபதவி இழந்தான்.

இவனது(புரு) தியாகத்தினை முன்மாதிரியாக கொண்டுதான் புருவம்ச வழிதோன்றலான தேவ விரதன் தனது தந்தை சந்தனு(பிரதீபனின் மகன்), செம்படவ ராஜனின் மகள் சத்யவதி ஆகியோர்களது திருமணத்திற்க்காக பிரமச்சரிய விரதம் மேற்கொண்டு பிதாமகர் பீஷ்மராகிறார்.

இன்றளவும் பல தந்தையர்கள் தமது நலனுக்காக தனது புதல்வர்கள் அவர்களது இளமையினை பணயம் வைத்து ஈட்டும் பணத்தினை பயன்படுத்துபவர்கள் அனைவருமே யயாதி தான், அவர்களின் புத்திரர்கள் அனைவரும் சந்தேகமில்லாது “புரு” தான்.

ஆக, நமது முன்னோர்களின் வாழ்வியல் முறைகளே நமது வாழ்வாதாரங்கள். அதை நாம் எப்படியேனும் அறிந்திருக்க வேண்டும், அடுத்த தலைமுறைகளுக்கு அறிவிக்க வேண்டும். ஏனென்றால், அவைகள் தாம் எக்காலத்திற்குமான வாழ்வை வளப்படுத்தும் சத்தியம்...

எழுதியவர் : ரமணபாரதி (6-Jun-14, 11:27 pm)
பார்வை : 142

சிறந்த கட்டுரைகள்

மேலே