மஹாபாரதத்தை நேசிக்கிறேன்…

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய:

உலகம் மீண்டும் மீண்டும் வாசிப்பதும், நேசிப்பதும் மேலும், விமர்ச்சனத்திற்குட்படுத்துவது மற்றும் ஆய்வுக்குட்படுத்துவதும் மஹாபாரதத்தை தான் காரணம், “இங்கே இருப்பதை எல்லா இடங்களிலும் காணலாம், இங்கே இல்லாதது வேறு எங்கும் கிடையாது.” (மஹாபாரதம் - 1.56.34-35) இருபது வருடங்களுக்கு மேலாக மஹாபாரதம் தொடர்பான மற்றும் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பல்வேறு எழுத்தாளர்களின் எழுத்துக்களை படித்தும் சொற்பொழிவாளர்களின் பேருரைகளை கேட்டும் வருகிறேன். முதலில் எல்லோரையும் போல ராஜாஜி அவர்களின் “மஹாபாரதம்” அதன் பின் வாரியார் சுவாமிகளின் “மஹாபாரதம்” (புத்தகம் மற்றும் சொற்பொழிவு ஒலிக்கோப்பு) ஸ்ரீவில்லிபுத்தூரார் அருளிய “வில்லிபாரதம்” முழுவதும் (தெளிவுரை: ஸ்ரீநாராயண வேலுப்பிள்ளை, பூம்புகார் பதிப்பகம்) ஸ்ரீவிநோபாவின் “கீதைப்பேருரைகள்”, மகாகவி பாரதி அருளிய “பாஞ்சாலி சபதம்”, திரு.சோ அவர்களின் “மஹாபாரதம் பேசுகிறது” தொடர்ச்சியாக பாலகுமாரன் அவர்களின் “என் உயிர் தோழி” உள்ளிட்ட பல நாவல்கள், திரு.இந்திரா பார்த்தசாரதி அவர்களின் “கிருஷ்ணா…கிருஷ்ணா…”,அருணன் அவர்களின் “பூரு வம்சம்” பிறகு, நன்னிலம் ஸ்ரீபாபு தீட்சிதர் அவர்கள் மற்றும் அவரது வாரிசுகளின் ஸ்ரீவியாச பாரதத்தின் மூல-ஸ்லோகங்களுடன் கூடிய உபன்யாசங்கள், புலவர் கீரன் மற்றும் திருச்சி கல்யாணராமன் இவர்கள் இருவரின் வில்லிபாரத சொற்பொழிவுகள் மூலம் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முயன்றாலும், நடைமுறை பாரதமாக சில வருடங்களுக்கு முன்னால் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் “உப பாண்டவம்” படித்தபோது, இது போன்ற புத்தகங்கள் மேலும் என்ன என்ன இருக்கும் என்று தேடிப்பார்த்த பொழுது அங்கொன்றும் இங்கொன்றுமாக பலப்புத்தகங்கள் பாரதம் அடிப்படையில் புனையப்பட்டது கிடைத்தாலும் குறிப்பாக தேவ்தத் பட்நாயக் அவர்களின் “ஜெயம் மஹாபாரதம் ஒரு மறுபார்வை” மற்றும் குர்சரண் தாஸ் அவர்களின் “மஹாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்கை” (THE DIFFICULTY OF BEING GOOD) (இரண்டுமே விகடன் வெளியீடு) என்னை மிகவும் கவர்ந்தன. இதற்கிடையில் B.R.சோப்ரா வழங்கிய மஹாபாரதம் முழுத்தொடரின் குறுந்தகடுகள் (Moserbear) வெளியீட்டினை சிறுது…சிறிதாக பார்க்க முடிந்தது, இந்த தலைமுறைக்கான பாரதமாக விஐய் தொலைக்காட்சில் ஒளிபரப்பின் வாயிலாக மீண்டும் பரவலாக மக்கள் மத்தியில் மகாபாரத விவாதங்கள் நடைப்பெற்று கொண்டிருக்கும் தற்சமயத்தில் பிரபஞ்சன் அவர்கள் கல்கியில் எழுதிவரும் “காலந்தோறும் தர்மம்” மற்றும் ஜெயமோகன் அவர்கள் இணையத்தில் எழுதிவரும் வெண்முரசு (தற்போது முதல் பாகம் புத்தகமாக நற்றினை பதிப்பகம் வெளியிட்டுள்ளது) படித்த பொழுது பாரத்தின் நுட்பங்கள் புரிந்துகொள்ள முடிந்தது. தற்சமயம், மேற்காணும் எழுத்தாளர்கள் பலரும் பரிந்துரைத்த வியாசபாரதத்தின் அடிப்படையில் எழுதப்பெற்ற மிக முக்கியமான நான்கு புத்தகங்களை வாங்க நினைத்து இருவாரங்களுக்குள் கிடைத்தது, ஸ்ரீவியாச பகவானின் அருளென்றே கருதுகிறேன்.
அவைகள், வி.எஸ்.காண்டேகர் அவர்களின் “யயாதி”, பி.கே.பாலகிருஷ்ணன் அவர்களின் “இனி நான் உறங்கட்டும்”, எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களின் “இரண்டாம் இடம்” மற்றும் எஸ்.எல்.பைரப்பா அவர்களின் “பருவம்”, இவைகளில் “இனி நான் உறங்கட்டும்” என்ற பி.கே.பாலகிருஷ்ணன் அவர்களின் நாவலைப் படித்து வருகிறேன் படித்ததும் பகிர்வேன். இதில், பல எழுத்தாளர்கள் மஹாபாரதத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் பின்னரே புதினங்களை படைத்துள்ளார்கள். ஏன்? மஹாபாரதத்தை கற்க வேண்டும்… இசையை ரசிக்க இசையின் நுட்பங்களை அறிந்திருக்க தேவையில்லைதான். ஆனால், அறித்திருந்தால்!!! அவ்வாறே, வாழ்கையை வாழ வாழ்வின் ரகசியங்ளை உணராதவனும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறான்? அதே சமயம் உணர்ந்திருந்தால்… ஆம், வாழ்வின் ரகசியங்களையும் அதன் நுட்பங்களையும் கால காலமாக கற்றுத்தரும் தன்னிகரில்லா ஐந்தாவது வேதம் தான் மஹாபாரதம். பாரதத்தை என்னைப் போல் நேசிப்பவர்களுக்கு சிற்றுதவி புரியவே இதை எழுதுகிறேன். என்ன தேடினாலும், என்ன கற்றாலும், மகாபாரதத்தை முழுவதுமாக உணர்ந்துவிட முயல்வது கண்ணில்லாதவன் களிறு தொட்டுணர்ந்த கதை போல் தான். ஏனென்றால்…

“இங்கே இருப்பதை எல்லா இடங்களிலும் காணலாம், இங்கே இல்லாதது வேறு எங்கும் கிடையாது.” (மஹாபாரதம் - 1.56.34-35)

எழுதியவர் : ரமணபாரதி (6-Jun-14, 11:16 pm)
பார்வை : 362

சிறந்த கட்டுரைகள்

மேலே